மலையப்பனுக்கு மண்சட்டியில் நிவேதனம்

கதைகள்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே பீமன் என்ற குயவர் வசித்தார். மலையப்ப சுவாமியின் பக்தரான இவர், ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக உறுதி கொண்டார். ஆனால், ஏழ்மையின் காரணத்தால், எந்நேரமும் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலை. சனிக்கிழமைகளில்கூட கோயிலுக்குப் போக நேரம் கிடைக்காது. அப்படியே போனாலும் பெருமானை பூஜிக்கும் முறையும் தெரியாது. பெருமாளே நீயே எல்லாம் என்று சொல்லி வந்துவிடுவார். ஒருமுறை அவருக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. கோயிலுக்குப் போக நேரமில்லையே… பெருமாளை இங்கேயே எழுந்தருளச் செய்தால் என்ன என்று தோன்றியது. அவ்வளவில், களிமண்ணால் வேங்கடவனின் சிலையைச் செய்தார். பூக்கள் வாங்கி பூஜிக்க பணம் போதவில்லை. எனவே, வேலை செய்து முடிந்தபின் மீதமாகும் மண்ணையே சிறு சிறு பூக்களாகச் செய்து மண் பூமாலையாக்கி அதையே தான் செய்த பெருமாள் விக்ரகத்தில் சேர்ப்பித்து வணங்கினார்.

அவ்வூர் அரசரான தொண்டைமானும் பெருமாளின் பக்தர்தான். அவரோ, சனிக் கிழமைகளில் தங்கப்பூ மாலை அணிவிப்பார். ஒரு முறை இப்படி அணிவித்து விட்டு, மறுவாரம் வந்தார். அங்கே பெருமாளின் கழுத்தில் மண் பூமாலை தொங்கியது. கோவில் பட்டர்கள்தான் ஏதோ தவறு செய்கிறார்கள் என்று எண்ணினார் மன்னர். குழப்பத்தில் இருந்த அரசரின் கனவில் தோன்றிய பெருமாள் நடப்பதை உரைத்தார். உடனே, அந்தக் குயவரைச் சந்திக்கும் ஆசை அதிகமானது மன்னனுக்கு. குயவன் இல்லம் சென்ற தொண்டைமான், குயவனுக்கு வேண்டிய பொருளுதவியைச் செய்தார்.

குயவரோ, மண்பூமாலையை மனமகிழ்ந்து பெருமாள் ஏற்பதைக் கேட்டு மெய்சிலிர்த்தார். பொருள் வேண்டாம் என்றார். தன் பணியைத் தொடர்ந்தார். இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரை கெüரவிக்கும் வகையில், இப்போதும் திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் நைவேத்யம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *