இரவில் வந்தது யார்?.. அறிந்த போதோ..

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

satguru thyagaraja

“ஸ்வாமி ”

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !

எதிரே ஒரு வயதான தம்பதி !
அருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !,
மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..

” ..ஸ்வாமி …நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !..இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் !”
கம்மிய குரலில் , பேசினார் அவர்;

வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்றும் , பேச்சில் தெரிந்த ஆயாசம் ..இவையெல்லாவற்றையும் தாண்டி , அம்மூவரின் முக லாவண்யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய …அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது !

ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின் , மெலிதான புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ;

” அதற்கென்ன … பேஷாய் தங்கலாம் !…இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ !”
அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின் , அடுக்களையை நோக்கி , உரத்த குரலில் ,

” கமலா …குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..”
என்றார் ;

அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள் , அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன !

‘ யார் இவர்கள் ?’
” கமலா …”

தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ;
” கமலா …..இவர்கள் நமது விருந்தாளிகள் ..! .இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய் ! ”

தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே இயல்பாய் பேசினார் அவர் ;
‘ ….அடடா ..வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை .. !..இப்போது , .ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ?…பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் ‘

உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல் , புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் ;

போன வேகத்திலேயே ,அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள் , பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் ….
அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ;

” அடடா …எங்கே செல்கிறீர்கள் அம்மா ?……..எங்களுக்காக சிரமப்பட வேண்டாம் .! ….எங்களிடம் , வேண்டிய அளவு தேனும் , தினை மாவும் இருக்கிறது …..இரண்டையும் பிசைந்து ..ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் !”

அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை , வியப்புடனும் , தர்மசங்கடத்துடனும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர் ;….!
தயக்கத்துடனும் , சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள் , உணவுத்தயாரிக்கும் பொருட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் …

அன்று இரவு ,அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற …..
.தியாகராஜர் , அவர்களுடன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு , பின் , ஒரு கட்டத்தில் உறங்கி போனார் .. ..

.. பொழுது விடிந்தது !

காலைக்கடன்களை முடித்து விட்டு , கூடத்தில் அமர்ந்து , வழக்கம் போல கண்களை மூடியவாறு , ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார் .

” ஸ்வாமி .. ..! “..
எதிரே புன்னகையுடன் அந்த முதியவர் !
அருகே , அவரின் பார்யாளும் , மற்றும் அந்த இளைஞனும் …!

அந்த முதியவர் தொடர்ந்தார் ….;
” ரொம்ப சந்தோஷம் …..நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம் …..இரவு தங்க இடம் கொடுத்து ….வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து …அன்பாய் உபசரித்ததற்கு மிக்க நன்றி ..”

கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச ..
அருகே அந்த மூதாட்டியும் , இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர் ..

சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப ……
.தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார் …
அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க …
அவர்கள் செல்வதையே கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் ‘ சட்டென்று ‘ ஒரு தெய்வீக காட்சி இப்போது !

அந்த வயோதிகர் , ஸ்ரீ ராமனாகவும் .
அந்த மூதாட்டி , சீதையாகவும் ,
அந்த இளைஞன் , ஸ்ரீ அனுமனாகவும் தோற்றமளிக்க …..
அவருக்குள் இனம் புரியாத ஒரு பதைதைப்பு !
கண்கள் பனிசோர ..நா தழுதழுக்க .. … தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார் !
” என் தெய்வமே ….தசரதகுமாரா ….ஜானகி மணாளா ….நீயா என் கிருஹத்துக்கு வந்தாய் ?….. என்னே நாங்கள் செய்த பாக்கியம் …அடடா …..வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே … உன் காலை பிடித்து அமுக்கி , உன் கால் வலியை போக்குவதை விடுத்து , ..உன்னை தூங்க விடாமல் ..விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே …மகா பாவி நான் ! …..என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன் , ஒரு தாய் , தகப்பனாயிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம் !’

நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர் !
அப்போது அவர் திருவாயினின்று , அனிசையாய் ,

” சீதம்ம…..மாயம்ம…”

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

Leave a Reply