பாளை. அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றம்

செய்திகள்

தசரா விழாவையொட்டி, பாளையங்கோட்டை சிவன் கோயில் மேல ரதவீதியில் உள்ள அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் வியாழக்கிழமை அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல பாளையங்கோட்டையிலுள்ள முப்பிடாதி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவர் தெற்கு உச்சிமாகாளி அம்மன், தூத்துவாரி அம்மன், விஸ்வகர்ம உச்சிமாகாளி அம்மன், வடக்கு உச்சிமாகாளி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுஉலகம்மன், பழைய உலகம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் அம்மன்கள் வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

சப்பரங்கள் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, வெள்ளிக்கிழமை அதிகாலை கோபால சுவாமி கோயில் வளாகத்தில் அணி வகுத்து நிற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதையடுத்து அனைத்து சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோயில் முன் அணிவகுத்து நின்றன. அதைத் தொடர்ந்து ஆயிரத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. பின்னர் கோயில் கொடிமரத்தில் தசரா திருவிழா கொடியேற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

இதையடுத்து, அனைத்து அம்மன் சப்பரங்களும், அந்தந்த கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் அனைத்து அம்மன் கோயில்களிலும், அம்மன் கொலு இருக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

இதேபோல கொலுவிருக்கும் அம்மன்களுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.

தசரா திருவிழாவின் நிறைவு நாளான இம் மாதம் 18-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்.

சூரசம்ஹாரத்துக்கு சப்பரங்களில் அம்மன்கள் 17-ம் தேதி இரவே புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோயில் உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் தசரா திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

Leave a Reply