குலசேகரன்பட்டினம் தசரா ஸ்பெஷல்: திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

செய்திகள்

இத் திருக்கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சிக்காக அதிகாலை 4மணிக்கு நடை திறக்கப்பட்டது.காலை 5மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.காலை 7மணிக்கு யானை மீது கொடிப்பட்டம்  கோவிலிருந்து செல்லப்பா பட்டர் தலைமையில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியே பவனி வந்து பின் 9.15மணிக்கு கோவில் வந்தடைந்தது. 9.20 மணிக்கு மேளதாளத்துடனும் பஞ்சவாத்திய இசையுடனும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோஷத்துடன் வர, கொடியினை செல்லப்பா பட்டர் ஏற்றி வைத்தார்.

பின்னர் 16 வகை அபிஷேகம் நடைபெற்றது.பின் தர்ப்பைப்புல், பட்டு உடுத்தி மலர் அலங்காரத்துடன் 9.50க்கு ஷோடச தீபாராதனைகள் நடைபெற்றன

பின்னர் விரதமிருக்கும் பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து கார், வேன், டிரக்கர், மினி லாரி, லாரி, ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்திருந்த  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். கிராமங்களிலிருந்து வந்திருந்த பக்தர்களே அதிக அளவில் காணப்பட்டனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் காப்பு கட்டுவதற்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் பக்தர்கள் தங்கள் மதிய உணவை மாலை நேரத்தில் மரத்தடியில் இருந்து சாப்பிடுவதை காண முடிந்தது. பக்தர்கள் வந்திருந்த வாகன நெரிசல் காரணமாக குலசேகரன்பட்டினம், உடன்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அப்பாசாமி,குலசேகரன் பட்டினம் ஆய்வாளர் ஜேசுராஜசேகரன் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

காப்பு கட்டியதும் பக்தர்கள் வேஷமணிய உடைகள் வாங்க உடன்குடி பகுதியில் அதற்கான கடைகள் முன்பு குழுமியிருந்ததை காண முடிந்தது. சிலர் வேஷமணிந்து அம்மனுக்கு காணிக்கை பெறவும் துவங்கியிருந்தனர். இரவு துர்க்கை அம்மன் திருக் கோலத்தில் அம்மன் திருவீதி உலா கண்டு அருளினார்.

முன்னதாக வியாழக்கிழமை காளி பூஜையும் காப்பு கட்டுதலும் நடைபெற்றன. தினசரி இரவு 9மணிக்கு அம்மன் பல்வேறு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் வீதி உலா நடைபெறும்.பத்தாம் திருவிழாவான 17ஆம் தேதி தசரா திருநாளன்று காலை 10மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 11மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும்.

நள்ளிரவு 12மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரையில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் திருக்கோவின் முன்பாக எழுந்தருளி மகிஷாசுர வதம் நடைபெறும். பின்னர் மறுநாள் அதிகாலை 1மணியளவில் அம்மன் சூர சம்ஹாரம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் மேடையில் எழுந்தருளி சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும்.

News at:: www.dinamani.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *