மகாதேவியின் விசுவரூபம்!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

“அன்னை, அட்சர வடிவாகவே விளங்குகிறாள்’ என்று வேதங்கள், ஆகமங்கள், தேவி பராக்கிரமம், தேவி மகாத்மியம், ஸ்ரீதேவிபாகவதம், செüந்தர்ய லஹரி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலிய “சாக்த’ நூல்கள் அனைத்தும் குறிப்பிடுகின்றன.ஐந்தொழில்களையும் அணுவும் மாறாமல் இயக்கி வருபவள், பேரருள் சக்தி வாய்ந்த மாதா ஸ்ரீமகா திரிபுரசுந்தரி. இவள் மிகவும் மகிழ்வது, அக்ஷர வடிவாய் உள்ள தோத்திரங்களால்தாம்!

சர்வ மங்கள வடிவினளாகிய மகாதேவியை, “சமஸ்த ஜகதாதார காரணபூதை’ என்று வடமொழி துதிக்கும். ‘ஆதிபராசக்தியின் திருவருளாலேயே அடைதற்கரிய அரும்பெரும் பதவிகள் அனைத்தும் அடையலாம் என்றும், அவ்வன்னையே பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் கருணைக் கண்நோக்கம் செய்து படைப்பு போன்றவைகளைச் சிறப்புற நடத்துபவள்’ என்றும் இதன் பொருள் விரியும்.

முனிவர்களின் திருக்கூட்டம்

முன்னொரு காலத்தில் இறைவியின் இத்தகைய மகிமைகளை உணர்ந்த வசிஷ்டர், புலத்தியர் உள்ளிட்ட பல முனிவர்கள், பிரம்ம தேவனை நோக்கி, “”நாங்கள் தவம் செய்வதற்குரிய புண்ணிய பூமி ஒன்றை எங்களுக்குக் குறிப்பிட்டு அருள வேண்டும்” என்று வேண்டினர்.

சதுர்முகன், முனிவர்களின் கருத்திற்கிணங்கி, தருப்பை ஒன்றைச் சக்கரமாக வளைத்து பூமியில் உருட்டி, “”முனிவர்களே! இந்த நேமியைத் (சக்கரத்தை) தொடர்ந்து செல்லுங்கள். இது நிற்கும் இடமே நீங்கள் தவம் புரிவதற்குரிய இடம்” என்று கூறினார்.

முனிவர்கள் அதைப் பின்பற்றிச் சென்றனர். அது தங்கிய வனமே “நைமிச வனம்’ எனப்படும். முனிவர்கள் அங்கு ஒன்றுகூடி, திருவெண்ணீறணிந்து, அக்கமாலை சூடி, சிவத் தியானத்துடன் பல ஆண்டுகள், பரமேஸ்வரனையும்-பராசக்தியையும் துதிசெய்து “சத்திர யாகத்தை’ நடத்தி வந்தனர்.அக்காலத்தில், வியாசமுனிவரிடம் நான்மறை- ஆறங்கங்கள்- பதிணென் புராணங்களை ஐயந்திரிபறக் கற்ற சூத முனிவர் அங்கு எழுந்தருளினார். அவரைக் கண்ட முனிவர்கள் ஆனந்தம் கொண்டு, எதிர் சென்றழைத்து, உயர்ந்த பீடத்தில் அமர்த்தினர்.

“”அடியோங்கள் செய்த தவப்பயனால் தேவரீரை இங்கு தரிசிக்கின்றோம். ஆதிபராசக்தியின் அருள் விளையாட்டினை எங்களுக்குக் கூறியருள வேண்டும்” என்று வேண்டினர்.சூதமுனிவர், “”அருந்தவச் செல்வங்களே! அகில மாதாவின் சரித்திரமென்னும் கடலின் அளவு அளவிடற்கரியது. முன்னொரு காலத்தில், சிவ பராக்கிரமாகிய அஷ்டாங்க மூர்த்தச் சிறப்புகளை உங்களுக்குக் கூறியுள்ளோம். இப்போது நீங்கள் விரும்பிய சரிதத்தைச் சுருக்கி, “தேவி பராக்கிரமம்’ என்ற தேவியின் அஷ்டாங்க லீலைகளைச் சொல்கிறோம்” என்று ஆரம்பித்தார். இவ்வாறு அன்னை பராசக்தியின் லீலைகளை சூத முனிவர் கூறியதுதான், “தேவி பராக்கிரமம்’. இதை நவராத்திரி ஒன்பது நாள்களும் படித்தாலும், படிக்கக் கேட்டாலும் ஆதிபராசக்தியின் பேரருளை மிக எளிதில் பெறலாம்.

நவராத்திரி மகிமை

“சுபாகு’ என்பவர், சிறந்த தேவி பக்தர். இவருடைய மகள், “சசிகலை’ என்பவளும் அம்பிகையை ஆராதிப்பவளாக இருந்தாள். இவளுடைய “முறை மாப்பிள்ளை’யாகிய “சுதர்சனன்’ என்பவரும் ஆதிபராசக்தியின் அன்பர்தான். எனவே சுதர்சனனுக்கு தன் மகள் சசிகலையை மணம் முடித்து வைத்தார் சுபாகு.

இதையறிந்து வெகுண்டு வந்த “யுதாஜித்’ என்பவனையும், அவனது மகன் “சந்திரஜித்’ என்பவனையும் தேவியே பிரத்யக்ஷமாகி வதம் செய்தாள்.பிறகு அன்னை, சுதர்சனனை நோக்கி, “”நீ அயோத்தியை அடைந்து உன் குலத்திற்கேற்ப அரச நீதி நடத்தி, என்னை நாள்தோறும் மறவாது தியானித்து வருக! கிருஷ்ண பக்ஷ அஷ்டமி, நவமி, சதுர்த்தசி இவை எனக்குப் பிடித்தமான தினங்களாகும். நாள்தோறும் எனக்கு மூன்று கால பூஜை நடத்துக! வசந்த காலத்தில் வரும் நவராத்திரியிலும், சித்திரை, ஆடி, ஐப்பசி மாதங்களிலும் என்னை ஆகம விதிமுறைப்படி பூஜிப்பாயாக” என்றருளினாள்.அதன்பின்னர் சுதர்சனன், தன் நகருக்குச் சென்று, தேவியை சிம்மாசனத்தில் விக்கிர ரூபமாக எழுந்தருளச் செய்தார். பூஜைகளைச் சிறப்பாக நடத்தினார். திறமையாக நீதி பரிபாலனம் செய்தார்!

அம்பிகையின் மகிமைகளை தேசம் எங்கிலும் பரவச் செய்தார்! இப்படி சுதர்சனனாலும், சுபாகுவினாலும் அனுஷ்டிக்கப்பட்டதுதான் நவராத்திரி பூஜை. இந்த வரலாற்றை நைமிச வனத்தில், முனிவர்கள் குழாத்துக்கு சூத முனிவர் எடுத்துரைத்தார். நவராத்திரி ஒன்பது நாள்களிலும் முறையே துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை மும்மூன்று நாட்களுக்கு வழிபட்டால் இக வாழ்விலும் சுகப்பட்டு, முக்தியையும் அடையலாம் என்கிறது, “தேவி பராக்கிரமம்’.

நவராத்திரி விரதத்தை எண்ணில்லாத தேவர்கள் கடைபிடித்து இஷ்ட சித்திகளை அடைந்துள்ளனர். ஸ்ரீராமபிரான், நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துத்தான் இழந்த சீதா தேவியையும், ராஜ்யத்தையும் திரும்பப் பெற்றார். அதேபோல் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் துர்க்கா தேவியை பூஜித்து திருவருள் பெற்ற பேறுடையவர்!

மகாதேவியின் விஸ்வரூபம்

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாகிய அன்னை பராசக்தி, ஓம்கார வடிவத்தில் உள்ளாள். “இவளே ஞானத்தின் வடிவம்’ என்று அறிஞர்கள் கூறுவர். அன்னை பராசக்தி தன்னிச்சையாய் எடுத்த “விசுவரூபம்’ எவ்வாறு இருந்தது என்பதை சாக்த நூல்களில் காணலாம். சுவர்க்கமே அவளது தலையாகவும், ஆகாயமே கொப்பூழாகவும், சூரியன்- சந்திரன்- நெருப்பு ஆகியன மூன்று கண்களாகவும், எட்டு திசைகளும் செவியாகவும், பாதாளமே திருவடியாகவும், நட்சத்திரங்களே கொத்தாகத் தரித்த முத்து மாலையாகவும், ஆகாயத்தில் வசிப்பவர்களாகிய தேவர்கள் தோள்களாகவும், சமுத்திரமே ஆடையாகவும், சப்த மேகங்களும் கூந்தலாகவும், வாயுவே சுவாசமாகவும், ஏனையவை பிற உறுப்புகளாகவும் திவ்வியத் திருமேனி தாங்கியுள்ளவளாகக் காட்சி தருகின்றாளாம் அம்பிகை.

விசுவரூபம் என்பது அன்னை பராசக்தி, இச்சா சக்தி வடிவாய் எடுத்த தேகம். இயற்கையாகவே அன்னைக்கு நாம ரூபங்கள் இல்லை என வேதாகமங்கள் கூறுகின்றன. அவள் அக்ஷர வடிவாய்த் திகழ்பவள். ஆயினும், பக்தர்களுக்கு திருவருள் செய்யும் பொருட்டும், துஷ்டர்களை அழிக்கவும் அவள் கொள்ளும் திருமேனிகள் கணக்கற்றவை!

நவராத்திரி ஒன்பது நாள்களிலும் அன்னையின் தோத்திரங்களைப் பாடித் துதிப்பதனாலேயே அவளது திருவருளை எளிதில் பெறமுடியும் என்பது திண்ணம்.

– இடைமருதூர் கி. மஞ்சுளா

Read more :: www.dinamani.com

Leave a Reply