தமிழகம் இருளின் பிடியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்

செய்திகள்

பண்ருட்டி திருவதிகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் உள்ளது. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலுக்கு முற்பட்டது.

முதல்முதலில் தேர் உருவானது, தேவாரம் பாடப்பட்டது இத்தலத்தில்தான். அட்ட வீரத் தலங்களில் (திரிபுரம் எரித்தல்) சிறப்புடையதும், நாயன்மார்களால் பாடல் பாடப்பெற்றது.

இத்தலத்தில் தேர் உருவானதால், இக்கோயிலின் கருவறை விமானம் தேர் போன்ற வடிவில் அடிப்பகுதியில் இருந்து சுதைகளால் அமைக்கப்பட்டுள்ளது.

ஆன்மிகச் சிறப்புகளையும், வரலாற்றுப் பெருமைகளையும் கொண்ட இக்கோயில் மின் வெட்டு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளதை அறிந்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேசன் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புதிய ஜெனரேட்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார்.உத்தரவாதக் காலம் முடிவதற்குள் ஜெனரேட்டரில் ஏற்பட்ட சிறு பழுதை சரி செய்ய, உரிய கடைக்கு தகவல் அளிக்காமல், இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் வெளியாள்களை வைத்து ஜெனரேட்டரை பிரித்து வேலை செய்ததில் அதில் இருந்த சில முக்கிய பாகங்கள் சேதம் அடைந்து மீண்டும் பொருத்த முடியாமல் போனது.

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டின்போது, இக்கோயில் இருள் மண்டி கிடந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

இதை பாதிக்கப்பட்ட பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்ததை தொடர்ந்து இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் ஜெனரேட்டரை பழுது நீக்க அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

பழுது நீக்க அனுப்பப்பட்ட ஜெனரேட்டர் 5 மாதங்கள் ஆகியும் கோயிலுக்கு திரும்ப வரவில்லை. கோயிலுக்கு சொத்துக்கள் இருந்தும், கட்டளைதாரர்கள் இருந்தும், அன்றாடம் நடக்க வேண்டிய 6 கால பூஜையை கூட முறையாக செய்வதில்லை. இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்டுகொள்வதும் இல்லை.

இது குறித்து இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் வி.பாலகிருஷ்ணன்: “ஜெனரேட்டரை பழுது நீக்க புதுச்சேரிக்கு அனுப்பியுள்ளோம். இதற்கு தேவையான பாகங்கள் கிடைக்கவில்லை. மேலும் ரூ. 50 ஆயிரம் செலவாகும்’ என தெரிவித்துள்ளனர் என கூறினார்.

செயல் அலுவலர் கே.நாகராஜன் கூறியது: “ஜெனரேட்டர் பழுது நீக்க சென்று 3 மாதமாகலாம், தொடர்ந்து இயங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், நிறைய பாகங்கள் மாற்ற வேண்டும் என தெரிய வருகிறது. இதை பழுது நீக்க நன்கொடையாளர்களை தேடி வருகிறோம்.

பூஜைகள் நடப்பதில் குறையிருந்தால் எனக்கு எழுத்து மூலம் புகார் அளிக்கலாம்’ என கூறினார்.

https://www.dinamani.com/edition/Story.aspx?artid=324820

Leave a Reply