யோக நிலையில் அருளும் இராமர்!

செய்திகள்
ramar - 1

ராமர் தனது திருக்கரங்களில் எந்த ஆயுதங்களையும் இல்லாமல் வலது கை சின் முத்திரையுடன் யோக நிலையில் காட்சி தரும் அபூர்வ திருத்தலத்தை பற்றி பார்க்கலாம்.

நெடுங்குணம் எனும் ஊரில் மிகவும் பழமை போற்றும் ராமர் கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் மிகவும் சிறப்பு பெற்றவராக கருதப்படுகிறார். சன்னதியில் ராமபிரான் தனது கோதண்டம் எதுவும் இல்லாமல் அமர்ந்த நிலையில் தனது கண்களை முடியவாறு யோக நிலையில் காணப்படுகிறார்.

தனது திருக்கரங்களில் எந்த ஆயுதங்களையும் இல்லாமல் வலது கை சின் முத்திரையுடன் யோக நிலையில் காணப்படுவது மிகுந்த அபூர்வ திருக்கோலம் ஆகும்.

temple - 2

இதனால் இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் ” யோக ராமர்” என்று பெருமை போற்ற அழைக்கப்படுகிறார்.
ராமர் அருகே சீதா பிராட்டி அமர்ந்த நிலையில் தாமரை மலர் ஏந்தி காட்சி தருகிறார். லக்ஷ்மணன் ராமருக்கு வலது புறம் அஞ்சலி செலுத்திய வண்ணம் திருக்கோலம் கொண்டு இருக்கிறார்.

ராமனும், சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சி தர, அவர்கள் எதிரே ஹனுமன் ” பிரஹ்மா சூத்திரம்” படித்தவாறு காட்சி கொடுப்பது கூடுதல் சிறப்பை இந்த ஸ்தலத்திற்கு சேர்கிறது.

ஸ்தல புராணம் படி ராமர் அயோதி திரும்பும் பொழுது, சுக பிரஹ்ம ரிஷிக்கு காட்சி கொடுத்து இந்த திருக்கோவிலில் தங்கி அருள்புரிந்ததாக கூறப்படுகிறது.

மலையே இறைவனாகத் திகழும் திருத்தலம். சைவம் வைணவம் செழித்தோங்கும் பூமி. தமிழகத்தில் தனியே ராமபிரானுக்கென அமைந்துள்ள பிரம்மாண்ட திருக்கோயில்!

 சிவபெருமானிடம் ஞானம் வேண்டி சுகப்பிரம்மரிஷி தவமியற்றிய பூமி.
 சிவபெருமானின் ஓலைச்சுவடியை ராமர் பெற்ற தலம்.

ramar temple - 3

 கிளியாறு உற்பத்தியாகும் மலையை கொண்ட தலம். செஞ்சியை ஆண்ட அச்சுதராமபத்ர நாயக்கர் எழுப்பிய கோயில். விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட பலரும் திருப்பணி செய்து மகிழ்ந்த கோயில்.

ராமபிரானும் முருகப்பெருமானும் வீதியுலா வரும் ஊர்! நம்பியவரைக் காத்தருளும் ராமபிரான் வாழும் திருக்கோயில் என பல்வேறு சிறப்புக்கள் கொண்ட திருக்கோயிலாகத் திகழ்வது, திருவண்ணாமலை மாவட்டம் “நெடுங்குணம் ராமபிரான்’ திருக்கோயில்.
 
பராசரர்-மச்சகந்திக்கு மகனாகப் பிறந்தவர், வேதவியாசர். வேதவியாசர்- கிருதாசி என்ற தம்பதியினருக்கு மகனாகத் தோன்றியவர் சுகப்பிரம்மரிஷி. சுகம் என்பதற்கு கிளி என்று பொருள். கிளிமுகம் கொண்டவராகத் திகழ்ந்ததால், சுகர் என்று அழைக்கப்பட்டார்.

 நாரதரின் ஆலோசனைப்படி, ஞானம் பெற நெடுங்குன்றத்தில் மலையாக விளங்கும் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். சிவபெருமான் காட்சியருளி ஞானம் தந்தார். அதோடு ஓர் ஓலைச்சுவடிக் கட்டினை அவரிடம் தந்து, “இலங்கையில் ராவண வதம் முடித்து ராமன் வரும் போது அவரிடம் தர வேண்டும்’ என்று பணித்தார்.

sugar
sugar

 அதன்படி, ராமபிரான் நெடுங்குணம் வந்தபோது, இச்சுவடிக்கட்டினை அவரிடம் தந்தார் சுகப்பிரம்மரிஷி. இத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் ராமபிரானும், சீதாப்பிராட்டியும் காட்சிதர, அருகே லட்சுமணன் நின்றிருக்க, அனுமன் சுவடிக்கட்டினைப் படித்துக் காட்டினார் என்பது வரலாறு

இந்த வரலாறே இன்று கருவறையில் காட்சியளிக்கின்றது.
 தொன்மையான இத்திருக்கோயில் முகமதியர் ஆட்சியில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தது. அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் (கி.பி.1296) மாலிகாபூரின் வருகையை முன்கூட்டியே அறிந்த ஊர் பெரியவர்கள் அனைத்து சிலைகளையும் பூமிக்குள் புதைத்து வைத்தனர்.

அது தெரியாமல் அடுத்த தலைமுறையில் வீடு கட்ட பூமியைத் தோண்டியபோது பல்வேறு சிலைகள் கிடைத்தன. இன்னும் எத்தனையுள்ளன என்பது தொல்லியல் ஆய்வுகளும், வருங்காலமுமே பதில் கூற இயலும்.

சிதிலமடைந்த பழைய கோயில் இடம் மாறி, மன்னர்கள் காலத்தில் தற்போதுள்ள பிரம்மாண்ட இடத்தில் அமைக்கப்பட்டது.
 இத்தலம் குறித்து செந்தமிழ்ப் பாவாணர் நெ.ப.சுந்தரேசன் எழுதிய நெடுங்குன்றம் சிவனார் போற்றித் திருப்பதிகம் மற்றும் நெடுங்குன்றம் ஸ்ரீராமன் தலவரலாற்று பதிகமும் தலவரலாற்றைக் கூறுகின்றன.

 இத்தலத்து சிவபெருமானின் பெயர் தீர்க்காசலேஸ்வரர். தீர்க்கம் என்பதற்கு – நெடு என்றும், அசலம் என்பதற்கு மலை, குன்றம் என்றும் பொருள் வழங்கப்படுகின்றது.

நெடுகுன்றமாக இறைவன் விளங்குவதால் இத்தலம் நெடுங்குன்றம் என வழங்கப்பட்டது. இறைவனே மலையாக வாழும் நெடுங்குன்றம் என்ற இயற்பெயர் மருவி, நெடுங்குணம் என வழங்கப்படுகின்றது.

 ராமர் கோயில் எதிரே தீர்க்காசலேஸ்வரர் கோயிலும், பின்புறம் நெடுங்குன்றம் மலையும் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளன. சுகர் தவமியற்றிய மலையான இதிலிருந்து உற்பத்தியாகும் ஆறு, கிளியாறு என்று வழங்கப்படுகிறது.

kiliyaru - 4

 நெடுங்குணம் சாலையோரத்தில் பிரம்மாண்டமாக ராமபிரான் ஆலயமும், எதிரே தீர்க்காசலேஸ்வரர் ஆலயமும், சிவபெருமான் வாழும் மலையும் காட்சி தருகின்றன. சுமார் எண்பத்தேழாயிரம் சதுரஅடி பரப்பளவில், ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு திசைகளிலும் ராஜ வீதிகளும் அமைந்துள்ளன.
 105 அடியில் ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. கோபுர வாயிலின் புடைப்புச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனைக் கடந்து பலிபீடம், கொடிமரம் அமைந்துள்ளன.

வலதுபுறம் வாகன மண்டபம், தென்புறம் பதினாறுகால் ஊஞ்சல் மண்டபம், மடைப்பள்ளி கட்டடம் அமைந்துள்ளன. இதனையடுத்து 65 அடி கிளி கோபுரம் அமைந்துள்ளது.

இதன் உள்புறம் கலைநயம் கொண்ட புராணத்தை வலியுறுத்தும் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் கருவறை முன்மண்டபத்தில் குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் கல் திருமேனிகள் அமைந்துள்ளன.

திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.
 கருவறைக்குள் மூலவரான ராமபிரான் அமர்ந்த கோலத்தில், மாலை நறுந்துழாய் மார்பு. திரண்ட தோள்கள், மாணிக்கமணிக் கழுத்து, செவ்விதழ், மலர்ந்த முகம் கொண்டு, பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.

இடக்கரம் முழங்காலைப் பதித்திருக்க, வலக்கரத்தை ஞான முத்திரையோடு மார்பில் வைத்துள்ள அழகு காணக்கிடைக்காதது. அருகே அன்னை சீதையும் அமர்ந்திருக்க, வலதுபுறம் லட்சுமணன் நின்று இருக்க, எதிரே அனுமன் ஓலைச்சுவடியைப் படிக்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது

இக்கருவறையைச் சுற்றிவர, சிறிய பிரகாரம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. இதே அமைப்பு புதுச்சேரி அருகே திருப்புவனையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 சுவாமி சந்நிதியின் வலதுபுறம் செங்கமலவல்லித் தாயார் சந்நிதி தனியே அமைந்துள்ளது. கருவறை மண்டபத்தில் துவாரபாலகிகள் தண்டு ஊன்றி ஆணுக்கு நிகர் பெண்கள் என காவல் நிற்க, கருவறைக்குள் அன்னை செங்கமலவல்லித் தாயார் கருணை பொழியும் கோலத்தில் காட்சி தருகின்றார்.

 இவ்வாலயத்தின் அடியாரான சோமசுந்தரம் என்பவர் திருக்கோயிலுக்கு சிறுசிறு தூய்மைப் பணிகளையும் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கிளிகோபுரத்தில் முளைத்திருக்கும் செடிகளை அகற்ற கோபுரம் மீது ஏறிய நிலையில் கீழே விழுந்து மண்டை பிளந்தது.

மருத்துவர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில், ராமபிரானின் அருளாற்றலால் இன்று பூரண குணமடைந்து கோயில் பணியாளராகத் தொண்டு செய்து வருகிறார். இதுபோன்று, இன்னும் சில நிகழ்வுகளைக் கூறுகின்றனர். ஆக, தன்னை நம்பி வரும் பக்தர்களைக் காப்பவர் என்பதற்கு நிகழ்காலச் சான்றாக இதைக் கூறலாம்.
 
இந்திரவிமானத் திருவிழாவில் ஸ்ரீராமபிரான் மலையை வலம் வரும் விதமாக ஜகநாதபுரம், அரசம்பட்டு முதலிய ஊர்கள் வழியே வீதியுலா நடைபெறும். இதே நாளில் இத்தலத்து பழைமையான தீர்க்காசலேஸ்வரர் திருக்கோயிலின் முருகப்பெருமானும் வீதியுலா வருவது கூடுதல் சிறப்பு.

ஒரே நாளில் முருகப்பெருமானையும், ராமபிரானையும் வழிபடுவது அரிதான விழாவாகும். ஆண்டுதோறும் பங்குனி அல்லது சித்திரையில் வரும் ஸ்ரீராமநவமியையொட்டி பத்து நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஏழாம் நாள் தேர்த்திருவிழாவும், பத்தாம் நாள் இந்திரவிமானத் திருவிழாவும் முக்கியமானவையாகும்.
 
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்தில், திருவண்ணாமலை – வந்தவாசி மற்றும் போளூர் -வந்தவாசி வழித்தடத்தில், நெடுங்குணம் திருத்தலம் அமைந்துள்ளது.

Leave a Reply