திருவாதிரை… காரண காரியம்!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
natarajar - 1

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன

பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

ஆர்த்ரா = திருவாதிரை

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா
எனப்படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்
கிருஷ்ணனுக்கு – ரோகிணி
முருகனுக்கு – விசாகம்
இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.

ஆனால் பிறப்பே எடுக்காத
சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவபெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதிதேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

“திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி”

திருவாதிரை களி & கூட்டு

பட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகு வெட்டி பிழைத்து வந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகை குணத்தை பெருமைப்படுத்த ஈசனே அவர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார்.

வீட்டில் ஒன்றும் இல்லாவிட்டாலும், இருந்த கொஞ்சம் அரிசி மாவையும், வெல்லத்தையும் வைத்து சேந்தனின் மனைவி களியாக சமைத்தார். இருக்கும் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டும் செய்து சாப்பாடு போட்டார். மறுநாள் தில்லை (சிதம்பரம்) ஆலயத்தில் இறைந்து கிடந்த களியை கண்டு அர்ச்சகர்கள் பதறினர். களி சிந்திய வழியை தொடர்ந்து சென்ற அவர்கள் சேந்தனாரின் வீட்டை அடைந்து, நடந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இது நடந்தது ஒரு மார்கழி மாதம் ஆருத்ரா [திருவாதிரை] நக்ஷத்திரத்தின் போது. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய புனித நாள். இன்றும் ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து, நடராஜனுக்கு நிவேதனம் செய்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.

களியும் கூட்டும் செய்து நடராஜனுக்கு நிவேதனம் செய்து, கோயிலுக்குப் போய் நடராஜனை சேவித்து, அவனது அருளாசிகளைப் பெறுவோம்.

Leave a Reply