பக்தியும்.. பச்சைக்கல்லும்..!

செய்திகள்
e0aeaae0ae95e0af8de0aea4e0aebfe0aeafe0af81e0aeaee0af8d e0aeaae0ae9ae0af8de0ae9ae0af88e0ae95e0af8de0ae95e0aeb2e0af8de0aeb2e0af81

பெருமாளின் கொண்டை அளவு பொருத்தமாக அமைந்ததில் வேங்கடாத்ரி சுவாமிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனவே அதைச்செய்து விட முயற்சிகள் மேற்கொண்டார்.

அவரோ அன்றாடம் (பிச்சையெடுத்து) உஞ்சவ்ருத்தி செய்து வாழ்பவர் அவரால் எப்படி முடியும் என்ற சந்தேகம் முதலில் எழுந்தாலும், முயன்றால் முடியாதது இல்லை என முடிவுக்கு வந்தார்.

அன்றாடம் பத்து ரூபாய்க்கான திரவியம் கிடைக்கும் வரை நேரம் காலம் பார்க்காமல் வீதிகள்தோறும் உஞ்சவ்ருத்தி செய்தார். இப்படிச் சேரும் திரவியத்தைக் கொண்டு பெருமாளின் விருப்பத்தை நிறைவேற்ற உறுதி கொண்டார்.

ஆகவே தினமும் பத்து ரூபாய் கிடைக்கும்வரை தான் பட்டினியாக இருப்பது எனத் தீர்மானித்தார். சில நாட்கள் கிடைத்தது. பல நாட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அப்போது அவரின் முக்கியச் சீடர்கள் சிலர் தங்களால் ஆன பொருளுதவியைச் செய்தனர். அதன் மூலம் புதுகிரீடம் தயாராகும் பணி நடந்து வந்தது. அப்போது, இந்த புதிய கொண்டையில் பதிக்க ஒரு அங்குல அளவில் சதுர வடிவ மரகதக்கல் (பச்சைக்கல்) ஒன்று தேவைப் பட்டது.

வேங்கடாத்ரி சுவாமி அதைப்பெற பல வழிகளிலும் முயன்றார். அப்போது அரங்கன் அவர் கனவில் மீண்டும் தோன்றி, கல்கத்தாவில் உள்ள வைர வியாபாரி ஒருவரின் வீட்டில் வடக்கு மூலையில் உள்ள இரும்புப் பெட்டியில் கொண்டையில் பதிக்கத் தேவையான மரகதப் பச்சைக்கல் இருப்பதாகவும், அதை வேண்டிப் பெறுமாறும், அந்த வைர வியாபாரியின் பெயர் மாதவசேட் என்றும் தெரிவித்தாராம்.

இதையடுத்து சுவாமியின் பக்தர்களில் ஒருவரான காசிதாஸ் சாவ்கார் என்பவர் மாதவசேட்டின் கல்கத்தா விலாசத்தைப் பெற்று மரகதப் பச்சையை அரங்கனுக்காகக் கேட்டுக் கடிதம் எழுதினார்.

மாதவ சேட் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ந்தார். அரங்கனே தன் கொண்டையில் வைக்க நம்மிடம் மரகதக் கல்லைக் கேட்டிருக்கிறானே என்று வியந்தார். ஆனால் தன்னிடம் அதுபோன்ற மரகதக்கல் இருப்பது பற்றி அவர் அறியாதவராக இருந்தார்.

பின்னர் பெருமாள் இல்லாததை கேட்டிருக்க மாட்டார் என்ற தைரியத்தில் தன் தந்தை பயன்படுத்தி வந்த பழைய நகைகள் இருந்த இரும்புப் பெட்டியில் தேடியபோது, தனது தந்தையால் வைக்கப்பட்ட மரகதக் கல்லைக் கண்டெடுத்துவிட்டார்.

அவருக்கோ, அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கோ அந்தக் கல் இருந்த விபரம் அன்று வரை தெரியவில்லை .

இதை அரங்கள் அறிந்து சொன்னது கல் அவனுக்குச் சொந்தம் என்பதாலன்றோ என்று உணர்ந்து மெய்சிலிர்த்தனர். அன்றே கல்லை உடனடியாக அனுப்பி வைத்த மாதவ சேட் கூடவே தன்னுடைய பங்காக ஆயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைத்தார். (அன்றைய ஆயிரம் ரூபாய் இன்றைய மதிப்பில் பல லட்சங்களுக்குச் சமம்) கொண்டை தயாராகி வந்தது.

ஆனால் திடீரென கொண்டையைச் செய்து வந்த பொற்கொல்லனுக்குப் பேராசை வந்தது. அவன் மாதவ சேட் அனுப்பிய விலை உயர்ந்த மரகதக் கல்லை ஒளித்துவிட்டு அதற்கு பதிலாக, அதேபோன்ற தோற்றம் கொண்ட சாதாரணப் பச்சைக்கல் ஒன்றை வைத்து விட்டான், இப்போதும் அரங்கன் விடவில்லை.

வேங்கடாதரி சுவாமியின் கனவில் தோன்றி பொற்கொல்லன் கல்லை ஒளித்த விபரத்தைத் தெரிவித்து விட்டார். தன் சீடர்களோடு பொற்கொல்லனைச் சந்திக்கச் சென்ற வேங்கடாத்ரி சுவாமியைக் கண்ட பொற்கொல்லன் முதலில் தனக்கு எதுவுமே தெரியாது என சாதித்தான்.

ஆனால் ஊர்பெரியவர் அப்பாசாமி நாயுடுவும் மற்றும் சிலரும் அவனை மிரட்டி விசாரிக்கவே, கல்லை மாற்றியதை ஒப்புக் கொண்டு அதைத் திரும்பக் கொடுத்தான்.

உண்மையான மரகதக் கல் பதிக்கப்பட்டுப் பாண்டியன் கொண்டை தயாராகி அரங்கனுக்குச் சமர்ப்பிக்க எடுத்துச் செல்லப்பட்டது. தன் சீடர்களுடன் கொண்டையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார் வேங்கடாத்ரி சுவாமிகள்.

திருவரங்கத்தில் மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசி பரமபத வாசல் திறப்பு நாளில் (ருத்ரோத்காரி ஆண்டு) 1863ல் அந்தப் பாண்டியன் கொண்டை அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றளவும் அந்தப் பாண்டியன் கொண்டை முக்கிய தினங்களில் மட்டுமின்றி வைகுந்த ஏகாதசி அன்றும் நம்பெருமாளை அலங்கரித்து வருகிறது

Leave a Reply