சிதம்பரரகசியம்

செய்திகள்

” ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்று அனைத்து அருளாளர்களும் உரைத்துள்ளனர். அந்த ஆசைகள் நீங்காதவரை” ஆனந்தம்’ என்பதை அனுபவிக்கவே முடியாது. மண், பெண், பொன்னின் மூலம் இன்பம் கிடைப்பதாகப் பலர் எண்ணுகிறோம். ஆனால் இந்த  இன்பங்கள் நிலைப்பதில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சியில், இன்பங்களாக நாம் கருதிய விஷயங்கள்பல, நீர்மேல் குமிழ்களாக மறைந்து விடுகின்றன. மேலும் மரணம் என்பது ஆண்டியென்றோ,அரசனென்றோ

வேறுபாடு பார்க்காமல் எந்தப் பொழுதிலும் தீண்டிவிடும். மரணத்துக்குப் பின் நாம் செய்த புண்ணிய – பாவங்களைத் தவிர வேறு எதுவுமே நம்மோடு வரப் போவதில்லை. இந்த இரண்டும், நமது மறுபிறவிக்கும் காரணமாய் அமைகின்றன. இதனால்தான் உலகியல் இன்பங்களைச் “சிற்றின்பம்’ என்றிகழ்கின்றனர் மேலோர். எனவே அழியாத ஆனந்தத்தை அடைய வேண்டியது அவசியம். அந்த நிலைத்த ஆனந்தம் எதிலுள்ளது…?அது’ பரமாத்மாவை அடைவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்’ என்பதே அருளாளர்களின் அறிவுரை. பரமாத்மாவை அடைவது மட்டுமல்ல, அதற்காகச் செல்லும் பாதையே ஆனந்தகரமானதுதான்!

“ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்ற மகான்கள், ஆண்டவன் மீது ஆசை வைப்பதை மட்டும் வலுவாக ஆதரிக்கின்றனர். “ஹேசிஹேசிமாஜஆஸ! ஜன்ம

ஜன்மீம்துஜாதாஸ’ என்று பாடுகின்றார் துகாராம் சுவாமிகள். “எனக்கு ஒரேயொரு ஆசைதான் எப்போதும் உள்ளது; உன் பக்தனாக எல்லாப் பிறவிகளிலும் நான் பிறக்க வேண்டுமென்பதே அது ‘என்பது அவ்வரிகளின் பொருள். பாருங்கள்! “பிறவாமை’ என்ற நிலையை அடைவது மட்டுமே ஆன்மீகத்தின் உச்சம் என்பது உண்மைதான் என்றாலும்,”இறையடியாராகப் பிறக்க முடியுமெனில் எத்தனை ஜன்மங்கள் வேண்டுமானாலும் மண்ணில் பிறக்க விரும்புகின்றோம்’ என்பதே பக்தர்களின் இதயநாதமாக இருக்கின்றது.

ஸ்ரீநடராஜப்பெருமானின் குனித்தபுருவத்தையும், கொவ்வைச் செவ்வாயையும், பனித்த சடையையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணீற்றையும்,

இனித்த முடைய எடுத்த பொற்பாதத்தையும் பார்த்துப் பார்த்து உருகிய அப்பர் பெருமான், “மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்று அடித்துச்

சொல்கின்றார்.

பிறவாமை எனும் வரத்தினை, ஊர்த்துவ தாண்டவமாடும் பரமேஸ்வரனிடம் யாசித்த காரைக்கால் அம்மையார், “ஒருவேளை நான் மறுபடி பிறக்க வேண்டுமெனில், உன்தாளிணைகளை மறவாமல் இருக்க வேண்டும்’ என்று இறைஞ்சுகிறார்.

உண்மையான பக்தர்கள், பிறப்பெடுப்பதைக்கூட” ஆனந்த அனுபவமாகவே’ கருதுகின்றனர். ‘மனித்தப்பிறவி’ என்று வலியுறுத்திய அதே அப்பரடிகள்,”புழுவாய்பிறக்கினும் புண்ணியா!  உன்னடி என் மனத்தேவழுவாதிருக்கவரம் தரவேண்டும்’ என்றுபாடி, சிவபெருமான்மீது, தான் வைத்துள்ள பேரன்பை வெளிப்படுத்துகிறார். “எனக்கு நரஜன்மம் வாய்க்காமல், புழுஜன்மம் கிடைத்தாலும் பரவாயில்லை; ஈசனே! உனது திருவடிகளை மறவாத புழுவாக நான் இருந்தால் போதும் ‘என்கிற போது அப்ப ரடிகளின் அன்புள்ளம் இமயமாய் உயர்ந்திருப்பதை உணரமுடிகிறதல்லவா?

“ஹேசிமஜகடோஜன் மஜன்மாந்தரீம்! மாகணே ஸ்ரீஹரிநாமதுஜே’ என்று பாடியுள்ளார் நாமதேவசுவாமிகள். “”இறைவனே! எனக்கு எத்தனைப் பிறவிகளை வேண்டுமானாலும் கொடு! ஆனால் எல்லாப் பிறவிகளிலும் உன் திருநாமங்களைச் சொல்பவனாகவே ஆக்கு”என்பதே அவர் கேட்கின்ற ஒரேவரம்.

எது இந்த அடியார்களை இப்படியெல்லாம் ஏங்க வைக்கிறது…? வேறொன்றுமில்லை! சாதாரண மனிதர்கள், புலன்களால் கட்டுண்டு கிடக்கின்றனர். அந்தப் புலன்களால் நுகரப்படும் விஷயங்களே இன்பம் என எண்ணி, “மாயை’யினால் தடுமாறுகின்றனர். அந்த இன்பங்களோ கழுவப்படும் மீன்களில் நழுவிப் போகும் மீன்கள் போல் துள்ளி மறைகின்றன. அப்போது,” ஏன்பிறந்தோம்?’ என்று நொந்து,  நொந்து, நோயில் விழுந்து, பாயில்படுத்து, துவைத்தெடுக்கப்பட்டு சவமாகிப் போகின்றனர். பரிதாபம்!

ஆனால் மகான்களோ புலன்களை சிற்றின்பத்தின் பாதையில் செல்ல விடுவதேயில்லை. அவர்கள், தங்கள் மனதால் இறைவனையே சிந்திக்கின்றனர்!

கண்களால் அவனுடைய திருமேனி அழகை ரசிக்கின்றனர்! காதுகளால் அவனது திவ்விய சரிதங்களைக் கேட்டு மகிழ்கின்றனர்! நாவினால் அவன் திருநாமங்களைச் சொல்லிஇனிக்கின்றனர்!கரங்களால்ஈசனதுஆலயங்களில்உழவாரப்பணி

செய்து உவகை கொள்கின்றனர்!” சேர்ந்தறியாக்கையானை’ நோக்கிக் கை கூப்பி

நெகிழ்கின்றனர்! கால்களால் அவனது ஆலயத்தை வலம் வருகின்றனர்…இப்படி ஈசனுக்காகவே ஐம்புலன்களையும் அர்ப்பணித்துவிட்டதால், முக்தியில் கிடைக்கும்

இன்பத்தை இங்கேயே அனுபவித்து,”ஜீவன் முக்தர்களாக’ வலம் வருகின்றனர். அதனால் இந்த உலகம் நமக்குத் தெரிவதுபோல நரகமாக அவர்களுக்குத் தெரிவதில்லை; ஆனந்தபுவனமாகவே அகிலத்தைக் காண்கின்றனர்.

யாருக்கு எந்த நதியைப் பார்த்தாலும் பரமேஸ்வரனின் சடையிலிருந்து பெருகும் கங்கையாகவே தோன்றுகிறதோ, மலைகள் எல்லாம் கயிலையாகத்

தெரிகின்றதோ, மேகங்கள் வெண்ணீற்றை நினைவுபடுத்துகின்றதோ, நீலவானம் நீலகண்டத்தை நினைவூட்டுகின்றதோ, பசுக்களைப் பார்க்கும்போது பசுபதி  நாதனின் கருணை புலப்படுகின்றதோ.. அட..! சுடுகாட்டைப் பார்த்தாலும்,” பேய் வாழ்காட்டகத்தாடும் பிரானின்’ மீது அன்பு மேலிடுகிறதோ அவர்களுக்கு

“மோட்சபூமி’ என்ற ஒன்று தனியே தேவைப்படவாபோகின்றது?

எறும்பைக் கண்டால் எறும்பியூர்! மதகஜத்தைக் கண்டாலும – சிலந்தியை கண்டாலும் ஆனைக்கா! நாரையை பார்த்தால் திருநாரையூர்! மயிலைப்பார்த்தால் மாயூரம்! வராகத்தை பார்த்தால் திருவண்ணாமலை! பாம்பு தட்டுப்பாட்டால் திருப்பாம்புரம்! ஈக்களைக் கண்டால் ஈங்கோய்மலை! புலியைப்பார்த்தால்

பெரும்பற்றப் புலியூர், அல்லது திருப்புலிவனம்! சிங்கத்தைக் கண்டால் திரிபுவனம் சரபேஸ்வரர்! மாடுகளை நோக்கினால் திருவாவடுதுறை! ஆடுகளைக்

கண்டால் திருவாடானை….!இப்படி எதைக் கண்டாலும்

திருத்தலங்களின் நினைவுகளில் மூழ்கிப் போகிறவர்களுக்கு சரீரம் விழுந்த பிறகுதானா முக்தி நிலைவாய்க்கிறது? இல்லவேயில்லை! அப்போதைக்கு இப்போதே அந்த ஆனந்தம் வந்து விடுகிறதே!

எனவே புலன்களால் உந்தப்பட்டு எழுகின்ற ஆசை

மட்டுமே அபாயகரமானது! அந்த ஆசையைக் கொல்ல

வேண்டும். மாறாக, புனிதர்க்கெல்லாம் புனிதரும்,

தேவர்களுக்கெல்லாம் தேவருமான மஹா தேவனாகிய

சிவபெருமானின் மீது ஆசை வைத்து, அப்பர் பாடிய

“திருஅங்க மாலை’யில் கூறப்படுவதுபோல் எல்லா

அவயவங்களையும் அரனாருக்கே அர்ப்பணிக்கும்

ஆசையை அளவுக் கதிகமாய்க் கொள்ளவேண்டும்.

அதில் மட்டும் நிரந்தர ஆனந்தம் கிடைக்கும்.

எவ்வாறு மலத்திலுள்ள புழுக்களுக்கு சந்தனத்தின் அருமை தெரியாதோ, அதேபோல் புலனின் பங்களில் மூழ்கிய புல்லர்களுக்கு அடியார்கள் அனுபவிக்கும் ஆனந்தம் விளங்கிக் கொள்ள முடியாதவிஷயமே!

“மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்’

என்று பாடுகிறாள், திருமாலின் பக்தையான ஆண்டாள். காமம் உள்ளிட்ட  அறுவகை துர்குணங்களை அப்பர் பெருமான் போல் பல அடியார்கள் கண்டித்துள்ளனர்.

புலனின்பமே மனிதனை நரகத்தில் வீழ்த்துகிறது!

ஆயின்புலன்களை வெல்வதும் கடினம்தான்!

இந்நிலையில் தப்பிக்க என்னவழி? அதையும் அடியார்களே சொல்லித் தருகின்றனர். “அதே

புலன்களை ஆண்டவன் பக்கம் திருப்பி விட்டால்

ஆனந்தம் என்பது என்ன வென்று அக்கணமே புரிந்துவிடும்’ என்று உபதேசிக்கின்றனர். ஆண்டவன் மீது வைக்கின்ற ஆசை, நாசத்தை உண்டு பண்ணாது என்பதைஅவர்கள்அறிவார்கள். அதனால்தான்,

“”பவளத்திருவாயால்” அஞ்சேல்’ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே”

என்றும்,””ஆசையெலாம் அடியார் அடியோ மெனும் அத்தனை ஆகாதே” என்றும்

மாணிக்கவாசகர் முழங்குகின்றார்.

“இப்படிப்பட்ட  மேன்மை உணர்வு எளிதில் எல்லோர்க்கும் வாய்த்துவிடுமா?’  என்று எவருமே மலைக்கத் தேவையில்லை.”மாயை’ என்னும் அம்பறாத் தூணி, மன்மத பாணங்களை ஏவி, நம்மைக் கவிழ்க்கத்தான் முயற்சிக்கும். அது வெறும் மலரம்புதானே? சிவநாமம் என்பதோ “பாசுபத’ அஸ்திரம்! நாம் அந்த அஸ்திரத்தை புலன்களுக்கும், வினைப்பயன்களுக்கும் எதிராக வீசத் தொடங்கிவிட்டால் வெற்றி நிச்சயம்.”வித்தக நீறணி வார்வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே’ என்று பாடுகிறார் சிவ பக்தப்படையின் தளபதியாய் நிற்கும் ஆளுடைய பிள்ளையார். பிறகும் ஏன் அச்சம்? ஐந்தெழுத்தால் ஆகாதது அவனியில் ஏதும்  உண்டா?

எனவே உலக இன்பங்களாக நாம் கருதும் துக்கங்களை உடனடியாக விட்டொழிப்போம். ஐந்தெழுத்தின் துணைகொண்டு, பீளை உடைக் கண்களால்  சிற்றம் பலத்து அரன் ஆடல்காண்போம்! அது ஆனந்தத்தாண்டவம்! தேடிப் பார்த்தாலும் இவ்வுலகினில், வேறெந்த விஷயத்தாலும் நிலைத்த ஆனந்தம் ஏற்படாது! ஆயின், திருநாவுக்கரசர் பாடியது போல,” சிற்றம்பலவன் திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே?’ என்று இருந்துவிட்டால் தினம் தினம் ஆனந்தமே! அந்த நிலையை அடைந்து விடின் அன்றாடம்

ஆதிரை திருவிழாதான்! நம் மனமென்ற பொன்னம்பலத்தை, ஆனந்தமா நடராஜ பெருமான் ஆடுகின்ற களமாக ஆக்கிக் கொண்டால் எல்லா மாதங்களுமே “மார்கழி’ யாகி, உள்ளம் குளிர்ந்து உகப்படையலாம். இந்தப்புரிதலே” ஆருத்ரா தரிசன’ வைபவத்துள் அடங்கியுள்ள” சிதம்பர’ ரகசியம்.

– மருதவாணன்

Leave a Reply