இரண்டு லக்ஷணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்

ப்ரஹ்மம் என்பது குணமும், வடிவமும் இல்லாதது. அதற்கு லக்ஷணங்களைச் சொல்லுகிறீர்களே என்று கேட்டால், லக்ஷணங்கள் இருவிதம் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

இதற்கு உதாரணத்தைப் பார்ப்போம். தேவதத்தன் என்று ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய வீடு எங்கே இருக்கிறது என்று கேட்கையில், “அதோ, அந்த காக்கை உட்கார்ந்திருக்கிறதே அதுதான் தேவத்தத்தனுடைய வீடு “ என்று ஒருவன் கூறினான்.

அந்த மனிதன் அந்த வீட்டைப் போய்ப் பார்க்கையில் காகம் அங்கு இல்லை. ஆனால் அது தேவத்தத்தனுடைய வீடா இல்லையா என்று கேட்டால் அது தேவதத்தனுடைய வீடுதான்.

இதுபோன்ற லக்ஷணம் கூறுவதற்கு ‘தடஸ்த லக்ஷணம்’ என்று சாஸ்திரத்தில் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நாம் புரிந்து கொள்ளும் வரை அந்த லக்ஷணம் இருக்கும். அதற்குத்தான் ‘தடஸ்த லக்ஷணம்’ என்று பெயர்.

ஆனால் நாம் அந்த விஷயத்தைப் புரிந்து கொண்டவுடன் அந்த லக்ஷணம் அங்கு இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. எவ்வாறு மேற்கூறிய உதாரணத்தில் வீடு கண்டுபிடிக்கப்பட்ட பின்பும் காகம் அங்கேயே இருக்க வேண்டுமென்பதில்லையோ அதேபோல்தான் மற்ற விஷயங்களிலும் தடஸ்த லக்ஷணம் இருக்கிறது.

ஒருவன் நேற்று பார்ப்பதற்கு கருப்பாக இருந்தான் ; இன்று சிகப்பாக மாறிவிட்டான் என்பதெல்லாம் கிடையாது அதே போல் “நேற்று அவனுக்கு இரண்டு கண்கள் இருந்தன ; இன்று பார்க்கும் போது ஒரே கண் ஆகிவிட்டது என்றெல்லாம் கிடையாது. இத்தகைய லக்ஷணங்கள் எப்போதும் இருப்பவை. அவற்றிற்கு, ‘ஸ்வரூப லக்ஷணம் ‘ என்று பெயர்.

இந்த இரண்டு லக்ஷணங்களும் ஒரு பொருளுடைய ஸ்வரூபத்தைத் தெரியப்படுத்துவதற்காகத்தான் இருக்கின்றன.

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Leave a Reply