திருவையாறில் ஜன.21-ல் தியாகராஜர் ஆராதனை விழா தொடக்கம்

செய்திகள்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் 1847 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி புஷ்ய பகுள பஞ்சமி தினத்தன்று திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் சித்தியடைந்தார்.

ராமனையே இரவு, பகலாக வணங்கி ஏராளமான கீர்த்தனைகளைப் பாடி நாட்டிற்கும் அர்ப்பணித்தவர் தியாகராஜர். அவரை நினைவுகூறும் வகையில், அவர் சமாதியாகியுள்ள இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 164-வது ஆராதனை விழா ஜனவரி 21 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பந்தல்கால் நடப்பட்டது.

அதில் பங்கேற்ற தியாக பிரம்மசபைத் தலைவர் ஜி.ஆர். மூப்பனார் கூறியது:

ஆராதனை விழாவின்போது புதுப்பிக்கப்பட்ட தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தை மத்திய கப்பல் போக்குவரத்து துறை ஜி.கே. வாசன் திறந்துவைக்கிறார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள தியாகராஜர் அரங்கத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொடங்கிவைக்கிறார். ஆராதனை விழா ஜனவரி 21 தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறும் என்றார் அவர்.

எம்எல்ஏக்கள் என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை), பாளை அமரமூர்த்தி (அரியலூர்), முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply