பெண், பொன்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
Bharathi theerthar - Dhinasari Tamil

– Advertisement –

– Advertisement –

உலகத்திலே மனிதனுக்கு இரண்டு விஷயங்களில் “மோஹம்” உண்டாகிறது. அவை “பெண்” மற்றும் “பொன்” என்பவையே. இந்த இரண்டிலும் மோஹமடைந்தவன் தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றான்.

எவனுக்கு இந்த இரண்டிலும் மோஹம் இல்லையோ அவனே “மஹாத்மா” எனப்படுகிறான்.

இராவணன் சீதையைத் தவறான பார்வையில் பார்த்தான்; அழிந்து விட்டான். இதனால் என்ன தெரிகிறது என்றால், உலகத்தில் எந்தப் பெண்ணையும் தவறான நோக்கத்தில் பார்க்கக் கூடாது என்பதுதான்.

நம்முடைய பாரதப் பண்பாட்டிலேகூட, “உலகிலுள்ள அனைத்துப் பெண்களும் தாயாருக்குச் சமானம் என்றுதான் கருதப்பட வேண்டும்” என்பதைத்தானே கூறியிருக்கிறார்கள்!

ஒருவன் எப்படிப்பட்ட தீயவனாயினும் சரி, தன் தாயாரின் விஷயத்தில் எவ்விதக் கெட்ட எண்ணத்தோடும் இருக்க மாட்டான். எல்லாப் பெண்களையும் தாயாராக பாவித்தால் மனதிலே எவ்வித விகாரமும் ஏற்படாது.

தேவீமாஹாத்மியத்திலே தேவதைகள் அந்த பரதேவதையைத் துதிக்கும்போது “ஸகல ஸ்த்ரீகளும் உன் ஸ்வரூபமே” என்று கூறுகிறார்கள். இதைப் பின்பற்றும் வண்ணமாகத்தான் நம்முடைய முன்னோர்களும் நமக்கு வழிமுறைகளை உபதேசித்திருக்கிறார்கள்.

இதற்கு மாறாக நாம் நடந்தோமானால் அது மிகப் பெரும் தவறாகிவிடும்.
பிறருடைய சொத்தை நாம் சிறிதும் விரும்பக் கூடாது. தெருவில் எவ்வளவோ கல்லும் மண்ணும் நிறைந்து கிடக்கின்றபோதிலும் எவருடைய மனதேனும் அவற்றை நாடுகின்றதா? இதே பாவனையைத்தான் நாம் பிறருடைய சொத்து விஷயத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பாவனை எவனுக்கு இல்லையோ, எவன் பிறர் சொத்தை அபகரிக்க நினைக்கிறானோ அவனுக்கு துரியோதனனுடைய கதையே ஓர் எச்சரிக்கை!

துரியோதனன் தனது சிற்றப்பாவின் பிள்ளைகளுக்கு முறைப்படிச் சேர வேண்டிய சொத்துக்களைக் கொடுக்காமல் தானே அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கப் பேராசைப்பட்டான்; விளைவை அனுபவித்தான்.

பணக்காரனாக இருந்தால்தான் சந்தோஷம் என்பதில்லை. எப்படிப்பட்ட நிலையிலும் சுகமாக இருக்கலாம். இந்த தத்துவத்தை மறந்தோமானால் அதர்மங்களும் அநியாயங்களும் அதிகரிக்கும். மாறாக, “பொன்” னில் இருக்கும் மோஹத்தை நாம் நீக்கி விட்டோமானால் திருப்தியும் சந்தோஷமுமான ஜீவிதம் நமக்கு உண்டாகும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

– Advertisement –

Leave a Reply