திருத்தணி முருகன் கோயில் திருப்புகழ் திருப்படித் திருவிழா

செய்திகள்

திருத்தணி முருகன் கோயில் திருப்புகழ் திருப்படித் திருவிழாவில் மஞ்சள், குங்குமத்தால் “ஓம்’ என கற்பூரம் ஏற்றி நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31 -ம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு திருப்படித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு சரவணப் பொய்கையிலிருந்து தொடங்கும் படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் முருகன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மு.ஈஸ்வரப்பன் குத்துவிளக்கேற்றி திருப்புகழ் திருப்படி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பஜனைக் குழுவினர் 365 படிகளும் திருப்புகழ் பாடல்கள் பாடிய வண்ணம் மலைக்கோயிலுக்குச் சென்று முருகன் சுவாமியை தரிசனம் செய்தனர்.
அதேபோல் பெண் பக்தர்கள், ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் பூசியும், குங்குமம் வைத்தும், கற்பூரம் ஏற்றியும் தேங்காய் உடைத்தும் மலைக் கோயிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். திருப்படி திருப்புகழ் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக காலை 10 மணிக்கு வெள்ளித் தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளி மலைக்கோயிலை ஒரு முறை வளம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்புகழ் திருப்படி திருவிழாவில் மலைக்கோயிலில் உள்ள, திருப்புகழ் பஜனை மண்டபத்தில் பல்வேறு பஜனைக் குழுவினர்களால் திருப்புகழ் பாடல்கள் தொடர்ந்து நள்ளிரவு வரை பாடப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக அனைத்து வழித்தடங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முருகன் கோயில் அலுவலகம் தணிகை இல்லத்திலிருந்து மலைக்கோயிலுக்கு 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி. வனிதா உத்தரவின் பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். திருப்புகழ் திருப்படித்  திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி முருகனை வழிப்பட்டு சென்றனர்.
விழாவில் முருகன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மு. ஈஸ்வரப்பன், கோயில் இணை ஆணையர் மா. கவிதா, திருத்தணி திமுக நகரச் செயலர் எஸ். சந்திரன், நகர்மன்ற உறுப்பினர் எம். பூபதி, முன்னாள் முருகன் கோயில் அறங்காவலர் மு. நாகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?artid=354806

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *