அறப்பளீசுர சதகம்: மனைவியின் மாண்பு!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil
  1. இல்லாளின் சிறப்பு

கணவனுக் கினியளாய், ம்ருதுபாஷி யாய், மிக்க கமலைநிகர் ரூப வதியாய்க்,
காய்சினம் இலாளுமாய், நோய்பழி யிலாததோர்
கால்வழியில் வந்த வளுமாய்,
மணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன
வரும்இனிய மார்க்க வதியாய்,
மாமிமா மற்கிதம் செய்பவளு மாய், வாசல்
வருவிருந் தோம்பு பவளாய்,
இணையில்மகிழ் நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
என்பெயர் இலாத வளுமாய்,
இரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம்
இல்வழி செலாத வளுமாய்,
அணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள்
ஆகும்;எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

எமது தேவனே! கணவன்
பார்வைக்கு இனியவளாய், இன்மொழி யுடையவளாய், திருமகளைப் போலச் சாலவும் அழகியாய்,
வெறுக்கத்தக்க கோபம் இல்லாதவளாய்,
நோயும் இழிவும் இல்லாத ஒப்பற்ற மரபிலே பிறந்தவளாய், புகழத்தக்க நான்கு பண்புகளும் பொருந்திய நல்லொழுக்கமுடையவளாய், மாமிக்கும் மாமனுக்கும் நலம் புரிபவளாய்,
வாயிலில் வரும் விருந்தினரை
ஆதரிப்பவளாய், ஒப்பற்ற
கணவன் மொழிப்படி நடப்பவளாய்,
மலடியெனும் பெயரில்லாதவளாய்,
இரதியைப்போல இன்பக்கலவி செய்பவளாய், மற்றவருடைய வீட்டுவழி செல்லாதவளாய், அழகிய அணிகலன்களையுடைய ஒரு
மங்கை இருந்தால், அவள் கற்புடையவள்
எனப்படுவாள்.

இரதியென லீலை புரிதலும், மகிழ்நன் சொல் வழிநிற்றலும் பிற்கூறப்பட்டன வாதலால் முதலிற்கூறிய இனிமை அழகினால் இனிமையூட்டுதலை மட்டுங் குறிப்பதாகும்.

மற்றையபண்புகள் பெண்களுக்குப் பொதுவானவை. நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்பவை பெண்களின் இயல்புக்குக் காவலான படைகள்.

புகழேந்தியாரும்,
‘நாற்குணமும் நாற்படையா’ என்று கூறுதலைக் காண்க. பெரும்பான்மையும்
ஒழுக்கங் கூறுதலின் சிறுபான்மையான நோய் பழியில்லாமையும்
கூறப்பட்டது. நோய் பழியிலாமை நோயற்ற வாழ்வுக்காகக் கூறப்பட்டது.

இரதி, மதன் எனப்படுவோர் காமத் தெய்வங்கள். கலையைக் கலைமகளாகவும், திருவைத் திருமகளாகவும், கொற்றத்தைக் (வெற்றியை) கொற்றவையாகவும் வழிபடுதல் போலக் காமத்தையும் இரதி, காமன் என வழிபடுதல் நம் நாட்டு வழக்கு.

சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற காவியங்களிற் காமக் கோட்டமும்
அங்குச் சென்று வழிபடுதலும் இருத்தலைக் காண்க. இங்குக் கூறப்பட்டவை கற்புடைய பெண்ணின் பண்புகள்.

Leave a Reply