அறப்பளீசுர சதகம்: நல்ல பிள்ளைகளின் இலக்கணம்!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

நன்மக்கட் பேறு

தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
தருமங்கள் செய்து வரலும்,
தன்மமிகு தானங்கள் செய்தலும், கனயோக
சாதகன் எனப்படுதலும்,
மங்குதல் இலாததன் தந்தைதாய் குருமொழி
மறாதுவழி பாடு செயலும்,
வழிவழி வரும்தமது தேவதா பத்திபுரி
மார்க்கமும், தீர்க்கா யுளும்,
இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,
ஈகையும், சன்மார்க் கமும்
இவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே
ஈன்றவன் புண்ய வானாம்;
அங்கச விரோதியே! சோதியே! நீதிசேர்
அரசன்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

மன்மதனை அழித்தவனே!,
ஒளியே!, முறை தவறா அரசனான,
எமது தேவனே!, தம் மரபு புகழ்பெற அறிஞர்கள் புரிகின்ற
அறங்களை விடாது புரிதலும்,
பொருளீட்டும் வலிமையற்றோர்க்குச் செய்யும் தருமமும், நல்லோர்க்கு
உதவும் தானமும் ஆகிய இவற்றைச் செய்வதும், பெரும் புகழுக்கேதுவான இலக்கணமுடையோன் என்பதும்,
குன்றாத தன் பெற்றோர்களின் மொழியையும் ஆசிரியர் மொழியையும்
தட்டாமற் பணிபுரிதலும், பரம்பரையாகச் செய்துவரும் தங்கள் தெய்வ வழிபாட்டு
நெறியில் நிற்றலும், நீண்டவாழ்நாளும், நற்பண்புகளும், கல்வியும்,
அறிவும், கொடையும், நல்லொழுக்கமும்,
(ஆகிய) இவையெலாம் உடையவன் நன்மகனாவான், அவனைப் பெற்றவனே நல்வினை யுடையவன் ஆவான்.
நன்மகன் இங்குக் கூறிய பண்புகளெலாம் உடையோனாவான்.

Leave a Reply