அறப்பளீசுர சதகம்: யார் உடன்பிறப்பு?

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

உடன் பிறப்பு

கூடப் பிறந்தவர்க் கெய்துதுயர் தமதுதுயர்
கொள்சுகம் தம்சு கமெனக்
கொண்டுதாம் தேடுபொருள் அவர்தேடு பொருள்
அவர்கொள் கோதில்புகழ் தம்பு கழெனத்,
தேடுற்ற அவர்நிந்தை தம்நிந்தை தம்தவம்
தீதில்அவர் தவமாம் எனச்
சீவன் ஒன்றுடல்வே றிவர்க்கென்ன, ஐந்தலைச்
சீறரவம் மணிவாய் தொறும்
கூடுற்ற இரையெடுத் தோருடல் நிறைத்திடும்
கொள்கைபோல் பிரிவின் றியே
கூடிவாழ் பவர்தம்மை யேசகோ தரரெனக்
கூறுவது வேத ருமமாம்;
ஆடிச் சிவந்தசெந் தாமரைப் பாதனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

ஆடிச் சிவப்பான
செந்தாமரை மலரடிகளையுடையவனே! தலைவனாகிய, எமது தேவனே!
உடன் பிறந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தம் தமது வருத்தம்
அவர்கள் கொள்ளும் இன்பம் தம் இன்பம் என்றும், தாம் முயன்று சேர்க்கும் பொருள் அவர்கள் சேர்க்கும் பொருள்,
அவர்கள் கொண்ட குற்றமற்ற புகழ் தம்முடைய புகழ் என்றும், அவர்கள் கொண்ட பழிப்பு தம்முடைய பழிப்பு, தம்முடைய தவம் குற்றமற்ற அவருடைய தவமாகும் என்றும், இவர்களுக்கு உயிர் ஒன்று, மெய் மட்டும் வேறு என்றும், சீறுகின்ற பாம்பின்
மாணிக்கங்களையுடைய ஐந்து தலைகளிலுமுள்ள வாய்தோறும், கிடைத்த
உணவை யெடுத்து ஒருடலை நிறைக்கின்ற இயற்கைபோலவும், பிரிவேயில்லாமல், கூடிவாழ்கின்றவர்களையே உடன்பிறந்தோர்
என்று கூறுவது அறமாகும்.

உடன் பிறந்த சகோதரர்கள் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதாம்.

Leave a Reply