பீஷ்ம ஏகாதசி: விரதபலன்..!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
Bishmar - Dhinasari Tamil

கங்கையைவிட சிறந்த தீர்த்தம் இல்லை; விஷ்ணுவைவிட உயர்ந்த தெய்வம் இல்லை; காயத்ரியைவிட உயர்ந்த மந்திரம் இல்லை; ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு.

பகவான் கிருஷ்ணரை, பீஷ்மர் வணங்கி விஷ்ணு சகஸ்ரநாமத்தை அருளி, உயிர் துறந்த அந்த நாள் தான் பீஷ்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால், சகல செல்வ வளத்தையும் பெறலாம் என்பது நிச்சயம். பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.

ரத சப்தமியை அடுத்து வரும் ஏகாதசிக்கு, பீஷ்ம ஏகாதசி என்று பெயர். பீஷ்மர் அம்புப்படுக்கையில் இருந்து, விஷ்ணு சகஸ்ரநாமத்தை இந்த உலகுக்கு வழங்கினார். எனவே, இந்த ஏகாதசி மிகவும் உயர்வானதாகக் கருதப்படுகிறது.

விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பாடுவதும் கேட்பதும் புண்ணிய பலன்கள் அளிக்கும். நம்மைச் சுற்றியிருக்கும் பாவங்களும் பாவிகளும் விலகி ஓடுவர். இதற்கு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் உண்டு. முதன்முறை விஷ்ணு சகஸ்ரநாமத்தை உபதேசித்தவர் பீஷ்மர்.

அம்புப்படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, கௌரவர்களும் பாண்டவர்களும் அவரைச் சூழ்ந்திருந்தனர். பகவான் கிருஷ்ணன், அவர்களுக்கு நடுவே நின்றார்.

பீஷ்மர் தன் உதிரம் அத்தனையும் வழிந்தோடிய பின்பு வைராக்கியத்தில் பிறவிப் பிணி அணுகாமல் இருக்கத் தன் முன்னே நின்ற கிருஷ்ணனை வணங்கி, அவனை விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லி துதிக்க ஆரம்பித்தார்.

பீஷ்ம ஏகாதசி நாளை நிர்ஜலா ஏகாதசி என்று கொண்டாடி வருகிறார்கள். நிர்ஜலா ஏகாதசி என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஸ்ரீமத் நாராயணனின் திருநாமங்களை உச்சரித்துகொண்டு இருக்க வேண்டும். இந்த ஏகாதசி நாளில் விரதமிருந்து வழிபட, சகல பாவங்களும் தீரும் என்பது ஐதிகம்.

உத்தராயன புண்ணிய காலத்தில் வரும் இந்த ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால், முக்தி அடையாமல் இருளில் தவிக்கும் முன்னோர்கள் முக்தி அடைவர் என்பது ஐதிகம்.

இதனால் முன்னோர்களின் ஆசிகள் நம்மைச் சேர்வதால் வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிட்டும். எனவே, இந்த ஏகாதசி விரதத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும். மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டதுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமோ அல்லது நரகமோ கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆனால், இந்த பீஷ்ம ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் எந்த தடையுமின்று நேரடியாகவே சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கையாகும்.

Leave a Reply