அறப்பளீஸ்வர சதகம்: சிறந்தவன்..!

கட்டுரைகள் செய்திகள்
arapaliswarar - Dhinasari Tamil

நல்லோர் – 2

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
அவனே மகாபுரு டனாம்;
அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்
அசைவிலன் மகாதீ ரனாம்;
தொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
தோன்றலே மகரா சனாம்;
தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
துரையே மகாமே ருவாம்!
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த் திரட்சிக்கும்
அவனே மகாதியா கியாம்;
அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்
அவனே மகாஉசி தன்ஆம்;
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே! லோலனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!.

(பகைவரைக்)
கொல்லுகின்ற முத்தலைச் சூலம் ஏந்தியவனே!, திருவிளையாடல்
புரிகின்றவனே!, -குற்றம் அற்றவனே!, அருமை தேவனே!,
அடைக்கலம் என்று தேடிவருவோர்களைக் காப்பாற்றுவோன்
மக்களிற் சிறந்தவன், எது வந்தாலும் எதுபோனாலும் அச்சம்
இன்றி உள்ள உறுதியுடன் இருப்பவன் பெருவீரன்,
ஒன்றைப்பற்றிக் கூறிய சொல்லை நழுவவிடாமல் செய்கின்ற தலைவனே
பேரரசன், வீண்பழி தூற்றி மனத்தைக் கலைப்பவரின் சொல்லை
நம்பாத செல்வனே மாமேரு மலை, தன்னைச் சார்ந்தோர்க்கு வருந்
துன்பத்தை நீக்கிக் காப்பவனே பெரிய வள்ளல்,
ஒவ்வொருவருடைய தகுதியையும் பார்த்து மதிப்புக் கொடுக்கின்றவனே
சிறந்த தகவாளன்.

அடைக்கலங் காத்தல் முதலானவை சிறந்த பண்புகள்.

Leave a Reply