வானமாமலை ஜீயர் – பதரி மட சங்கராச்சாரியர்:: இரு மஹான்களின் சந்திப்பு

செய்திகள்

அன்றைய தினம், மதியம் 2.45 மணி அளவில் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகள், திருவல்லிக்கேணி ஸ்ரீ வானமாமலை ஜீயர் மடத்திற்கு எழுந்தருளினார்கள். தமது உடற்சோர்வையும், வயதினையும் பொருட்படுத்தாது, அவர்களை வரவேற்க ஸ்ரீ மடத்தின் வாசல்வரை எழுந்தருளி, தாமே பூர்ண கும்ப மரியாதையைக் கொடுத்து, வரவேற்று, உபசரித்தார் ஸ்ரீ ஸ்ரீ ஜீயர் சுவாமிகள். இரண்டு மடத்து அன்பர்களும் குருபக்தி, மஹான்களின் கல்யாண குணமேன்மை, விநயம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள பெரும் வாய்ப்பாக அமைந்தது.

மங்கல வாத்யம் முழங்கிட ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகளை ஸ்ரீஸ்ரீ ஜீயர் சுவாமிகள் ஸ்ரீமடத்திற்கும் உடனிருந்து அழைத்து சென்றார்கள். பின்னர் அந்த ஸ்ரீமடத்தின் வழிபடு தெய்வங்களை அங்குள்ள பட்டாச்சார்ய பெருமக்கள் தீபாராதனை காட்டி, விளக்கம் சொல்லி மகிழ்ந்தார்கள். ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகள், மிகுந்த நுணுக்கமாக அந்த தேவதைகளைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டார்கள்.

 

தொடர்ந்து ஸ்ரீ ராமானுஜர் ஹாலுக்கு இரு பெரியவர்களும் எழுந்தருளினார்கள். இரண்டு மாபெரும் ஆசார்யார்களும் சம்ஸ்கிருதத்தில் ஸ்ரீமட சம்பிரதாயங்களைக் குறித்தும், ஆன்மீகம் குறித்தும் வெகு மகிழ்வோடும், உள்ளன்போடும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

பக்தஜனங்கள் முன்னிலையில் இருபெரியவர்களும் எழுந்தருளினார்கள். ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீ ஜீயர் மடத்தின் ஸ்ரீகார்யம் ஸ்ரீதோத்தாத்ரி அவர்கள் ஸம்பிரதாயமாக வரவேற்றார்கள். பதரி மடத்தின் சார்பில் ஸ்ரீவித்யாவின் ஆசிரியர் இலக்கியமேகம் ஸ்ரீனிவாசன் அவர்கள் இரு ஆசார்யர்களுடைய பெருமை குறித்தும், இரு ஸ்ரீமடங்களின் பெருமை குறித்தும் பேசினார்கள்.

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகள் ஓர் அபூர்வ உரையொன்றினை அனுக்ரஹ பாஷணமாக நிகழ்த்தினார்கள். ஸ்ரீஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளை சந்திக்கும் தருணம் இப்பொழுதே வந்துவிடாதா என உள்ளம் ஏங்கியதாகக் குறிப்பிட்டது இரு மஹான்களின் உள்ளன்பைப் படம் பிடித்துக்காட்டியது.

ஸ்ரீஸ்ரீ ஜீயர் சுவாமிகளும் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாணந்த தீர்த்த ஸ்வாமிகள் தபஸ் மற்றும் தேஜஸ் ஆகிய தம்மை வெகுவாக ஈர்த்தது என்றும் இரு ஸ்ரீமடங்களிடத்திலேயும் இதே போன்று பரஸ்பர அன்பு என்றுமே தொடர்ந்திட வேண்டும் என்றும் அருளிச் செய்தார்கள்.

acharya jeeyar dirthar2

acharya jeeyar dirthar6

 

Leave a Reply