திருவண்ணாமலையில் தமிழ்ப் புத்தாண்டு: சூரிய பகவானின் லிங்க வழிபாடு!

செய்திகள்
thiruvannamalai lingam surya - Dhinasari Tamil

திருவண்ணாமலை கிரிவல்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சூரிய ஒளிவிழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதப் பிறப்பின் முதல் நாளன்று, திரு நேர் அண்ணாமலையார் மூலவர் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம்.

அதன்படி, சித்திரை மாத முதல்நாளான இன்று அதிகாலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு காலை 7 மணிமுதல் 7.10 மணி வரை நடைபெற்றது. அப்போது, திருநேர் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடைபெற்றது.

இதைக் காண அதிகாலை, 5:00 மணியிலிருந்தே ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். சூரிய ஒளி மூலவர் மீது விழுந்ததும் சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சார்வரி தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டான, சுபகிருது வருட பிறப்பை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, விநாயகருக்கு தங்கக்கவசம், அருணா சலேஸ்வரர் மூலவருக்கு தங்க நாகாபரணம், வெள்ளி ஆவுடையார் சாத்தப்பட்டது.

உண்ணாமுலையம்மனுக்கு வைர கிரீடம், தங்க காசு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து, கோவில் சிவாச்சாரியார்கள், சுவாமி தங்கக்கொடி மரம் அருகில் உள்ள, சம்பந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து, புத்தாண்டு பஞ்சாங்கம் வாசித்தனர்.

  • செய்தி: திருவண்ணாமலை பாலா

Leave a Reply