நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடி மரத்திற்கு அபிஷேகம், விஷேச பூஜைகள் நடந்தது. தைப்பூசத் திருவிழாவில் 4ம் நாளான 14ம் தேதி திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடக்கிறது. இரவு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது.

20ம் தேதி தைப்பூச தீர்த்தவாரி சிந்துபூந்துறை மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி மூர்த்திகள் பகல் 12.30 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் இருந்து புறப்பட்டு சுவாமி எஸ்.என்.ஹைரோடு வழியாக கைலாசபுரம், சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருள்கின்றனர். அங்கு தீர்த்தவாரி விழா, அபிஷேகம், ஆராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு மண்டபத்தில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயிலை அடைகின்றனர்.

21ம் தேதி காந்திமதியம்மன் சன்னதியை அடுத்துள்ள சவுந்திரசபா மண்டபத்தில் சவுந்திரசபா நடராஜப் பெருமான் திருநடன காட்சி நடக்கிறது. 22ம் தேதி நெல்லையப்பர் வெளித்தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *