அநீதியாக ஆட்சி செய்தவர்களை தண்டித்த அவதாரம்!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
parasuram - Dhinasari Tamil

நல்லவர்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் நேருகின்றதோ, அப்பொழுதெல்லாம் இறைவன் விஷ்ணு அவதாரம் எடுத்து, நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காத்தருளி இருக்கின்றார்.

அவருடைய அவதாரங்களில் மிகவும் போற்றுதலுக்குறிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.

பரசுராமர்
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் பிறப்பால் பிராமணர் ஆவார். அவர் சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக த்ரேதா-யுகத்தில் அவதரித்தார். சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர்.

அவர் பிறப்பால் ஒரு பிராமணராக இருந்தாலும் கூட, அவரிடம், ஷத்ரியர்களுக்கே உரித்தான துணிச்சல் மற்றும் போர்க்குணங்கள் நிறைந்திருந்தது. அதனால் அவர் ‘பிரம்மா-ஷத்திரியர்’ என்றே அழைக்கப்பட்டார்.

அவருடைய போர்த்திறமையால் இந்த பூமியில் இருந்த அனைத்து மோசமான ஷத்ரியர்களையும் 21 தலைமுறை வரை கொன்றழித்தார்.

பரசு என்கிற வார்த்தைக்கு ‘கோடாரி’ என்று பொருள். அதனால் பரசுராமர் என்கிற சொல்லை ‘கோடாரி தாங்கிய ராமர் ‘ என நாம் பொருள் கொள்ளலாம். ‘பரசுராமர் அவரது வழியில் குறுக்கிட்ட ஷத்ரியர்கள் அனைவரையும் அழித்தார், அதன் காரணமாக இந்த பூமியில் ஷத்ரிய பரம்பரையே இல்லாது போகும் அபாயம் ஏற்ப்பட்டது’

இறைவன் பரசுராமரின் பிறப்பிடமாக ரேணுகா தீர்த்தம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது தந்தை, ரிஷி ஜமதக்னி, இறைவன் பிரம்மாவின் ஒரு நேரடி வழித்தோன்றலாவார்.

பரசுராமர் பிறப்பதற்கு முன்னர் அவரது பெற்றோர்கள் இருவரும் சிவனை நோக்கி தவம் செய்தார்கள். அந்த தவத்தின் பயனாக அவர்களுக்கு நான்காவது மகனாகவும், விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகவும் பரசுராமர் அவதரித்தார். அவருக்கு ‘ராமபத்ரா’ என்கிற பெயரும் சூட்டப்பட்டது.

பரசுராமருக்கு அவரது இளவயதில் இருந்தே ஆயுதங்களின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. பரசுராமர் சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்தார். அந்த தவத்தின் பயனாக சிவன் அவர் முன் தோன்றி பரசுராமருக்கு ஒரு தெய்வீகமான கோடாரியை வரமாக அளித்தார்.

ஆனால் பரசுராமர் கோடாரியை வரமாகப் பெறும் முன் தன்னுடைய தகுதியை, தன்னுடைய ஆன்மீக குருவான சிவனிடம் நிரூபித்தார். இந்த தெய்வீக ஆயுதத்தை பெற்ற பிறகே ‘ராமபத்ரா’ என அறியப்பட்ட அவர், ‘பரசுராமர்’ என அழைக்கப்பட்டார்.

சிவன், பரசுராமரின் போர் திறமையை சோதிக்க பரசுராமரை போருக்கு அழைத்தார். குருவிற்கும் சிஷ்யனுக்கும் இடையே மிகப் பயங்கர யுத்தம் 21 நாட்கள் வரை நீடித்தது. குருவிற்கும் சிஷ்யனுக்கும் நடந்த போரின் போது, இறைவன் சிவனின் திரிசூலத்தை தவிர்க்கும் பொருட்டு, பரசுராமர் சிவனை, அவருடைய நெற்றியில் தன்னுடைய கோடாரி கொண்டு தாக்கினார்.

சிவன் அவருடைய சீடரின் போர் கலையில் மிகவும் மகிழ்ந்து போனார். அவர் தன்னுடைய காயத்தை ஆரத் தழுவி அதை நிரந்தரமாக பாதுகாத்தார். அதன் பின்னர் அவரது சீடரின் புகழை உறுதி செய்தார். அதன் பின்னர் ‘கந்த-பரசு’ என அழைக்கப்பட்டு வந்தார்.

இறைவன் பரசுராமரின் தாயார், ரேணுகாதேவி, ஒரு பதிவிரதை. அவர் தன்னுடைய பதிவிரதா சக்தியின் துணை கொண்டு சுடப்படாத களிமண் பானையில் தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் தண்ணீர் கொண்டு வர ஆற்றிற்கு சென்றிருந்த பொழுது, வானத்தில் ஒரு கந்தர்வன் தன்னுடைய ரதத்தில் செல்வதைப் பார்த்து ஒரு கணம் அவனை நிமிர்ந்து கண்டதால் அவருடைய பதிவிரதா சக்தியானது அவரை விட்டு நீங்கியது. எனவே அவரால் சுடாத களிமண் பானையில் தண்ணீர் சேகரிக்க முடியவில்லை. சுடாத களிமண் ஆற்றில் கரைந்து விடுகின்றது.

இந்த நிகழ்ச்சியை தன்னுடைய ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்ட ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவியை கொன்றுவிடும் படி தன்னுடைய பிள்ளைகளுக்கு ஆணையிடுகின்றார்.

பரசுராமரைத் தவிர்த்து யாரும் அந்த ஆணைக்கு கீழ்ப்படியவில்லை. ஆகவே பரசுராமர் தன்னுடைய கோடாரி கொண்டு ரேணுகா தேவி மற்றும் தன்னுடைய நான்கு சகோதரர்களின் தலைகளையும் கொய்து விடுகின்றார்.

பரசுராமரின் செயலால் மகிழ்ச்சியுற்ற ஜமதக்னி முனிவர், பரசுராமருக்கு இரண்டு வரங்களை வழங்குகின்றார். அந்த இரண்டு வரங்களின் பயனாக, பரசுராமர் தனது தாய் மற்றும் சகோதரர்கள் நால்வரையும் உயிர்ப்பிக்கின்றார்.

அந்தணர்களை துன்புறுத்தும் ஆட்சியாளரிடமிருந்து அவர்களைக் காக்க கோடரி கொண்டு அநீதி களைந்த அவதாரம் பரசுராம அவதாரம்.

Leave a Reply