அன்பினால் மட்டுமே இறைவனை அடைய முடியும்: பொன்னம்பல அடிகளார்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

இறைவனே தன் நாயகனாக வர ஆசைப்பட்ட ஆண்டாள் நாச்சியார், தன் உள்ளத்தில் பீறிட்ட அன்பால் பாடிய பாடல்கள்தான் திருப்பாவை. மாணிக்கவாசகர் இறைவன் மீது கொண்ட அன்பால் உள்ளம் உருகி அழுது அழுது பாடிய பாடல்கள்தான் திருவாசகம். அதில் ஒரு பகுதிதான் திருவெம்பாவை. மார்கழி மாதத்தில் நம் மனத்தை பக்குவப்படுத்துபவை திருப்பாவையும், திருவெம்பாவையும் ஆகும்.

தற்காலத்தில் பிரார்த்தனைகள் கொடுக்கல், வாங்கல், லாப நஷ்டக் கணக்காக மாறிவிட்டன. அபுபன்நாதன் என்பவர் இறைவனை நேசித்ததைப் போல மனிதர்களையும் நேசித்தார். ஒரு நாள் இரவில் அவர் தூங்கும்போது, தேவதை அவர் கனவில் வந்தது. தங்கத் தகட்டில் ஏதோ எழுதியது. என்ன எழுதுகிறாய் என்று அபுபன்நாதன் கேட்டான். யார் இறைவனை சிறப்பாக பூஜிக்கிறார்கள் என்ற பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் என்றது அந்த தேவதை. அதில் என் பெயர் உள்ளதா என்று அபுபன்நாதன் கேட்டதற்கு, உன் பெயர் இல்லை என்று தேவதை கூறியது. அபுபன்நாதன் வருத்தமடைந்தான். மறுநாளும் தூக்கத்தில் அந்த தேவதை தோன்றியது. அப்போதும் அது தங்கத் தகட்டில் எதையோ எழுதிக்கொண்டு இருந்தது. இப்போது என்ன எழுதுகிறாய் என்று அபுபன்நாதன் கேட்டபோது, கடவுள் யார் மீது அதிகம் பற்று வைத்துள்ளார் என்ற பட்டியலை எடுக்கிறேன் என்று தேவதை கூறியது. இப்போதும் அபுபன்நாதன், இந்தப்  பட்டியலிலாவது என் பெயர் உள்ளதா என்று கேட்டான். அந்த தேவதை, இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் உன் பெயர்தான் உள்ளது என்று கூறியது.

மனிதர்கள் மீது அன்பு காட்டுபவர்களை இறைவனும் நேசிக்கிறார். மனிதர்களுக்கு செய்யும் தொண்டுதான் இறைவனுக்கு செய்யும் தொண்டு.

யார் வேண்டுமானாலும் இறைவனை பூஜிக்கலாம். இறைவனை எறும்புகள் பூஜித்த இடம்தான் திருவெறும்பூர் என்ற திருத்தலமாகும். யானை பூஜித்த இடம்  திருவானைக்காவல் எனப் பெயர் பெற்றது.

முருகன் சூரபத்மனை போரில் வென்று அழித்துவிடவில்லை. அவன் மயிலாகவும், சேவற்கொடியாகவும் மாறிப்போனான். தீமையை நன்மையாக மாற்றிவிடுவதே அன்பு நெறி, பக்தி நெறி. சம்ஹாரம் என்பது மடை மாற்றுதல். தீமையை நன்மையாக மாற்றுவது.

அறிவியல் கோட்பாடுகளின்படி ஆற்றலை அழிக்க முடியாது. அதை வேறு ஆற்றலாக மாற்ற முடியும். இது ஆன்மிகத்துக்கும் பொருந்தும்.

பழனி பாதயாத்திரைக் குழுவினர் உள்ளத்தை ஒருமுகப்படுத்தி, உடலை வருத்தி இறைவனை தேடிச் செல்லும் பயணம். அவர்கள் பயணம் வெற்றி பெற்று, இறைவன் அருளைப் பெற வாழ்த்துகள் என்றார்.

Leave a Reply