கல்வியில் மேன்மை பெற..!

செய்திகள்
Highgriver - Dhinasari Tamil

கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. அந்தக் கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியே. ஆனால் அந்த சரஸ்வதிக்கு ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும். அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே.

நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர பிரம்மா தனது சிருஷ்டி தொழிலை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அந்த வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர்.

வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இல்லையேப உலகை இருள் சூழ்ந்தது பிரம்மா செய்வதறியாது திகைத்தார்.

மஹா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா, மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார்.

குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி, சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள் சங்கு, சக்கரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுத்தார். அன்று முதல் விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் ஹயக்ரீவராக உலகில் நிலை பெற்றது.

பகவான், விஷ்ணு பிரளய காலத்தில் உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார்.

பின் உலகப் படைப்பதற்காக, தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.

ஒருமுறை பெருமானின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர்.

இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் செய்ய ஆசைப்பட்டனர்.

குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரண் அடைந்தார்.

பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம், வர அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார்.

உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.

Highgriver vedham - Dhinasari Tamil

அசுரர்கள் கைப்பட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள் புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின.

குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன

. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்தார் என்றும், அவரை குளிர்விக்க லட்சுமியை அவர் மடியில் அமர்த்தினார்கள்.

இதனால் அவரை லட்சுமி ஹயக்ரீவர் என்றனர். வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவரர் கல்வி தெய்வமாகிறார்.

கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்திருக்கிறார்.

`கல்வி கடவுள்’ என்ற சிறப்பை பெற்றவர் ஹயக்ரீவர்.

பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.

சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக்ரீவருக்கு உண்டு.

வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.

மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன.

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது

காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.

புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாக வும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார் கள்.

குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது.

அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீவர் வசிக்கும் திருவந்திபுரம் என்று கூறப்படுகிறது.

ஹயக்ரீவர்தான் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார்.

ஸ்வாமி தேசிகன், வாதிராஜ ஸ்வாமிகள் ஆகியோர் ஸ்ரீஹயக்ரீவரை ஆராதித்து நீடித்த புகழ் பெற்றனர்.

சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.

ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.

ஹயக்ரீவரின் மந்திரத்தை சுவாமி தேசிகருக்கு ஸ்ரீகருடாழ்வாரே தோன்றி உபதேசித்தார் என்பது சரித்திரம்.

ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. பரிமுகன் என்றால் பரிந்த முகம், பரியும் முகம், பரியப் போகும் முகம் என்று மூன்று காலத்தையும் காட்டுகிறது.

ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஐதீகம்.

ஹயக்ரீவர், அன்னையை பூஜித்து அம்பாள் வழிபாடுகள் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

திருவந்திபுரம் மலை மேல் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் செல்வம் சேரும்.

ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பார்கள்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ரகசியங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை நங்கநல்லூரில் ஒரு லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறது . அவருக்கு வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாற்றுவது வழக்கம்.

தாய் தந்தையரின் தலையாய கடமைகளுள் ஒன்று தங்கள் குழந்தைகளின் கல்விக்குச் சரியான வழிகாட்டுவது. எவ்வளவு தான் செலவழித்து நல்ல பள்ளியில் பயில்வித்தாலும், பயிலும் குழந்தைகளின் தரமும் உழைப்பும் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் அருளும் தான் அக்குழந்தை நன்றாகப் படிக்கிறதா என்பதை உறுதி செய்கிறது.

ஜாதகத்தில் 4, 5 வீடுகள் (லக்னத்திலிருந்து) கல்வி எப்படியிருக்கும் என்பதைத் தெரிவிக்கிறது. இந்த வீடுகள் சரி இல்லையெனில் கல்வி சுமாரும் அதற்குக் கீழும் தான்.

படிப்பில் சுமாராக உள்ள குழந்தைகள், அல்லது அவர்களுக்காக அவர்களுடைய தாய் தந்தையர், கலைமகளுக்கே ஞானத்தை அளித்த ஸ்ரீஹயக்ரீவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

“ஞானானந்தமயம் தேவம்
நிர்மலஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே”

“இந்த பாடலுக்கு ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்” என்று அர்த்தமாகும்.

“வெள்ளைப் பரிமுகன்” என்று ஸ்ரீதேசிகனால் பிரார்த்திக்கப்பட்டவர் ஸ்ரீஹயக்ரீவர்.

வேதங்களின் கரைகண்டவன் நான் என்ற செருக்குப் கொண்ட பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக மது கைடபர்களைத் தோற்றுவித்த மஹாவிஷ்ணு அவர்கள் மூலம் வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து கவர்ந்து மறைத்து வைத்தார்.

lakshmi Highgriver - Dhinasari Tamil

பிறகு நான்முகனின் பிரார்த்தனைக்குத் செவி சாய்த்து மீனாக அவதரித்து மதுகைடபர்களைக் கொன்று வேதங்களை மீட்டு, பின்னர் வெள்ளைப் பரிமுகனாகத் தோன்றி அவ்வேதங்களைத் தூய்மைப்படுத்தி நான்முகனுக்கு உபதேசித்தார்.

ஸ்ரீ தேசிகனுக்கு பரத்யட்சமாகக் காட்சி தந்தது போலவே மதகுருவான ஸ்ரீவாதிராஜருக்கும் காட்சி தந்தருளியவர் ஸ்ரீஹயக்ரூவர்.

ஸ்ரீவாதிராஜர் கி.பி. 1480 வாக்கில் வாழ்ந்த மகான். ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த பிரசாதமாகிய நன்றாக வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து, நெய்விட்டுக் கிளறிய “ஹயக்ரீவபண்டி” என்ற பெயர் கொண்ட பதார்த்தத்தை தினந்தோறும் ஒரு தட்டிக் வைத்து தலை மீது வைத்துக் கொண்டிருப்பார்.

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமான் ஒரு வெள்ளைக் குதிரை வடிவில் இவருக்குப் பின்னால் வந்து நின்று இரு முன்னங்கால்களை இவர் தோள்களின் மீது வைத்து அதைப் புசிப்பது வழக்கமாம்.

இந்த ப்ரஸாதத்தை ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்வது விசேஷம்.
கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர்.

குதிரை முகத்தையுடையவராக மகாலட்சுமியை இடது பக்கம் மடிமேல் இருத்திக் கொண்டுள்ள, தூய்மையான ஸ்படிகம் போன்ற உடலையுடைய, தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள ஸ்ரீஹயக்ரீவ வரை மனத்தில் தியானித்து, ஹயக்ரூவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.

குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும். இதைக் கூறுவதற்கு நியமநிஷ்டைகள் கிடையாது.

உச்சரிப்பில் தவறு நேர்ந்தாலும் மன்னிப்பார். இதை எல்லோரும் நாள்தோறும் ஒருதடவையாவது கூறி எல்லா வளமும் பெறலாம்.

Leave a Reply