மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

செய்திகள்
thiruparankundram - Dhinasari Tamil

மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா ” கோஷம் முழங்கிட தரிசனம் !

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரலீலை இன்று கோலாகலமாக நடைபெற்றது . ஆயிரகணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

” அரோகரா ” கோஷம் முழங்கிட ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது .
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான முருகபெருமான் வேல் வாங்கும் விழா நேற்று நடைபெற்றதை தொடர்ந்து இன்று சூரசம்ஹாரலீலை கோயில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு விமர்சையாக நடைபெற்றது .
முன்னதாக, முருகன்பெருமான் தாயாரிடம் பெற்ற சக்திவேலுடன் தங்கமயில் வாகனத்திலும் , போர்ப்படை தளபதியான வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் கோயில் சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கநாதர் கோயில் முன்பு எழுந்தருளியதை தொடர்ந்து அங்கு சூரசம்ஹார லீலை சிறப்பாக நடைபெற்றது .

நிகழ்வில், அசுரனான பத்மாசூரன் சிங்கமுகமாகவும் , ஆட்டுத் தலையாகவும் , மனிதத் தலையாகவும் மாறி மாறி உருவெடுத்து வர பத்மாசூரனை சக்திவேல் கொண்டு முருபெருமான சம்ஹாரம் செய்த நிகழ்வை அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் ” அரோகரா ” கோஷம் முழங்கிட தரிசனம் செய்தனர் .
தொடர்ந்து, உற்சவர் சன்னதிக்கு சென்ற முருகப்பெருமான் தெய்வானைக்கு மகா தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .

விழாவில், மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர்.

அதனால், திருப்பரங்குன்றம் முழுவதும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன .

Leave a Reply