மதுரை கூடலழகர் சந்நிதியில் இன்று நூறு தடா அக்கார அடிசில் உத்ஸவம்! 

ஆண்டாள் செய்திகள்
koodalazhagar temple madurai - Dhinasari Tamil

மதுரை கூடலழகர் சன்னதியில் இன்று நூறு தடா அக்கார அடிசில் உற்சவம் நடைபெற்றது. 100 தடா அக்காரவடிசல் மார்கழி மாத ஆண்டாள் கைங்கர்யமாக கூடல் அழகர் கோயிலில்  இன்று நடைபெறும் இந்த உற்சவத்தில் 120 லிட்டர் பால், 2 படி அரிசி, 40 கிலோ கற்கண்டு, 6 கிலோ முந்திரி,  6 கிலோ பாதாம், 4 கிலோ பிஸ்தா,  1 கிலோ சாரைப் பருப்பு, 25 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. இவை சேர்த்து அக்காரவடிசல் 100 தடா தனுர் மாதத்தில் சமர்ப்பிப்பது வழக்கம். அதை முன்னிட்டு, டிச.25 ஞாயிற்றுக்கிழமை இன்று மதுரை கூடல் அழகர் கோவிலில் சமர்ப்பிக்கபடுகிறது.

வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக் கூடியவர் பெரும்புதூர் மாமுனி உடையவர் “இராமானுஜர்”.  வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாகப் பரப்பியவர்.  ஆண்டாளின் மீதும், அவரது பாசுரங்களன திருப்பாவை, நாச்சியார் திருமொழி மீதும் பெரும்பக்தி கொண்டவர். “திருப்பாவை ஜீயர்” என்றே இராமானுஜர் போற்றப்படுகிறார்.

ஆண்டாள் நாச்சியார் வாழ்ந்த காலத்தில் அவரது ஆசையை திருமாலிருஞ்சோலை இறைவன் மீது பாடிய பாசுரத்தில் பதிவு செய்துள்ளார்.

“நாறு நறும் பொழில் 
     மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
     வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த 
     அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
     இன்று வந்து இவை கொள்ளுங்கொலோ?
– என்று ஆண்டாள் இந்த திருத்தலத்திற்கு வந்து தவம் செய்து அரங்கனை மணம் செய்தால் நூறு தடா அக்காரஅடிசில் செய்வதாக வேண்டுதல் வைத்தாராம்.

ஆண்டாளம்மை தம் வேண்டுதல் நிறைவேற்றும் முன் ஸ்ரீரங்கம் அரங்கனிடத்தில் ஐக்கியமாகிவிட்டார்.  அதனால் ஆண்டாள் நாச்சியாரால் அக்காரஅடிசில் செய்து, வேண்டுதலை நிறைவேற்ற இயலவில்லை.

இறைவனிடத்தில் கோரிக்கை வைத்து வேண்டிக் கொண்டால், பிரார்த்தனை நிறைவேறியதும் நாம் சொன்ன வேண்டுதலைச் செய்து விட வேண்டும்.  நம்மால் செய்ய இயலவில்லை என்றாலும், நம்மைச் சார்ந்தவராவது நமக்குப் பதில் செய்துவிட வேண்டும் அல்லவா!?  அவ்வாறு, ஆண்டாள் வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முனைந்தார் ஸ்ரீமத் ராமானுஜர்.  

ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோவில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப, நூறு தடா (தடா என்றால் அண்டா) முழுக்க அக்காரவடிசலும் (கல்கண்டு சர்க்கரைப் பொங்கல்), வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார்.  ஆண்டாள் எண்ணிய செயலை இவர் நிறைவேற்றினார்.

நூறு தடாவில் அக்கார அடிசில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில், கள்ளழகருக்கு நடைபெற்று வருகிறது. இதையே பிற்காலத்தில் ஏனைய கோயில்களிலும் கொண்டாடத் தொடங்கினார்கள். அவ்வகையில் அழகரெனும் பேர் கொண்டு சேவை சாதித்தருளும் மதுரை கூடலழகர் சந்நிதியிலும் இன்று நூறு தடா அக்காரஅடிசில்  கைங்கரியம் நடைபெற்றது.

Leave a Reply