பிறர் பயன்பட வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

“நீண்ட காலத்துக்கு தான் வாழ்வதைவிட தமிழ் வாழ்வது நல்லது என்றுதான் அவ்வைக்கு நெல்லிக்கனியை அளித்தான் அதியமான். “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்ற சொல், பதவி இருக்கும்போதே பணம் சேர்த்துக் கொள் என்ற பொருளைக் கொண்டதல்ல. உள்ளமும் புறமும் அறத்தால் சுவாசித்து செயல்பட்டு புகழைச் சூட்டிக் கொள்ளலாம் என்று பொருள்.

கவிதையைப் போர் வாளாக எடுத்து விடுதலைப் போரை நடத்தியவன் பாரதி. ஆயுத எழுத்தை மட்டுமல்ல, தமிழின் மொத்த எழுத்துகளையும் ஆயுதமாக்கினார் அவர்.

மாமேதை லெனின் இறந்தபோது இரைப்பை நின்றுவிட்டது என்றோ, சுவாசம் நின்றுவிட்டது என்றோ கூறவில்லை. சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்றுதான் அறிவித்தனர்.

உறவினர்கள், நண்பர்கள் என எல்லா உறவுகளை விடவும் விலகாத உறவு எது என்று கேட்டால், அதற்குக் கிடைக்கும் விடைதான் “புத்தகங்கள்’. மனித ஆத்மாவாக இருந்த காந்தியடிகளை மகாத்மாவாக ஆக்கியது புத்தகங்கள்தான்.

ஜி.யு. போப் எழுதிய எல்லாக் கடிதங்களிலும் திருவாசகத்தின் வாசகங்களின் மேற்கோள் இல்லாமல் இருக்காது.

எல்லா சமயங்களும் தமிழை வளர்த்துள்ளன. அன்பைத்தான் அனைத்துச் சமயங்களும் வலியுறுத்தியுள்ளன.

பிறர் துன்பத்தை தன் துன்பமாகப் பாவித்து அவர்களுக்கு உதவுபவனையே தனது படைப்புகளிலே மிகச் சிறந்த – வலிமை மிக்க படைப்பாக ஆண்டவன் கருதுகிறான். பிறர் வாழ – பிறர் பயன்பட வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை.

இன்று தமிழ்ப் பண்பாட்டுத் தளம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இங்கு முதியோருக்கும் காப்பகம் இருக்கிறது, குழந்தைகளுக்கும் காப்பகம் இருக்கிறது. பண்பாட்டுத் தளத்தில் நாம் எங்கே நிற்கிறோம்? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆணி வேரான “அன்பு’ இடம் பெயர்ந்திருக்கிறது.

வாழ்க்கையை உணர்த்தும் படைப்புகள் வெளியாக வேண்டும். அவைதான் சிறந்த படைப்புகள். அத்தோடு நாம் வாழும் பண்பாட்டையும் அவை பறைசாற்ற வேண்டும்’ என்றார் பொன்னம்பல அடிகளார்.

மாநாட்டின் இந்த நிகழ்வுக்கு கவிஞர் கடவூர் மணிமாறன் தலைமை வகித்தார். மணப்பாறை நாவை சிவம் வரவேற்றார். தமிழ்த்தாய் அறக்கட்டளை பொதுச் செயலர் உடையார்கோயில் குணா நன்றி கூறினார்.

காலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

தஞ்சாவூர் குரு. சுப்பிரமணிய சர்மாவுக்கு அருளாளர் விருதும், கோவை கோகுலனுக்கு தமிழியக்கப் பணி விருதும், வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்ப் பணி விருதும், கள்ளக்குறிச்சி அரங்க ஜெயபாலனுக்கு கம்பன் காவலர் விருதும், புதுக்கோட்டை தங்கம் மூர்த்திக்கு படைப்பிலக்கிய விருதும், பெங்களூர் பி. சேதுவுக்கு மனிதநேய விருதும், ஆந்திரப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராம. ஜீவானந்தத்துக்கு ஆய்வாளர் விருதும், பொற்படாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அ. மனமோகனதாசனுக்கு சேவை விருதும், ஆந்திரத்தைச் சேர்ந்த இரா. முரளி, கர்நாடகத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு ஆகியோருக்கு மனித நேய விருதுகளும் அளிக்கப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் மாநில வணிகவரித் துறை அமைச்சர் சீ.நா.மீ. உபயதுல்லா பங்கேற்கிறார். உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை, தமிழ்த் தாய் அறக்கட்டளை ஆகியவை இந்த மாநாட்டை ஒருங்கிணைத்துள்ளன.

Leave a Reply