அர்ச்சகர்கள் வயிற்றில் அடிப்பதா? அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

செய்திகள்
hindumunnani - Dhinasari Tamil

அர்ச்சகர்கள் வயிற்றில் அடிப்பதா? இந்து சமய அறநிலையத் துறை அதிகார துஷ்பிரயோகம்.. இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்று மாநில துணைத் தலைவர் V.P . ஜெயக்குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:

அர்ச்சகர்கள் தட்டில் காசு போடக்கூடாது எனவும், உண்டியலில் மட்டுமே காணிக்கை செலுத்த வேண்டும் எனவும் வாய் மொழியாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தெரிவித்ததாக செய்திகள் வந்தன. தமிழகத்தின் ஆலயங்களில் பூஜைகள் செய்து இறை பணியை லட்சக்கணக்கான அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகள் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை மிகமிகக் குறைந்த தொகையையே ஊதியமாக வழங்கி வருகிறது. இன்னும் சில ஆலயங்களில் அவர்களுக்கென ஊதியம் ஏதும் வழங்கப்படுவதில்லை. மேலும் பல கோவில்களில் அந்த கோவிலுக்கான பூஜைக்கான பொருட்களை இவர்களே வாங்கி பூஜைகள் செய்து வருகின்றனர். இவ்வாறாக குறைந்த ஊதியத்திலும், ஊதியில்லாமலும் இறைபணி செய்து வரும் பெரும்பாலான அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளின் வாழ்க்கை தீபாரதனை தட்டில் வரும் காணிக்கைகளை வைத்தே நடக்கிறது என்பது வேதனையான உண்மை.

இந்து தர்மத்தில் அர்ச்சகருக்கு காணிக்கை தருவது என்பது நீண்ட கால வழக்கம். அவ்வாறு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை முழுக்க முழுக்க அர்ச்சகர் மற்றும் பூஜாரிகளுக்கே சொந்தமானது. ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் புணரமைப்பு பணிகளுக்காக ஆலயத்தில் வைத்திருக்கும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். உண்டியலில் வரும் தொகை முழுக்க முழுக்க ஆலயத்தின் நிர்வாகப் பணிக்கே தவிர அர்ச்சகருக்கு அல்ல.

இவ்வாறான சூழ்நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு தீபாரதனை தட்டில் செலுத்தும் காணிக்கைகளை உண்டியலில் போடச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். உடனடியாக அறநிலைத்துறை இது போன்ற உத்தரவுகள் வழங்கியிருந்தால் திரும்பப் பெற வேண்டும். மிகவும் ஏழ்மை நிலையில் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இறை பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அர்ச்சர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு எந்த விதமான இடைஞ்சலும் செய்யக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply