ஸ்ரீரங்கம் ஆதிபிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

செய்திகள்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் பங்குனி ஆதிபிரம்மோற்சவ திருவிழா துவஜாரோஹனத்துடன்(கொடியேற்றம்) தொடங்கியது.. இந்த உற்சவம் ஸத்யலோகத்தில் பிரம்மாவால், அவரே எம்பெருமானுக்கு நடத்தி அனுபவித்து வந்த திருவிழாவாகும்.

பின்னர், பிரம்மாவிடமிருந்து அயோத்திக்கு எழுந்தருளப் பண்ணிய இக்ஷவாகு வம்சத்தினர் இதைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்! பின்னர், எம்பெருமானை ப்ரணவாஹார விமானத்துடன் விபீஷணன் ஸ்ரீராமரிடமிருந்து பெற்றுக் கொண்டு லங்கை நோக்கி செல்கையில், திருவரங்கத்தில் எம்பெருமானை எழுந்தருளப் பண்ணும் நிலை ஏற்படுகிறது!

அந்த சமயம் எம்பெருமானுக்கு “பங்குனி உற்சவம்” நடைபெறும் காலமாகையால், விபீஷணனே முதன்முதலில் ஸ்ரீரங்கத்தில் நடத்தியதாக “ஸ்ரீரங்க மஹாத்மிய” வரலாறு! இந்த உற்சவமானது, பெரியபெருமாளின் அவதார நக்ஷத்திரமான ரோஹிணி யில் தொடங்குகிறது!

உறையூர் கமலவல்லி நாச்சியாரின் அவதார நக்ஷத்திரமான ஆயில்யம் அவருடன் சேர்த்தி கண்டருளி (6ம் திருநாள் 02.4.23)|அனுக்ரஹித்தும், பெரியபிராட்டியார் அவதரித்த உத்திர நக்ஷத்திரத்தன்று (9ம் திருநாள் 05.4.23) தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி பிராட்டியுடன் திருமஞ்சனம்/சேர்த்தி கண்டருளியும், தம்மை சரணாகதி அடைந்த நம் எல்லோரையும் பொங்கும் பரிவுடன் அருள்பாலிக்கும் ஒரு கருணைமிகு பிரம்மோற்சவம் ஆகும்!

பெருமாள் திருவரங்கம் வந்தடைய தர்மவர்மா எனும் சோழ மன்னனின் கடுந்தவமும் ஒரு காரணம்!

இந்த மன்னனின் குலக்கொழுந்து கமலவல்லி நாச்சியார் பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தில் அவதரித்தவள்! இவள் அரங்கனிடத்து அன்பு மிகக் கொண்டு கலந்தவள். இந்த தாயாரை, அவளது திருநக்ஷத்திரத்தன்று அனுக்ரஹிக்க, உறையூருக்கே எழுந்தருளி நாச்சியாருடன் சேர்த்திசேவை கண்டருளி கௌரவித்தான் அழகிய மணவாளன் – நம்பெருமாள்!

இந்த சம்பவம் முடித்து ஶ்ரீரங்கம் திரும்புகையில், ஶ்ரீரங்கநாச்சியார் சன்னதி ஏளும்போது அங்கே ப்ரணய கலஹம் எனும் தெய்வீக ஊடல் வைபவமாக அமர்க்களப்பட்டு, பின் நம்மாழ்வார் சமாதானம் செய்ய, ஊடல் முடிந்து கூடல் எனும் தெய்வீக சேர்த்தி ஆனது, இந்த மண்ணுலகம் உய்ய!

பிராட்டியாரோடு சேர்ந்த எம்பெருமான் தான் பரம்பொருள்! எப்போதுமே தம் திருமார்பினை விட்டு அகலாத தாயாருடனே இருந்தாலும், இந்த ஒருநாள் மட்டும் நிதர்சனமாக அருகருகே நெருக்கமாய் அமர்ந்து, ஆண்டுக்கொருமுறை அருள்பாலிக்கும் – இந்த விசேஷ “சேர்த்தி சேவை” ஒரு பரிவு, பொங்கும் பரிவு!!

இதனை நன்கறிந்தவர் ஸ்ரீ ராமானுஜர்! இந்நன்னாளில் தான் அவர் தாம் இயற்றிய ஶ்ரீரங்க கத்யம் வைகுண்ட கத்யம் சரணாகதி கத்யம் என்ற மூன்றினை திவ்ய தம்பதிகளின் திருவடிகளில் சமர்ப்பித்து, இந்த உலகம் உய்ய பிரார்த்தித்தார்!!

Leave a Reply