42 ஆண்டுகளுக்குப் பிறகு கரிகிருஷ்ண பெருமாள் கோயில் மரத்தேர் வெள்ளோட்டம்

செய்திகள்

ஆண்டு தோறும் சித்திரை மாதம் இக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாள் கும்பமுனிமங்கலம் பகுதியில் உள்ள அகத்தீஸ்வரரும், கரிகிருஷ்ண பெருமாளும் சந்திக்கும் சந்திப்பு திருவிழா பிரசித்தி பெற்ற விழாவாகும். பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள் நடைபெறும் தேர் திருவிழாவில் கரிகிருஷ்ண பெருமாள் பக்தர்களுக்கு வீதியுலா வந்து காட்சி தருவார்.

÷இக்கோயிலுக்கு சொந்தமாக இருந்த மரத்தேர் பராமரிப்பின்றி சிதிலமடைந்ததால் 1969-ம் ஆண்டு தேர் திருவிழா நின்று போனது. அதன் பின்னர் கோயிலும் சிதிலம் அடைந்ததால் 1983-ம் ஆண்டு முதல் பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் நின்று போனது. இதன் பின்னர் 2002-ம் ஆண்டு இக்கோயில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.

÷இக்கோயிலுக்கு சொந்தமான பழமை வாய்ந்த மரத்தேர் சிதிலமைடந்து வீணாய் போனதன் காரணமாக பூந்தேரில் தேரோட்ட விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2009-ம் ஆண்டு இக்கோயிலுக்கு புதிதாக மரத்தேர் செய்ய திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு ரூ.1 கோடி மதிபீட்டில் புதிய மரத்தேர் செய்யப்பட்டது.

புதிதாக செய்யப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய மரத்தேரில் கரிகிருஷ்ண பெருமாள் அமர்ந்திருக்க தேரை வடம் பிடித்து பொதுமக்கள் இழுத்தனர். தேர் நிலையில் இருந்து மெல்ல ஆடி, ஆடி அசைந்து புதிய பஸ் நிலையம், தாயுமான் செட்டி தெரு, ஹரிஹரன் பஜார் சாலை வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது.

÷தேரோட்ட நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பாஸ்கர்சுந்தரம், பொன்னேரி பேரூராட்சி தலைவர் பத்மாவதிவேங்டகம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஈஸ்வரிராஜா, பொன்னேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் சங்கர், கரிகிருஷ்ண பெருமாள் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், தேர் திருப்பணி குழுத் தலைவர் தசரதநாயுடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

÷தேரோட்டம் காரணமாக ஹரிஹரன் பஜார், புதிய பஸ் நிலையம், சிவன்கோயில் தெரு, தாயுமான் செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 9 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *