கள்ளழகர் நாளை திங்கள் கிழமை ஆற்றில் இறங்குகிறார்

செய்திகள்

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அழகர்கோயில் மலையில் எழுந்தருளியுள்ள கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 14-ம் தேதி தோளுக்கினியனாக அருள்பாலித்த சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் திருக்கோயிலுக்குள் சென்றார்.

இதேபோல 16-ம் தேதி காலை வரை கள்ளழகர் திருக்கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் மாலை 6.35 மணிக்கு தங்கப்பல்லக்கில் தோளுக்கினியானாக மதுரை நோக்கிப் புறப்பட்டார். கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

வழிநெடுகிலும் ஒவ்வொரு மண்டகப்படியிலும் தங்கி அருள்பாலித்த கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி வழியாக மறவர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

பின்னர் கடச்சனேந்தலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வரும் கள்ளழகர் புதூர் அருகே உள்ள மூன்றுமாவடிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வருகிறார். அங்கு அவரை வரவேற்கும் வகையில், மதுரை மக்கள் சார்பில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது வாணவேடிக்கைகள் முழங்க கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கின்றனர்.

அம்பலகாரர் மண்டகப்படியில்…: அதன்பிறகு புதூர் மாரியம்மன் திருக்கோயில், ரிசர்வ்லைன் மாரியம்மன் திருக்கோயில் வழியாக எழுந்தருளி வரும் கள்ளழகர் மாலையில் மாநகராட்சி அண்ணா மாளிகை அருகே உள்ள அவுட்போஸ்ட் அம்பலகாரர் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்.

அங்கும் மதுரை மக்கள் சார்பில் கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் ஒவ்வொரு மண்டகப்படியிலும் எழுந்தருளும் கள்ளழகர் இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் எழுந்தருளுகிறார்.

இதையடுத்து தல்லாகுளம் பகுதியில் விடியவிடிய பக்தர்கள் கருப்பசாமி வேடம் அணிந்தும், திரிநேர்த்திக்கடன் செலுத்தியும், தண்ணீர் பீய்ச்சியும் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

புதிய தங்கக் குதிரை வாகனம்: திருக்கோயிலில் புதிதாக இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் எழுந்தருளுகிறார்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் அருள்பாலிக்கிறார். அப்போது கள்ளழகருக்கு அணிவிக்கப்படும் பட்டாடை நிறத்தை நாட்டின் வளத்துக்கான அறிகுறியாகவே மக்கள் கருதி வருகின்றனர்.

பட்டாடையுடன் தங்கக்குதிரை வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பாடாகும் கள்ளழகர், தல்லாகுளத்தில் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் திங்கள்கிழமை அதிகாலையில் வைகை ஆற்றை நோக்கிப் புறப்படுகிறார்.

கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் பகுதிக்கு வரும் கள்ளழகருக்கு வைகை ஆற்றில் தனி மண்டகப்படி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆற்றில் தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வரவேற்க அருள்மிகு வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கிறார். இதையடுத்து திங்கள்கிழமை காலை 6.45 மணி முதல் 7 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

ஆற்றில் அழகர் இறங்குவதை முன்னிட்டு வைகை ஆற்று இரு பாலங்கள், கோரிப்பாளையம் ஆகியவற்றில் காலை 7 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

பின்னர் ஆற்றிலிருந்து புறப்படும் கள்ளழகர், ராமராயர் மண்டகப்படியில் தங்குகிறார். அதன்பின் புறப்பாடாகி இரவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருள்கிறார்.

செய்தி: தினமணி

Leave a Reply