பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

செய்திகள்

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதையடுத்து, கோயில் திருவிழா நிறைவுபெற்றது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் அழகர்மலையிலிருந்து மதுரை நோக்கி அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை புதூர் அருகே உள்ள மூன்றுமாவடியில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் சார்பில் எதிர்சேவை நடைபெற்றது.

இதையடுத்து, மதுரை நகருக்குள் வந்த கள்ளழகர் மாநகராட்சி அலுவலகம் உள்ள அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பலகாரர் மண்டகப்படியில் ஞாயிறுக்கிழமை மாலை எழுந்தருளினார். அங்கிருந்து மதுரை அருள்மிகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் இரவு எழுந்தருளிய அவருக்கு, திருமஞ்சனமாகி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மாலை சூட்டப்பட்டது. பின்னர், புதிய தங்கக்குதிரை வாகனத்தில் ஆரோகணித்த கள்ளழகருக்கு பச்சைப் பட்டு சாத்தப்பட்டது. சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை வேஷ்டியிலும், பசுமை வளத்தை நாட்டில் நிலவச் செய்யும் வகையில் பச்சைப் பட்டு சாத்தியும் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றை நோக்கி ஞாயிறு நள்ளிரவில் புறப்பட்டார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண வந்த பக்தர்கள்

காலை 6.15 மணிக்கு கள்ளழகர் எழுந்தருளும் ஆற்று திருக்கண் மண்டபத்தில் வெள்ளிக் குதிரையில் அருள்மிகு வீரராகவப் பெருமாள் எழுந்தருளினார். இந்நிலையில், காலை 6.40 மணிக்கு ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிக்கு வந்த கள்ளழகர் அங்கிருந்த திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளினார். ôலை 6.45 மணிக்கு ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட திருக்கண் மண்டபத்தை நோக்கி அவர் ஆற்றில் இறங்கினார்.

ஆற்றில் இறங்கிய அழகரின் குதிரை மூன்று முறை குலுங்கியது. இதையடுத்து, பக்தர்கள் பட்டாசு வெடித்து அழகரை வரவேற்றனர்.

ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கிருந்த திருக்கண் மண்டபத்தைச் சுற்றி வந்தார். பின்னர், காலை 6.50 மணிக்கு திருக்கண் மண்டபத்தில் நுழைந்தார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கும் வகையில் வெள்ளிக் குதிரை குலுங்கியது. கள்ளழகர் வீரராகவப் பெருமாளைச் சுற்றிவந்து, மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர், கள்ளழகர் காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, ராமராயர் மண்டபம் நோக்கிச் சென்றார். பகல் 1.45 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகர் மீது பக்தர்கள் நீர் பீய்ச்சியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமராயர் மண்டகப்படியிலிருந்து பிற்பகலில் புறப்பட்ட கள்ளழகர், வண்டியூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோயிலை அடைந்தார்.

செய்தியை முழுமையாகப் படிக்க: தினமணி 

Leave a Reply