மதுரையில் கள்ளழகரின் தசாவதார ஸேவை

செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் புதிய தங்கக் குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து ராமராயர் மண்டகப்படி வழியாக ஒவ்வொரு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளிய கள்ளழகர் வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் திங்கள்கிழமை இரவு எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை தரிசித்தனர்.

இந்த நிலையில், வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் கள்ளழகருக்கு திருமஞ்சனமாகி, சேஷ வாகனத்தில் வண்டியூர் அருகே வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்துக்குப் புறப்பட்டார்.

தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து மண்டூக முனிவரின் மாதிரி உருவம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் நாரைக்கு முக்தி அளிக்கும் வகையில் இரு கொக்குகளும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தேனூர் மண்டபத்தில் பூஜைகள் நிறைவுற்ற நிலையில் அங்கிருந்து மாலை 3 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் கருடவாகனத்தில் புறப்படத் தயாரானார். அப்போது பல்லக்கைத் தூக்க சேவந்தாங்கிகள் தயாரானார்கள். ஒரு பகுதியினர் பல்லக்கைத் தூக்கிய நிலையில், மறுபகுதியினர் பல்லக்கைத் தூக்கவில்லை.

இதனால் பல்லக்கு ஒருபுறம் சாய்ந்தது. அதிலிருந்த பட்டரும் கீழே விழுந்தார். சுவாமிக்குச் சாற்றியிருந்த மாலைகள் அனைத்தும் கீழே விழுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே சேவந்தாங்கிகள் பல்லக்கை நேராக நிமிர்த்தி மீண்டும் தூக்கினர். இச்செயலைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு சேவந்தாங்கிகள் கருட வாகனத்தில் வீற்றிருந்த சுந்தரராஜப் பெருமாளை வண்டியூர் அனுமார் திருக்கோயிலுக்கு தூக்கி வந்தனர்.

அங்கு அங்கப்பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர் ராமராயர் மண்டகப்படியை நோக்கி சுந்தரராஜப் பெருமான் பயணமானார். இரவில் ராமராயர் மண்டகப்படியில் தங்கிய அவர் நள்ளிரவு முதல் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

செய்தியை முழுமையாகப் படிக்க..: தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *