அதிசயங்கள்(Miracle)

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

அதற்கான அடிப்படை காரணங்கள் அதர்மம் மேலோங்கி விட்டது. பாபங்கள் மனிதர்களை சுலபமாக அண்டின. அவரவர்கள் தங்களை பலவீனர்களாக உணர்ந்து கொண்ட அவல நிலையை தாங்கள் இயற்றிய பாசுரங்கள், க்ரந்தங்களில் வெளியிட்டனர். ஆனாலும் சிஷ்ய வர்க்கங்கள் தங்களுடைய திருப்திக்காகவும், சந்தோஷத்திற்காகவும் ஆழ்வார், ஆசார்யர்களின் பெருமையை மிகைப்படுத்தி அவர்கள் பல அதிசயங்களை நிகழ்த்தினர் என்று உண்மைக்கு புறம்பான செய்திகள பரப்பி வந்துள்ளனர்.

கிருத, திரேதா யுகத்தில் அநேகர் வேதத்தை ஆறு அங்கங்களோடு முறையாக பயின்று நல்ல தேர்ச்சி பெற்று யாக யக்ஞங்கள் செய்து சில அபூர்வ சித்திகளை பெற்றனர். சிலர் தங்கள் ஆசார்யனுக்கு நல்ல சு•ரூஷை செய்து அவருடைய அநுக்ரஹத்தால் நல்ல சித்திகளை பெற்றனர். வேதமந்திர பூர்வமான சில வழிமுறைகளை மேற்கொண்டால் ஒருவனுக்கு சில சித்திகள் கைகூடும். அவன் உபாசிக்கும் தேவதை; கடைபிடிக்கும் வழிமுறை. கலியுகத்தில் அதர்மங்களும் பாபங்களும் சூழ்ந்து கொண்ட நிலையில் அத்தகைய வழிமுறைகள் தடுமாற்றங்களை சந்தித்ததில் வியப்பில்லை.

ஆனாலும் மனித இனம் அதிசயங்களை காண விழைகிறது. அதை மறுக்கவும் செய்கிறது. நடைமுறை வாழ்க்கையில் சிலர் அதிசயங்களை நிகழ்த்தியதாகவும், நிகழ்த்தி வருவதாகவும் கேள்விப்படுகிறோம். இவர்களின் சாதனைகளை எவ்வாறு கணிப்பது. இவர்கள் யார்? எத்தகையவர்கள்?

மாயாஜால காட்சி அரங்கில் மந்திரவாதி பல ஜாலங்களை காண்பிக்கிறான். ஒரு காலி பெட்டியில் பல பொருட்களை வரவழைக்கிறான். வியக்கும்படி பல கார்யங்களை செய்தாலும் தான் செய்தது அனைத்தும் தந்திரமே என்று ஒப்புக் கொள்கிறான். தெருவில் வழிபோக்கன் போல் பிழைக்கும் மந்திரவாதி வெறும் பாம்புத்தோல், முயல் தோலை எல்லோர் முன்னிலையில் காண்பித்து அவற்றிலிருந்து உயிருடன் பாம்பையும், முயலையம் தோற்றுவித்து பணவசூல் செய்து பிழைத்துக் கொள்கிறான். அவனும் மந்திரம் கால் மதி முக்கால் என்று தன்னுடைய சாதனைகளுக்கு சமாதானம் கூறுகிறான்.

இவர்களுக்கு அப்பாற்பட்டு சிலர் தங்களை யோகிகளாக அறிமுகப்படுத்தி நம்மிடையே வலம் வருகின்றனர். சிலர் சில அதிசய காட்சிகளை நிகழ்த்தியதோடல்லாமல் தங்களை வானத்திலிருந்து பூமியில் இறங்கிய அவதார புருஷர்களாக சித்தரித்துக்கொண்டு ஜனங்களின் சிந்தனா சக்தியை பாழடிக்கின்றனர். பலவீனர்கள் பலர் இத்தகைய போலிகளை எளிதாக நம்பி விடுகின்றனர். அபிமான சிஷ்யர்களாக மாறி விடுகின்றனர். இவர்கள் சிந்திக்கத் தவறியது இவ்வாறு இருக்கிறது.

நாம் காணும் ப்ரபஞ்சம், நம்மை சுற்றி இருக்கும் இயற்கை இவை இரண்டும் பகவான் விதித்த சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இயங்கி வருகின்றன. அவைகள் நேரம், பாதை ஏதும் தவறாமல் மிகவும் சரியாக காணப்படுகிறது. பகல் இரவு மாற்றம் பருவநிலைகள் தடம் புரண்டதில்லை. ஆகாயத்தில் பறவை பறக்கும். மனிதன் பறக்க முடியாது. விஞ்ஞானத்தின் துணைகொண்டு ஒரு ஊர்தியில் மனிதன் ஆகாயத்தில் உலாவ முடியும். அதுவல்லாமல் ஒருவன் பறவை போல் நானும் பறப்பேன் என்றால் புத்திசாலியானவன் அதை நம்பக் கூடாது. மறுக்க வேண்டும். ஏனென்றால் ஆகாயத்தில் பறந்து காட்ட முடியும் என்பது இயற்கை சட்ட திட்டங்களுக்கு விரோதமானது.

உலகத்தில் எப்பேர்ப்பட்ட நிபுணனாக இருந்தாலும் அவன் இயற்கை சட்டதிட்டங்களை வளைத்து சாதனை ஏதும் புரிய முடியாது. இதை அதர்வ வேதம் தெளிவாகக் கூறுகிறது. (அதர்வ வேதம் 5&11&3)

அரசாங்கம் விதித்த சட்டதிட்டங்களை மக்கள் புரட்சி செய்து முறியடிக்கலாம். ஆனால் இயற்கை விதித்த சட்ட திட்டங்களை யாராலும் முறித்து எந்த சாதனையும் படைக்க முடியாது. ஏனென்றால் பகவானே இயற்கையையும் ப்ரபஞ்சத்தையும் தன் கட்டுக்குள் வைத்து ஆள்பவன். (ரிக் வேதம் 9&102&5)

பின்வரும் வேத மந்திரம் மேலே சொன்ன கருத்தை உறுதிபடுத்துகிறது. (ரிக் வேதம் 1&25&10)

பலவீனர்கள், சிந்திக்கும் திறனில்லாதவர்கள் தான் மந்திரவாதிகள், மாயாஜாலம் புரிபவர்கள், பாபாக்கள் போன்ற போலிகள் புரியும் ஜாலங்களைக் கண்டு தங்கள் புத்தியை பறி கொடுக்கின்றனர். இயற்கை சட்டதிட்டங்களை மீறி யாரும் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. அப்படி செய்து காட்டினால் அது போலித்தன்மை வாய்ந்ததாகும். அதை செய்பவர் ஒரு ஏமாற்றுப் பேர் வழி. ஒரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டினால் அந்த கார்யத்திற்கு உறுதுணையாக இருப்பது ஒன்று விஞ்ஞான ரீதியான வழிமுறை அல்லது ஜாலவித்தை. அதன் ரஹஸ்யம் செய்பவனுக்கு மட்டும் தான் தெரியும். அது மற்றவர்களுக்கு தெரியாத வரை சாதனை புரிபவன் அதிசய புருஷனாகவும் அவதார புருஷனாகவும் கருதப்படுகிறான். அவனை தெய்வத்திற்கு சமமாக வழிபடுகின்றனர். அவன் புகழ்பாடி பஜனை செய்யுமளவிற்கு பலவீனர்கள் ஏராளமாக உள்ளனர்.

பாமர மனிதன் இத்தகைய ஏமாற்று வலையில் சிக்கிக் கொண்டால் புரிந்து கொள்ளலாம். நல்ல படித்தவர்கள் கூட இவர்களின் வலையில் சிக்கி தங்களுடைய சொந்த சிந்திக்கும் திறனை இழந்து நிற்கின்றனர். கடவுளின் மறு அவதாரம், மாயாஜால யோகிகள், அவதார புருஷர்கள் (பாபாக்கள்) என்று புகழப்படும் இத்தகையோர்களை எதிர்கொண்டு சில விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

அதிசயம் செய்து காட்டுபவர்கள் வேறிடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு மாறுபட்ட வேளையில் கைவசம் ஏதும் உபகரணங்களில்லாமல் அவர்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியுமா என்று பரிட்சை பண்ண வேண்டும். மாறிய சூழ்நிலையில் போலிகளின் சாயம் வெளுத்து விடும்.

தற்போது விஞ்ஞானம் வெகுவாக முன்னேறி இருக்கிறது. விஞ்ஞான ரீதியாக பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. விஞ்ஞான சட்டதிட்டங்கள் ப்ரபஞ்சம், இயற்கை சட்ட திட்டங்களை அநுஸரித்துள்ளன. விஞ்ஞானம் தனக்கென்று வகுத்த சட்டதிட்டங்களின் அடிப்படையில் அதன் சாதனைகள் நாளுக்கு நாள் விரிவாக்கம¢ காண்கிறது. விஞ்ஞான ரீதியாக சாதனை படைப்பவர்கள் தங்களை கடவுளாகவோ அல்லது கடவுளின் பிரதிநிதி என்றோ சொல்லி கொள்ளவில்லை.

விஞ்ஞானத்திலிருந்து வித்தியாஸப்பட்டது ‘யோகா’ என்ற பயிற்சி முறை. இது ஆன்மீகத்தின் ஒரு கிளை. இந்த பயிற்சிமுறைக்கு ஆதாரமாக இருப்பது தியானம். இதில் நல்ல அப்யாஸம் பெற்றவன் ‘யோகி’ என்று புகழ் பெறுகிறான். அவனுடைய பேச்சு, கருத்துக்கள், உபதேசங்கள் அனைத்தும் தெய்வீகத்தன்மையுடன் கவர்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிறந்த யோகி தன்னுடைய புத்தி திறமையால் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் ஆழ்ந்து சிந்தித்து பார்க்க முடியும். இது ஒரு வகை சிந்தனாசக்தி. இதன் மூலம் சில அதிசய உணர்வுகள் ஒருவனுக்கு கிட்டும்.

ஒரு சாதாரண மனிதன் முன்பு ஒரு யோகி சிறந்த அவதார புருஷராக காட்சியளிப்பதில் வியப்பில்லை. யோகி என்பவன் கடவுள் அல்ல. மனிதன் தான். அவன் ஆன்மீக ரீதியாக வழிகாட்டியாக இருக்கலாம். இன்று ஆன்மீகத்துறை பெரிய வர்த்தக துறையாக காட்சியளிக்கிறது. சிலர் ஸ்வாமிகள், சிலர் வம்சாவளியாக குருமார்களாக அந்தஸ்து வகிக்கின்றனர். இவர்களில் போலி சாமியார்களும் அடக்கம். இவர்கள் அனைவரும் பணம் வசூல் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், இவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களை அண்டிய சிஷ்ய வர்கக்ங்களை முட்டாள்கள் ஆக்குவதில் வல்லுநர்கள். இந்த போட்டியில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை விமர்சித்து, தாக்கி தங்களை சார்ந்த சிஷ்ய வர்க்கங்களின் மனதில் பகைமை உணர்வை வித்திடுகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் ஒரு சராசரி மனிதன் யார் உண்மையான யோகி, உண்மையான துறவி, யார் யார் போலிகள் என்பதை பாகுபடுத்திப் பார்க்க இயலாது குழம்பி இருக்கிறான்.

செய்தி: ஆதிப்பிரான் ( ஏப்ரல் 2011) இதழ்

Leave a Reply