திருப்புல்லாணி ஸ்ரீஆதிஜெகன்னாதப்பெருமாள் கோவில் தேரோட்டம்

செய்திகள்

இத்திருக்கோவிலின் சைத்ரோத்ஸவம் என்னும் சித்திரைத் திருவிழா இம்மாதம் 7-ம் தேதி சனிக்கிழமை கணபதி பூஜையுடனும்,மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடனும் தொடங்கியது.

விழாவினைத் தொடர்ந்து தினசரி காலை,மாலை இரு வேளைகளிலும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்ததுடன் திருவீதி உலாவும் வந்தார்.

இம்மாதம் 11-ம் தேதி ஸ்ரீபட்டாபிஷேக ராமசுவாமியும் ஸ்ரீஆதிஜெகன்னாதப் பெருமாளும் கருட வாகனத்தில் காட்சியளித்தனர். 13-ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை அருள்மிகு சீதாதேவியுடன் ஸ்ரீராமபிரான் மற்றும் ஸ்ரீலெட்சுமணர் தேரில் பவனி வந்தனர்.

தேரோட்டத்தினை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் வி.மகேந்திரன் வடம் பிடித்து இழுத்துத் துவக்கி வைத்தார்.

சமஸ்தானத்தின் செயல் அலுவலர் எம்.எஸ்.யு.மாதாடு பங்கன், கோவில் கண்காணிப்பாளர் கண்ணன்,திருப்புல்லாணி ஊராட்சித் தலைவர் ராதிகா முனியசாமி ஆகியோர் உள்பட பலர் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செவ்வாய்க்கிழமை ஸ்ரீபட்டாபிஷேக ராமசுவாமியும்,ஸ்ரீஆதிஜெகன்னாதப் பெருமாளும் ஆதி சேது எனப்படும் சேதுக்கரையில் தீர்த்தமாடும் வைபவம் நடைபெறுகிறது.

புதன்கிழமை இரவு புஷ்பச்சப்பரத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் குழுவினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *