புண்ணியம் தரும் புரட்டாசி

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

திருப்பதி, திருவரங்கம் உள்ளிட்ட கோயில்கள் மட்டுமின்றி அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் புரட்டாசித் திருவிழா, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளுடன் அமர்க்களப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட வாகனத்தில் பெருமாள் பவனி வருவதே கொள்ளை அழகுதான். புரட்டாசி சனி விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பதை மிகப் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.

நவராத்திரி விழா : புரட்டாசிக்கு மேலும் மகிமை சேர்ப்பது, நவராத்திரி விரதம். புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, மங்கையர் விழா.

விக்ரக ரூபமாக எல்லோருக்கும் அருள் புரிய நாராயணன் திருமலையில் கோவில் கொண்டான். ஆதிசேஷனை மலையாக வளரும்படி செய்து, அதில் சேஷகிரி வாசனாக ஸ்ரீனிவாசனாக நின்ற கோலத்தில் அருள்புரிகிறான். நின்ற கோலம் ஏன் என்றால், அடி முதல் முடி வரை நாம் தரிசித்து மகிழத்தான் நம் பாவம் போக்கும் தரிசனம் அது. அப்படிப்பட்ட திருவேங்கடவன் பூமிக்கு வந்து உதித்த மாதம் புரட்டாசி.

மார்கழி மாதம் முழுதுமே இறைவனை வழிபடும் மாதம்தான் என்றாலும் புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.

மற்ற மாதங்களில் விழாக்கள் ஒன்று, இரண்டு, மூன்று நாட்கள்தான். ஆனால் புரட்டாசியில், பித்ருக்களை வழிபடும் மஹாளய நாட்கள் பதினைந்து. நவராத்திரி ஒன்பது நாட்கள். சனிக்கிழமைகள் நான்கு அல்லது ஐந்து நாட்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இரவு நேர பெருமாள் கருடசேவை வீதியுலா, நவராத்திரியில் இரவு நேர அம்பிகை வழிபாடு எல்லாம் மனமகிழ்சியும் உற்சாகமும் அருளும் தரவல்லது. திருக்கோயில்களில் பெருமாள், பிராட்டிக்கு உற்ஸவம் கோலாகலமாக நடைபெறுவது போல், கல்யாண உற்ஸவமும் பல இடங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *