”த்ராவிடம்” – திராவிட நல் திருநாடு!

ஆன்மிக கட்டுரைகள்

”த்ராவிடம்”

மொழிகளை ஆய்வு செய்வதாகக் கிளம்பிய ஒரு வெள்ளைக்காரப் பாதிரி ஆரிய – திராவிட இனவாதத்திற்கு வித்திட்டுச் சென்றார்.தந்த்ர வார்த்திக நூலில் குமாரிலர் கையாண்டதை ஆதாரமாகச் சொல்கிறார்; அவருக்கும் முற்பட்ட வராஹ மிஹிரர் திராவிடத்தை ஒரு பிராந்தியச் சுட்டாகப் பயன்கொண்டது அவர் கண்ணுக்குப் புலப்படவில்லை போலும்! லயோலா கல்லூரி ஆய்வுகளும் இதே தரத்தில் அமைவதில் வியப்பில்லை. இது போன்ற ஆய்வுகளின் நீட்சியே, தான் கலெக்டராக இருந்த நெல்லையின் சர்ச்சுகளில்கூடத் தீண்டாமையை ஒழிக்க வக்கில்லாத ஆஷ் துரையை சமூக நீதிக் காவலராக இப்போது முட்டுக்கொடுத்து நிறுத்தியுள்ளது.

உண்மையில் சங்கத மொழியை வெறுப்பவர் ’த்ராவிட’ எனும் சொல்லைக் கட்டாயம் ஆதரிக்கக் கூடாது. ஏனெனில் அது வடமொழிவாணர்கள் மட்டுமே தொடர்ந்து பயன்கொண்ட சொல்.
இது தமிழில் புகுந்தது 10ம் நூற்றாண்டுக்குப் பின்னரே, தமிழின் சமய நூல்களே இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளன. அவற்றுக்கு முற்பட்ட தொல் இலக்கியங்களில் ‘திராவிட’ எனும் சொல்லுக்கு இடமில்லை.

வடநூலார் பொதுவாக பாரத நிலப்பரப்பை ‘த்ராவிடம்’, ’கௌடம்’ எனும் இரு பிரிவாக்கித் தென்னகத்தை ‘த்ராவிடம்’ என்றும், வடபுலத்தை ‘கௌடம்’ என்றும் சொல்வர் . ஆனால் ‘த்ராவிடம்’ தமிழகத்தை மட்டுமே குறிக்கப் பயனாவதும் உண்டு; அதுபோல ‘கௌடம்’ வங்க மொழி பேசப்படும் வங்கப் பிராந்தியத்தைச் சுட்டவும் பயனாகும். வங்கத்தில் தோன்றிய பக்தி இயக்கம் ’கௌடீய’ வைஷ்ணவம் எனப் பெயர் பெறுகிறது.
11ம் நூற்0 அல் பிரூனி பிற வரிவடிவங்களோடு த்ராவிட – கௌட லிபிகளைச் சொல்லியுள்ளார்.

வேதாந்தத் துறை செழிக்கத் தோன்றிய பண்டைய ஆசாரியர்கள் இருவர் – ஒருவர் ‘த்ரவிடாசார்யர்’ , மற்றவர் ‘கௌடபாத ஆசார்யர்’, ஒருவர் தென்னகத்தில் தோன்றியவர், மற்றவர் வடபுலத்தில். இருவரும் ஆதி சங்கரருக்கும் முற்பட்டவர்கள்.

சங்கத மொழிக்கான நடைகளில் சிறந்த இருவிதங்களில் ஒன்று ‘வைதர்ப’ நடை; மற்றது ‘கௌட’ நடை. சில்ப வாஸ்து பாணிகளுள் ஒன்று ’த்ராவிடம்’; மற்றவை நாகரம், வேஸரம்.

பக்தி இயக்கம் வடபுல மக்களைத் தென்னகம் குறித்து உயர்வாகப் பேசச் செய்துவிட்டது –
ப₄க₃தீ த்₃ரவிட₃ உபஜீ லாயே ராமானந்த₃ |
ப்ரக₃ட கியா கபீ₃ர நே ஸப்த தீ₃ப நவ க₂ண்ட₃||

புராணங்கள் ‘த்ராவிட’ தேசத்தைச் சொல்வன.
ஆதி சங்கரர் [ஸௌந்தர்ய லஹரி] , வராஹ மிஹிரர் [ப்ருஹத் ஸம்ஹிதா] , குமாரில பட்டர் [தந்த்ர வார்த்திகம்] போன்றோர் பிராந்தியச் சுட்டாகப் பயன்படுத்திய ஒரு சொல் ‘த்ராவிடம்’. ’த்ராவிட்’ பிராமணர்களின் ஒரு குடிப்பெயராகவும் விளங்குகிறது, [ராஹுல் த்ராவிட், மணி த்ராவிட்] ‘கௌட ஸாரஸ்வத்’ஒரு குடிப்பெயராவதுபோல். மாளவ தேசத்தவருக்கு ‘மாளவிய’ குடிப்பெயர்; சோழ தேசத்தவர் ‘சோழியர்’.

காஞ்சி கம்பா நதிக்கும் , ஆந்திரத்தின் வடபெண்ணை நதிக்கும் இடைப்பட்ட பிரதேசமான ‘அருவா வடதலை’ நாட்டைத் தனியாக ‘த்ரவிட’ எனும் சொல்லால் வராஹ மிஹிரர் சொல்கிறார், ப்ருஹத் ஸம்ஹிதையில். சேர,சோழ, பாண்டிய தேசங்களைத் தனியாகச் சொல்கிறார். பல்லவர் குறிப்பு சிலம்பில் இல்லாதொழிவதுபோல் பாரதத்தின் பண்டைய நூல்கள் பல்லவர் பற்றிச்சொவதில்லை. காச்மீரத்தின் ராஜதரங்கிணியிலும் ‘த்ராவிட’ பிராந்தியச் சுட்டாகக் காண்கிறது.

மொழிகளை முதலில் ஆராய்ந்த பாதிரி ஏனோ காலத்தால் முற்பட்ட ப்ருஹத் ஸம்ஹிதையை விட்டுவிட்டார்; குமாரில பட்டரின் தந்த்ர வார்த்திகமே அவரது கண்ணில் பட்டதுபோலும்! அதை முன்னிறுத்தி ஆய்வைக் கட்டமைத்துள்ளார்.

அகண்ட பாரதம் போற்றிய ரவீந்திரநாத டாகோர் ஜீ ‘த்ராவிட, உத்கல, வங்கா’ எனுமிடத்தில் தென்னகம் முழுவதையும் குறிப்பதற்காக இச்சொல்லைக் கையாண்டார்.

‘தெக்கணமும், அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’ மனோன்மணீயம் சுந்தரனார் தென்னகத்தைத் ‘தெக்கணம்’ என்றும், குறிப்பாகத் தமிழகத்தை ‘திராவிடம்’ எனவும் ஒரு பிராந்தியச் சுட்டாகவே சொல்கிறார்.

பிற்காலத்தில் தமிழகத்தின் சமயத் துறையில் ‘த்ராவிட’ தமிழ் மொழியைச் சுட்டிக்காட்டுவதாக அமைகிறது –
திராவிட வேதம், திராவிட மாபாடியம், த்ரமிடோபநிஷத் தாத்பர்யம். ‘திராவிட மாபாடியம்’ சித்தாந்த சைவத்தின் மிக முக்கியமான நூல்;
’நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம்’ எனப் பாலேய் தமிழரான ஆழ்வார்களின் பனுவல் போற்றுவார் நாதமுனிகள். தாயுமான சுவாமிகளும் தம் பாடல் ஒன்றில் ‘திராவிட’ எனும் சொல்லைக் கையாள்கிறார்.

வடபுலம் பெயர்ந்த அந்தணர் குடியினர் தாம் தென்பிராந்தியம் சேர்ந்தவர் என உணர்த்த ‘த்ராவிட’ எனும் குடிப்பெயரை இணத்துக் கொண்டனர் [ராஹுல் த்ராவிட், மணி த்ராவிட்] காவிரிப் படுகையிலிருந்து ஆந்திரம் புலம் பெயர்ந்த தமிழ் அந்தணர்களில் ஒரு குழுவினர் ‘புதூர் த்ராவிடர்’. இக்குடியினர் இன்றும் உள்ளனர்.

திராவிடம் – 19ம் நூற்0 வரை இந்திய நூல்கள் எதுவும் இச்சொல்லை இனக்குறிப்பாகச் சொல்லவில்லை; நிலப்பரப்பு, மொழி, சிற்ப அமைதி இவற்றைக் குறிப்பதற்கே இச்சொல் பயனாகி வந்தது.

வெள்ளைக்காரன் வெட்டிய பள்ளம், விழுந்தவன் தமிழன்; இன்னும் எழுந்து வெளிவரவில்லை.

திராவிடர் கழகத்தினருக்கு மானம் என ஒன்று இருக்குமானால் முதலில் அவர்கள் ‘திராவிட’ எனும் சொல்லுக்கு ஒரு முழுக்குப் போட வேண்டும். ஏனெனில் அவர்கள் முழுமூச்சுடன் எதிர்க்கும் ஸம்ஸ்க்ரு’தம், ஹிந்து சமயம், பிராம்மணர் தொடர்புடைய சொல்.

சுய மரியாதைப் புலிகளான இவர்களுக்கு ஒரு செத்தமொழியிலமைந்த பெயர் எதற்கு?

#திராவிடம்_

’ப்ருஹத் ஸம்ஹிதை’ தரும் செய்தி –

உத்தரபாண்ட்ய, மஹேந்த்ராதி விந்த்ய மலயோபகா: சோலா: ||
த்ரவிட, விதேஹ, ஆந்த்ர, அச்மக, பாஸாபர கௌங்கண ஸமந்த்ரிஷிகா: |
குந்தல, கேரல, தண்டக, காந்திபுர…….. ||

இதில் பாண்டிய, சோழ, கேரள, கொங்கணப் பிராந்தியங்களோடு ஒன்றாக ‘ த்ராவிடம்’ இடம் பெறுகிறது. இதில் வராஹமிஹிரர் சொல்லும் ’த்ராவிடம்’ தமிழ் நூல்கள் சொல்லும் ‘அருவா வடதலை நாடு’ என முடிவு செய்யலாம் – காஞ்சி கம்பா நதிக்கும் , ஆந்திரத்தின் வடபெண்ணை நதிக்கும் இடைப்பட்ட பிரதேசம்

Leave a Reply