இரு வரிகளில் வித்தியாசம்! இராமாயணம், மகாபாரதம்!

ஆன்மிக கட்டுரைகள்

மஹாபாரதம் மற்றும் ராமாயணம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

மண்ணால் போர் எனில் பாரதம்.
பெண்ணால் போர் எனில் ராமாயணம்.

சகுனி குழப்பினதால் பாரதம்.
கூனி குழப்பினதால் ராமாயணம்.

அனுமன் கொடிதனில் பறந்ததால் பாரதம்.
அனுமன் கடல்தாண்டி பறந்ததால் ராமாயணம்.

இறைவன் இப்புவி இறங்கி சாரதியானதால் பாரதம்.
இறைவன் இப்புவி இறங்கி சத்திரியனானதால் ராமாயணம்.

பகடையால் பகையெனில் பாரதம்.
பாவையால் பகையெனில் ராமாயணம்.

பிறர் மனைவியை அவமதித்ததால் பாரதம்.
பிறர் மனைவியை அபகரித்ததால் ராமாயணம்.

அவதாரம் புனிதனாய் வலம் வந்தது பாரதம்.
அவதாரம் மனிதனாய் வலம் வந்தது ராமாயணம்.

இறைவன் கீதை தந்ததால் பாரதம்.
இறைவன் சீதை பெற்றதால் ராமாயணம்.

நாயகியை தொட்டு சேலை இழுத்ததால் பாரதம்.
நாயகியை தொடாது சோலையில் வைத்ததால் ராமாயணம்.

ஐவருக்கு ஒருத்தியெனில் பாரதம்.
ஒருவருக்கு ஒருத்தியெனில் ராமாயணம்.

மறைந்திருந்து அம்பெய்து கற்றதால் பாரதம்.
மறைந்திருந்து அம்பெய்து கொன்றதால் ராமாயணம்.

வில்லால் அடித்த வீரனுக்கு விவாகமெனில் பாரதம்.
வில்லை ஒடித்த வீரனுக்கு விவாகமெனில் ராமாயணம்.

கற்புநெறிக்காக பெண் கண்ணை கட்டினதால் பாரதம். 
கற்புநெறிக்காக பெண் கனலில் இறங்கினதால் ராமாயணம்.

கதையில் குருடன் அரசன் எனில் பாரதம்.
கதையை எழுதியது திருடன் எனில் ராமாயணம்.

அரக்கியினால் மதில் ஆன அரண்மனை எரிந்ததால் பாரதம்.
அரக்கியின் மதி கோணலால் அரண்மனை எரிந்ததால் ராமாயணம்.

அரங்கனின் செய்கையால் அபலைக்கு அபயமெனில் பாரதம்.
குரங்கனின் செய்தியால் அபலைக்கு அபயமெனில் ராமாயணம்.

மண்ணின் மயக்கத்தினால் பிளவெனில் பாரதம்.
மானின் மயக்கத்தினால் பிரிவெனில் ராமாயணம்.

உறவுக்குள் சண்டையெனில் பாரதம்.
உறவுக்காக சண்டையெனில் ராமாயணம்

Leave a Reply