தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்த அதிபத்த நாயனார்!

ஆன்மிக கட்டுரைகள்

சோழவள நாட்டிலே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினத்தில் நுழைப்பாடி என்ற கடற்கரை கிராமத்தில் மீனவர் குல மரபிலே திரு அவதாரம் செய்தார் அதிபத்தர். இவர் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார். ஆழ்கடலுள் சென்று தான் பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கென அதைக் கடலிலே விட்டு விடுவதை வழக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

இறைவன் மேல் கொண்ட அன்பின் காரணமாக தன்னால் இயன்ற இந்த செயலை சிவத் தொண்டாக புரிந்து வந்தார். மீன் பிடிப்பதில் அதிபத்தர் வல்லவராக திகழ்ந்தார். இவருடைய இந்தத் தொண்டை உலகம் அறியச் செய்ய ஈசனார் திருவுளம் கொண்டார்.

வழக்கமாக நிறைய மீன் பிடித்து வரும் அதிபத்தருக்கு சில நாள்களாக வலையில் ஒரே ஒரு மட்டும் அகப்படும் அவர் தன் தொண்டில் பிறழாது அதையும் ஈசனுக்கென கடலிலே விட்டுவிடுவார் எவ்வளவு சோதனை வந்தாலும் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார்.

மீன் விற்று பிழைப்பு நடத்தும் அவருக்கு மீன் கிடைக்கததால் மிகவும் வறுமையின் பிடியில் அகப்பட்டார் . ஒரு நாள் மீன் பிடிக்க சென்றார் அன்றும் அப்படியே ஒரு மீனும் அகப்படவில்லை ஒரே ஒரு மீன் அகப்பட்டது அந்த மீன் தங்க மீன் தக தக வென ஜொலித்தது அவருடன் மீன் பிடிக்க வந்தவர்கள் உன்னுடைய கஷ்டத்திற்கு தீர்வு வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த மீனை கடலில் விட்டார்.

அனைவரும் திகைத்தனர் என்ன இப்படி செய்து விட்டாரே என்று அங்கலாய்த்தனர் அதற்கு அதிபத்தர் அவர்களது வார்த்தைகளை சற்றும் பொருட்படுத்தாது என் இறைவனுக்கு அளிக்க பொன் மீன் கிடைத்தற்கு அடியேன் அளவற்ற ஆனந்தம் கொள்கிறேன் என்று உரைத்தார்.

திகைப்புடன் அவரை அவர்கள் நோக்கிக் கொண்டிருக்கும் போது இடப வாக னத்தில் ஈசனார் தோன்றினார் தான் செய்யும் தொண்டில் இருந்து சிறிதும் பிறழாது வாழ்ந்த அதிபத்தரை தமது திருவடியின் கீழ் இருக்குமாறு திருவருள் செய்தார். அவரது பக்தியை மெச்சிய அம்பிகையுடன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். இவர் நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தை பெற்றார்!!!

அவ்வாறு ஈசன் அதிபத்தருக்கு அருள்பாலித்த திருத்தலம்தான் காயாரோகணேஸ்வரர் கோயில், இத்திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

அதிபத்தருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. ஆவணி மாத, ஆயில்யம் நட்சத் திரத்தன்று இவரது குருபூஜை விழா நடக்கிறது. அன்று அதிபத்தர் உற்சவர் ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். அப்போது மீனவர்கள், இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து, கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர். அவ்வேளையில் இத்தலத்து சிவன், கடற்கரையில் எழுந்தருளுவார். அவ ருக்கு அதிபத்தர், தங்க மீன் படைத்து பூஜை செய்வார். அதன்பின் சிவன் அவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். இந்த விழாவின்போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும்!!!

கோயிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால், நடையை சாத்திவிடுவது வழக் கம். ஆனால், இத்தலத்தில் இறந்த பிணத்திற்கு சிவன் அணிந்த மாலை, வஸ்திரத்தை அணிவிக்கும் வழக்கம் இத்தலத்தில் மட்டுமே உள்ளது.

சிவனருளால் முக்தி பெற்ற மீனவ குலத்தைச் சேர்ந்த அதி பத்தருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் மீனவர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு சிவன் சார்பில் மரியாதை செய்யும் வைபவம் நடக்கிறது. இறந்தவரின் உடலை, இங்கு கோயிலுக்கு முன்பாக வைத்துவிடுகின்றனர். அப்போது சிவன் சன்னதியை அடைக்காமல், அவருக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை பிணத்திற்கு அணிவித்து, தீர்த்தம் கொடுக்கின்றனர்!!!

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம் இது. சுந்தரர் பதிகம் பாடி, சிவனிடம் முத்தாரம், வைரமாலை, கத்தூரி, கமழ்சாந்து மற்றும் குதிரை ஆகியவற்றை இத்தலத்தில் பெற்றார். சப்தரிஷிகளான மார்க்கண்டேயர், கவுதமர், வசிஷ்டர், காஷ்யபர், புலஸ்தியர், அகத்தியர், ஆங்கிரசர் ஆகியோர் இங்கு சிவனை வழிபட்டுள்ளனர். மூலஸ்தான லிங்கத்திற்கு பின்புள்ள சுவரில் சிவனின் “சோமாஸ்கந்த’ வடிவம் இருக்கிறது. மாசி மகத் தன்று, சிவன் கடலுக்குச் சென்று, தீர்த்தமாடும் வைபவம் நடக்கும்.

எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள், இங்கு சிலை வடிவில் காட்சி தருகின்றனர். நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க, இரு கால்களையும் தொங்கவிட்டபடி உள்ள கஜலட்சுமியையும் இங்கு தரிசிக்கலாம். வாமி கோஷ்டத்தில் 8 சீடர்களுடன் தெட்சி ணாமூர்த்தி இருக்கிறார். கடலுக்கு மேற்கு கரையில் அமைந்த இத்தலத்தில், சிவன் அரசராக இருந்து ஆட்சி செய்வதாக ஐதீகம். எனவே இவ்வூருக்கு, “சிவராஜதானி’ என்ற பெயரும் உண்டு!!!

பெருமாள் கோயில்களில் ஆதிசேஷன் என்னும் நாகம் சுவாமியின் தலைக்கு மேலே, குடை பிடித்தபடி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், விநாயகர் தன் தலைக்கு மேலே நாகத்துடன் இருப்பதை தரிசித்திருக்கிறீர்களா?

இக்கோயில் முகப்பிலுள்ள விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே, மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். எனவே இவர், “நாகாபரண விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்!!!

பைரவர், இங்கு சிம்ம வாக னத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார்.

இவரே இங்கு, “காலசம்ஹார பைரவராக’ அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், “அஷ்டபுஜ பைரவர்’, அஷ்டபுஜ காளிக்கும் சன்னதி இருக்கிறது!

இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது!

  • கோபி கண்ணன்

Leave a Reply