திருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு!

ஆன்மிக கட்டுரைகள் கிராமக் கோயில் சிவ ஆலயம்
thirumayam kottai bhairavar

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் உள்ள ஸ்ரீ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வடைமாலை
அணிவித்துசிறப்புஅலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது.

pudukottai bairavar

“திருமயம்” தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்கு உள்ள சத்தியகிரீசுவர்  தலமும், சத்திய மூர்த்திப் பெருமாள் தலமும் மிகவும் புகழ் பெற்ற தலங்களாகும்.  இரண்டுமே பல்லவர்  காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை.   பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் கொண்டுள்ள தலம் ஆகும்.  “உலகத்திலேயே  இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள்” இங்கு தான் வீற்றிருக்கிறார்.  திருமுகத்தை ஒரு  சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான,  ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கி உள்ளனர்.  திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்  செய்துள்ளார். 

இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது.  மறவன் கோட்டை எனப்படும் கோட்டையும்  கோட்டை உள்ளேயும் வெளியேயும் வாழும் சகல ஜீவராசிகளும் உய்யும் வண்ணம் கோட்டையின்  கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார்.  இந்தக் கோட்டையை இவர்  பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார்.  தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில்  கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும்.  அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து  விரிந்து காணப்படுகின்றது பாம்பாறு.  பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர்  ஏற்பட்டுள்ளது.  கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும்  கண்கண்ட தெய்வமாக ஸ்ரீ பைரவர் விளங்குகிறார். சகல தோஷ பரிகார தளமாகவும் இது  விளங்குகிறது.  விசாகம் நச்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு தலம் ஆகும்..

தல வரலாறு : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்னும் இத்தலத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ  கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவர். சிவபெருமான் பைரவ வடிவம் கொண்டதாக  ஆகமங்கள் இயம்புகின்ற இக்கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும்.  ராமநாதபுரச் சீமையை ஆண்டகிழவன் சேதுபதி அவர்களால் இக்கோட்டையானது கட்டப்பட்ட  போது கோட்டையின் தென்புற பிரதான வாயிலில் ஸ்ரீசக்தி விநாயகரும் ஸ்ரீ ஆஞ்சநேயர்  சன்னதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் ஸ்ரீ கோட்டை பைரவர் கோவில்  அமைக்கப்பட்டது.  இக்கோவில் மத்திய தொல்லியல் ஆய்வித்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.  புதுக்கோட்டை திருக்கோவில்கள் நிர்வாக அதிகாரி அவர்களாலும் உதவி ஆணையர் அவர்களாலும்  நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

பரிகாரம் செய்யும் வழிமுறைகள் : அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவரைக்கு அபிஷேகம், வடமாலை, சந்தனகாப்பு செய்து நெய்தீபம்,  மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும் மற்றும் பிதூர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம் பழமாலை சூட்டி எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதூர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு  பூசி நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

இப்பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனகாப்பு வடமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும்.  செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளிமாலை நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை  ஏற்படும். எல்லா பரிகாரங்களும் நெயதீபமும், மிளகு தீபமும் பொதுவானது, தேய்பிறை அஷ்டமி  அன்று வழிபட்டால் நன்மை கோடி வந்து சேரும்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

பூஜை விவரம் : கார்த்திகை மாதம் நடைபெறும் ஸ்ரீ பைரவாஷ்டமி விழா இங்கு சிறப்பு பெற்றதாகும்

Leave a Reply