கடனை தீர்த்த கருணாகரீ!

ஆன்மிக கட்டுரைகள் ஸ்தோத்திரங்கள்

பட்ட கடனையும் அடைக்கும் பராசக்தி:

“ஆனந்தி!! கொஞ்சம் ஜலம் கொண்டா!!” ஶ்ரீமத் பாஸ்கராச்சார்யாள் தன் மனைவியிடம் கூறினார்.

மாத்யாஹ்னிகம் முடித்து, தாந்த்ரீக ஸந்த்யையும் பூர்த்தி செய்து ஆகாரமும் செய்தாயிற்று. சிறிதே ஓய்வு எடுக்க வேண்டும்!!

“ஆனந்தி!! நாமளோ இனிமே த்ரவிட தேசம் தான் வஸிக்கறதுன்னு தீர்மாணம் பண்ணியாச்சு!! நம்ம குலதேவதை சந்த்ரலம்பா ஸந்நிதியை ஶ்ரீசக்ராகாரமா புனருத்தாரணம் செய்தது போக மீதி அங்க இருக்கற சொத்துக்கள்ல எதெல்லாம் தேவையோ அதை வைச்சுண்டு, தேவையில்லாததை குடுத்துப்டறதுன்னு நினைக்கறேன்!! நீ என்ன சொல்ற!!” என்றார் பாஸ்கரர்.

“ஆகட்டும்னா!! நீங்க சொல்றபடியே பண்ணிடலாம்!!” இது ஆனந்தி!!

“நீ சித்த இங்கேந்து மஹாராஷ்ட்ரம் போய் எல்லாதையும் பாத்துட்டு வா!! நம்மாத்து அம்பாளுக்கு நகை பண்ணி போடறதுன்னு ஒரு எண்ணம் ஓடறது மனசுல!! எவ்வளவு சீக்ரம் முடியுமோ அவ்வளவு சீக்ரம் சொத்துக்களை எல்லாத்தையும் சரி பார்த்துட்டு தேவையானதை எடுத்துண்டு வா!!” என்றார் ஶ்ரீபாஸ்கராச்சார்யாள்.

“சரிண்ணா!! ஆகட்டும்!!” என்றபடி மறுநாள் தன் சொந்த தேசத்திற்கு கிளம்பினாள் ஆனந்தி.

சென்றவள் திரும்பி வர காலதாமதம் ஆனது!! அதற்குள் பாஸ்கராச்சார்யாளுக்கு அம்பாளுக்கு நகை செய்துவிட வேண்டுமென்ற ஆவலினால் மத்யார்ஜுன க்ஷேத்ரத்தின் அருகே வஸிக்கும் ஒரு தனிகரிடம் கடன் வாங்கி, அம்பாளுக்கு நகையும் செய்து போட்டாயிற்று!!

வாங்கின கடனை திருப்பி அடைக்க வேண்டிய காலமும் நெருங்கியது. இன்னும் ஆனந்தி இன்னும் வந்தபாடில்லை!!

ஒரு பௌர்ணமி நாள் சாயங்காலம் அம்பாளுக்கு திவ்யமாக ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் ஶ்ரீபாஸ்கராச்சார்யாள்.

கடன் கொடுத்தவரோ நேரங்காலம் தெரியாமல், கடன் கொடுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டதை நினைவுபடுத்த ஶ்ரீபாஸ்கராச்சார்யாள் இல்லத்திற்கு வந்தார்!!

இவர் வந்ததை ஶ்ரீஆச்சார்யாள் கவனிக்கவில்லை. தேவீ பூஜையில் இருந்ததால் சுற்றி நடப்பது எதுவும் அவர் சிந்தனையில் ஓடாது பரதேவதையான ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி மட்டுமே அவர் மனதில் நிறைந்திருந்தாள்.

வீடு தேடி வந்தவருக்கு மரியாதை தரவில்லை என்ற கோபத்தில் தேவி உபாஸகர் என்றோ, பல சிஷ்யர்களுக்கு குருநாதர் என்பதைக் கூட பார்க்காமல் வெளியிலிருந்தபடியே “ஓஹோ!! ஆத்துக்கு வந்தவாளை வாங்கோன்னு சொல்லக்கூட தோணல்லியோ!! கடன் வாங்கும் பொழுது இருந்த மர்யாதை இப்போ இல்லியோ!! ஸ்வாமி உங்காத்துக்கு வந்து சாப்ட்டுட்டு போகறத்துக்கு வரல்லே நான்!! குடுத்த கடனை ஞாபக படுத்தறதுக்கு வந்தேன்!! ஞாபகமிருந்தா சரி!!” என்று கடுமையான வார்த்தைகளை கூறிவிட்டு வறுவிறுவென சென்று விட்டார்!!

அந்த ஸமயம் சரியாக லலிதா ஸஹஸ்ரநாமார்ச்சனையில் அபர்ணா எனும் நாமம் வந்தது!!

ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் அபர்ணாயை நம: என்று ஶ்ரீஆச்சார்யாள் அம்பாள் பாதத்தில் குங்குமத்தைப் போடும் போது இந்த கடுஞ்சொற்கள் பாஸ்கராச்சார்யாள் காதுகளில் விழுந்தன.

“அம்மா!! லலிதாம்பிகே!! அபர்ணா — கடனை அபஹரிக்கரவள் நீன்னு வாக்தேவதைகள் சொல்றா!! ருணமில்லாதவள் — கடன் படாதவள்ன்னு அர்த்தமாம்!! நீ பக்தர்கள் கேக்கறதை விட அதிகமாக கொடுத்து அவாளுக்கு கடன் பட மாட்டயாமே!! என்னோட கடனைத் தீர்க்காம உன்னால எப்படி அபர்ணாங்கற பேரைத் தாங்கிண்டு இருக்க முடியறது!!” ன்னு ஒரு க்ஷணம் நினைச்சுடறார் அவரை மீறி!!

அடுத்த க்ஷணம் மனோலயமடைஞ்சு ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் சண்டிகாயை நம: ன்னு அர்ச்சனையை ஆரம்பிச்சுடறார்!!

ஒரு க்ஷணம் தன்னுடைய குழந்தை அப்படி நினைச்சதை அம்பாளாலே பொறுத்துக்கமுடியல்லியாம்!!

பஞ்சப்ரஹ்மாஸனத்துக்கு மேலே இறுக்கி மடிச்சு வைத்திருக்கும் பாதங்கள பெயர்ந்து பூமியில் பட, பஞ்சினும் மெல்லடி நோக, கரும்பும், கணை ஐந்தும், பாசமும், அங்குசமும் ஏந்தின கரங்கள் மறைந்து இரண்டு கரங்களில் கடனைத் தீர்க்க வேண்டிய பணமூட்டையை ஏந்திக்கொண்டு, இந்த்ரன், ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈச்வரன், ஸதாசிவன், மஹாஸதாசிவன் எனும் எழுவராலும் பூஜிக்கப்பட்ட அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகியான ராஜராஜேச்வரி, மஹாத்ரிபுரஸுந்தரி, லலிதா பரமேச்வரி ஸாக்ஷாத் ஆனந்தியினுடைய வடிவத்தைத் தாங்கிக்கொண்டு ஶ்ரீஆச்சார்யாளுக்கு கடன்கொடுத்தவருடைய வீட்டிற்குச் சென்றாள்.

எட்டு திசைகளையும் ப்ரகாசிப்பித்துக்கொண்டு ஒரு ஸுவாஸினி தன் இல்லம் நோக்கி வருவதைக் கண்ட தனிகர் மெய்மறந்து இருகைகளையும் கூப்பிக்கொண்டு வரவேற்றார்!!

“நான் ஶ்ரீபாஸ்கராச்சார்யாள் அகத்துலேந்து வறேன்!! நீங்க கொடுத்த கடனை கொடுக்க வேண்டிய நாள் நெருங்கிடுத்தோல்லியோ!! அதான் வட்டியோட அசலையும் சேர்த்து எடுத்துண்டு வந்துருக்கேன்!! வாங்கிக்கோங்கோ!!” எனறாள் ஸாக்ஷாத் அம்பாள்.

“அம்மா!! நீங்க யாரோ தெரியல்லே!! உங்களைப் பார்த்தா ஸாக்ஷாத் அம்பாள் மாதிரியே இருக்கேள்!! முதல்ல எங்காத்லேந்து குங்குமத்தை வாங்கிக்கோங்கோ!” என்றபடி தன் மனைவியை விட்டு குங்குமத்தைக் கொடுத்தார்.

பிறகு ஸாக்ஷாத் அம்பாளின் கரங்களிலிருந்து பணமுடிச்சைப் பெற்றுக்கொண்டார். “அம்மா!! சித்த இருங்கோ!! கடன் பத்திரத்தை வாங்கிண்ட்ருங்கோ!!” என்றபடி உள்ளே போனார்!!

வெளியே வந்து பார்த்தால் வந்த ஸுவாஸினியைக் காணோம்! சரி!! பாஸ்கரராயர் இல்லத்திற்குச் செல்வோம் என்று அங்கே விரைந்தார்!!

பாஸ்கரராயரும் அப்போது பூஜையை முடித்திருந்தார்!! சரியாக ஆனந்தி ஊரிலிருந்து வந்து இறங்கினாள்!!

“ஆனந்தி!! சொத்தையெல்லாம் சரி பார்த்தாச்சா!! இங்க கொஞ்சம் கடன் வாங்கும்படி ஆய்டுத்து!! பணத்தைக் கொடு!! முதல்ல அந்தக் கடனை அடைக்கனும்!! இன்னிக்கு பூஜை சமயம் கடன் கொடுத்தவர் வந்து சத்தம் போட்டுட்டார்!!” என்று வேகமாய்க் கூறினார்!!

இதைக் கேட்டுக்கொண்டே வந்த தனிகர் “ஸ்வாமி!! க்ஷமிக்கனும்!! ஏதோ வேகத்துல அப்படி பேசிட்டேன்!! ஒரு அம்பாள் உபாஸகரை அப்படி பேசினது மஹாபாபம்!! என்னை மன்னிச்சுடுங்கோ!! சித்த மின்ன தான் இந்த அம்மா வந்து வட்டியோட அசலை அடைச்சாங்க!! கடன் பத்திரத்தை எடுத்து வர்றதுக்குள்ள இங்க வந்துட்டாங்க போலருக்கு!!” என்றார்!!

“என்ன சொல்றேள் நீங்க!! நான் எங்கேயும் வரல்லியே!! ஊர்ல இருந்து இப்போ தான் வண்டில வந்து இறங்கறேன்!! யாரைச் சொல்றேள்!!” என்றாள் ஆனந்தி!!

“என்னம்மா சொல்றேள்!! நீங்க தானே பணமுடிப்பை கொடுத்தேள்!! குங்குமம் கூட வாங்கிண்டேளே!!” என்றார் தனிகர்!!

ஆனந்தி குழம்பி நின்றாள்!!

ஶ்ரீபாஸ்கராச்சார்யாள் ஏதோ பொறி தட்டினாற் போல பூஜையறைக்குச் ஓடிச் சென்று பார்க்க “பாஸ்கரா!!” என்றபடி பரிவுடன் ஒரு அசரீரி கேட்டது!! “பாஸ்கரா!! நீ பட்ட கடன் நான் பட்டது போல் அல்லவா!! உலகிற்கெல்லாம் தாயாரான நான், என் குழந்தைகள் தவிக்கும்படி விடுவேனா!! நானே தான் சென்று உன் கடனை அடைத்தேன்!! அபர்ணா என்ற பெயர் எனக்கு இப்போது பொருந்துமல்லவா!!” என்றுரைத்துச் சிரித்தாள் பராசக்தி.

“தாயே!! லலிதாம்பிகே!! காமாக்ஷி!! மஹாத்ரிபுரஸுந்தரி” என்றபடி வேறெதுவும் செய்யத் தோன்றாது, சொல்லத் தோன்றாது, அம்பாளின் அபரிமிதமான கருணையை மனதில் நினைத்துக் கண்களில் ஜலம் பெருக நின்றார் பாஸ்கராச்சார்யாள்.

அம்பிகையின் கருணைக்கு ஈடுஇணை ஏது!!

ஸர்வம் லலிதார்ப்பணம்!!

ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

Leave a Reply