சித்தம் நிறைக்கும் சிவாலய ஓட்டம்! சிவராத்திரி ஸ்பெஷல் வழிபாடு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்
shivalaya ottam1

சிவாலய ஓட்டம்... “சிவாலய ஓட்டம்” குறித்துப் பலரும் அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பன்னிரண்டு (12) சிவாலயங்களையும் பக்தர்கள் சிவராத்திரி அன்று ஓட்டமாகப்போய்த் தரிசிக்கின்ற நிகழ்வு அது.

மஹாபாரதக் கதையோடு சம்பந்தப்பட்ட அந்த ஆலய தரிசன ஓட்டத்தின்போது பக்தர்கள், “கோவிந்தா கோபாலா” என்று ஏக சுருதியில் கூவுவார்கள்.

மகா சிவராத்திரி அன்று சிவ பக்தர்கள் சிவராத்திரியின் முன்றைய தினம் பிற்பகல் குமரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு மகாதேவ ஷேத்திரங்களில் ஷேத்ராடனம் செய்து தங்களது அத்யந்த பக்தியின் மூலமாக அந்த பரமனின் அருளுக்கு பாத்திரமாவது வருடாவருடம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கும் விளம்பரமற்ற ஒரு நிகழ்ச்சி. எப்படி வைகுண்ட ஏகாதசி அன்று நெல்லை மாவட்ட பக்தர்கள் ஒரே நாளில் நவதிருப்பதிகளில் தரிசனம் செய்வார்கள் அது மாதிரி, ஆனால் நவதிருப்பதி ஒரே சுற்றுக்குள் இருப்பதால் வணங்கி வழிபட எளிதாகும். முன்பெல்லாம் நடந்தே சென்று நவதிருப்பதிகளில் தரிசனம் செய்தனர், தற்போது செளகர்யங்களை உத்தேசித்து தங்களது யாத்திரையை முடிவு செய்கிறார்கள்.

kanyakumari shivalaya ottam1

இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.

kanyakumari shivalaya ottam2

சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.

kanyakumari shivalaya ottam6

இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்குச் செல்வர்.

kanyakumari shivalaya ottam4

பின்னர் அங்கிருந்து அருமனை, களியல் வழியாக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குலசேகரம் சந்திப்பின் வழியாக 8 கி.மீ தொலைவில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவிலில் வழிபட்டபின், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன்கோவில், பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள். (12 சிவாலயங்களில் இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்)

kanyakumari shivalaya ottam5

அங்கிருந்து, மேலாங்கோடு சிவன்கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக, திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், அங்கிருந்து கோழிப் போர்விளை, பள்ளியாடி, திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று இறுதியாக நட்டாலம் சங்கர நாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டத்தை 110 கிலோ மீட்டர் என பனிரெண்டு கோவில்களுக்கும் சென்று தங்களது சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

kanyakumari 12th sivalaya

குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையும் முன்பு அன்றைய திருவிதாங்கூர், கொச்சியுடன் (இன்றைய கேரளா) இணைந்திருந்தது. அதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்கள் இருந்தன. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டையும் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங்கோடு ஆகிய இரண்டையும் ‘வேணாடு’ என்றும் அழைத்து வந்தனர். வேணாட்டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் விளங்கியது)

kanyakumari shivalaya ottam9

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் ஓட்டத்தின் இடையே கோவிந்தா, கோபாலா என்று சொல்லிக் கொண்டே செல்வதுதான் தனிச்சிறப்பு. இந்த ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் இடையில் ஓய்வு எடுப்பதே கிடையாது.

kanyakumari shivalaya ottam7

சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இரண்டு வேறு வேறுவிதமான கருத்துகள் உள்ளது. அதில் பீமனின் கதை தான் ஏராளமான மக்களால் இன்றளவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.

kanyakumari shivalaya ottam8

பாண்டவர்களின் மூத்தவர் தர்மபுத்திரன் ஒரு ராஜகுரு யாகம் நடத்தி வரும் வேளையில், அந்த யாகத்தை முறைப்படி நிறைவு செய்வதற்கு ஒரு புருஷ மிருகத்தின் பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்திற்கு (வியாக்ரபாத மகரிஷி) சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. பீமனின் அகந்தையை அடக்கவும், வியாக்ரபாத மகரிசிக்கு, ஹரியும் சிவனும் ஒன்று என்ற பாடத்தை புகட்டவும் நினைத்த பரந்தாமன் பீமனிடம் பால் கொண்டு வர கட்டளையிட்டதோடு மட்டுமல்லாமல் அவனிடம் 12 உத்திராட்சங்களையும் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகும் போது, இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் பயபக்தியுடன் அந்த உத்திராட்சங்களை வாங்கி புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது.

kanyakumari shivalaya ottam11

அப்போது, பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பியபடி பால் பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம், விஷ்ணுவாக தெரிந்து தவம் கலையவே கோபத்துடன் சிவபூஜையில் புகுந்த பீமனை துரத்திச் பிடித்துக் கொள்ளும் போது பீமன் ஒரு உத்திராட்சத்தை அந்த இடத்தில் படுகிறான், உடனே அந்த இடத்தில் ஓரு சிவலிங்கமாக உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் தனது சிவபூஜையை தொடங்கி விடுகிறது. இப்படியே சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி திரும்பவும் பால் பெற முயன்ற போது புருஷ மிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்சத்தை ஒன்றன்பின் ஒன்றாக போட்டுவிட்டு ஓடிவிடவும், இதே மாதிரி 11 உத்திராட்சங்களும் 11 சைவ தலங்களாக உருவாகி விடுகிறது.

kanyakumari shivalaya ottam10

12-வது உத்திராட்சம் போடும் போது பீமனின் ஒரு கால் வியாக்ரபாத மகரிஷியின் சொந்த இடத்திலும், மறுகால் வெளியிலும் இருக்கும் வேளையில் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபடவே, இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன், தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார்.

பீமனுடைய உடலில் பாதி, புருஷமிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியில் யாகம் நிறை வேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இவ்வாறு பீமன் ஓடியதை நிறைவு கூறும் வகையில் இன்றும் பக்தர்கள் கோவில்களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.

kanyakumari shivalaya ottam14

இந்த 12 சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் பக்தர்களுக்கு திருநீரு வழங்கப்படும். 12–வது சிவாலயமான திருநட்டாலத்தில் மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது. திருநட்டாலம் கோயிலில் சுவாமி சிவன்- விஷ்ணு சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ளார். சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதற்கு உரிய வகையில் உள்ளது.

இரண்டாவது கதை : சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக் கேட்டான்.

சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் தனக்கு தரப்பட்ட வரத்தை சோதனை செய்ய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.

கடைசியாக நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு, சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது.

இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு இப்ப தற்சமயம் உள்ள வசதிகள் கிடையாது. ஆனால் சமீபத்தில் சில தொண்டு நிறுவனங்கள் ஆங்காங்கே பல்வேறு செளகர்யங்களை செய்து வருவது பாராட்டுக்குரியது, நாமும் அவர்களின் யாத்திரையில் மனமார பங்கு பெற்று அந்த மகாதேவனின் அருளுக்கு பாத்திரமாவோமாக..!!!
ஓம் நமச்சிவாய….

kanyakumari shivalaya ottam3

பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.


சிவாலய ஓட்டம் போல ஜப்பானில் Shikoku யாத்திரை என்றொரு வழக்கம் இருக்கிறது.

Shikoku தீவிலே 1200 கி.மீ நீள்வட்டத்தில் இருக்கின்ற 88 ஆலயங்களை எல்லாம் ஒருவன் வாழ்நாளிலே நடந்தே தரிசிப்பானானால் அவன் “தன்னை உணர்வதோடு, ஆன்மீக உச்சத்தையும் அடைவான்” என்கிற நம்பிக்கை இருக்கின்றது.

Kukai (774–835) என்கிற பெளத்தத் துறவி, தனது வாழ்நாளில் அமைத்த இக்கோயில்கள், நான்கு பகுதிகளாக — 01-23; 24–39; 40-65; 66–88 பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை வாழ்க்கையின் நான்கு கட்டங்களைக் குறிக்கிறது என்கிறார்கள்.

kanyakumari shivalaya ottam13

ஆண்டுதோறும் பல்லாயிரம் பேர், Temple Circuit என்கிற இந்த தரிசனத்தை மேற்கொள்கிறார்கள்.

சைவ-வைணவ ஒற்று மையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு சிவாலய ஓட்டம் கீழே உள்ள சிவத்தலங்களால் பெருமை பெறுகிறது நாமும் அந்த மகாதேவனின் அருள் பெறுவோமாக……

 1. திருமலை மகாதேவர் கோவில்
 2. திக்குறிச்சி மகாதேவர் கோவில்
 3. திற்பரப்பு மகாதேவர் கோவில்
 4. திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
 5. பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
 6. திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்
 7. கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
 8. மேலாங்கோடு சிவன் கோவில்
 9. திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
 10. திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
 11. திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
 12. திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்

கட்டுரைப் பதிவு: கே.ஜி.ராமலிங்கம்

Leave a Reply