சாஸ்திரமா, விஞ்ஞானமா? ஆச்சார்யாள் பதில்!

ஆன்மிக கட்டுரைகள்

e0ae9ae0aebee0aeb8e0af8de0aea4e0aebfe0aeb0e0aeaee0aebe e0aeb5e0aebfe0ae9ee0af8de0ae9ee0aebee0aea9e0aeaee0aebe e0ae86e0ae9ae0af8d

abinav vidhya theerthar
abinav vidhya theerthar
abinav vidhya theerthar

சிஷ்யன் : விஞ்ஞானத்தின் மூலமாக, பிராணிகளில் இருந்து மனிதன் உண்டானான் என்று தெரிந்து கொள்கிறோம். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் குகையில் வாழ்ந்து கொண்டிருந்தான். சமையல் செய்வதும் அவனுக்கு அப்போது தெரியாமலிருந்தது. இச்சமயத்தில் வேதம் எப்படி இருந்திருக்க முடியும்? மேலும் வேதத்தின் ஆக்ஞையின்படி ஜனங்கள் எப்படி நடந்து வந்திருக்க முடியும்?

ஆசார்யாள் : ஒரு கனவு காண்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அங்கு நீ ஒரு பத்து வயது சிறுவனாய் இருப்பதாகக் காண்கிறாய் என்றால், அதற்கு முன்பு குழந்தையாய் இருந்திருக்க வேண்டுமல்லவா?

சி : ஆம்.

ஆ : ஸ்வப்னமானது நீ இரண்டு வயது குழந்தையாய் இருந்த நிலைமையி
லிருந்து ஆரம்பித்ததா?

இல்லை. கனவு திடீரென்று நான் பத்து வயதுச் சிறுவனாய் இருக்கிறேன் என்றுதான் தொடங்குகிறது.

ஆ : அதாவது கனவில் நீ முதலில் சிறிய பையனாக இருந்திருக்க வேண்டும் என்று கூறுவது யுக்திக்குப் பொருத்தமாயிருப்பது போலிருந்தாலும் உண்மையில் அந்த நிலைமை இருந்திருக்கவில்லை. சரிதானே?

சி: ஆம்.

ஆ : காலத்தை அங்கு, பின்னால் இழுப்பது பொருத்தமாக இல்லை. ஏனென்றால் கனவு திடீரென்று ஆரம்பித்தது. அதேபோல்தான் இந்த விஞ்ஞானிகளின் பதிலும் பொருத்தமாக இல்லை. இப்போது ஒரு மனிதரை ஒரு நிலைமையில் பார்க்கிறோம். ‘பல வருடங்களுக்கு முன் அவன் குகையில்தான் வாழ்ந்திருக்க முடியும். ஏனென்றால், அவனுக்கு இவ்வளவு அறிவு இருந்திருக்காது’ என்று யுக்தி மூலமாகச் சிலர் கூறலாம். ஆனால் எப்படி ஒரு கனவு திடீரென்று தொடங்குகிறதோ அதேபோல் (கனவைப்போல்) இவ்வுலகமும் திடீரென்று உண்டாகி விட்டது. ஆகவே, இங்கும் காலத்தைப் பின்னே இழுப்பது பொருத்தமாகாது.

சி : விஞ்ஞானிகள், பிரகிருதியிலிருந்து உயிர் உண்டானது என்று கூறுகிறார்கள். உயிரென்பது ஐடப்பொருளின் ஒரு குணம். ஒருவிதமாகப் பொருட்கள் சேர்த்தால் சைதன்யம் ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். இதுபோன்ற அபிப்ராயம் தவறா?

ஆ : இதுதான் சார்வாகர்களின் மதம். இது பொருத்தமான மதமேயில்லை. ஒரு விஞ்ஞானி எதற்காக ‘பொருளில்தான் சைதன்யம் ஏற்படுகிறது. சைதன்யம் என்னும் தனி வஸ்து இல்லை” என்று சொல்கிறான்?

சி : ஏனெனில், உடலிருக்கும் இடத்தில்தான் சைதன்யம் காணப்படுகிறது. உடலில்லாத இடத்தில் நாம் சைதன்யத்தைக் காண்பதில்லை.

ஆ: இதுபோன்ற யுக்தி பொருத்தமாக இருக்காது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். எங்கெல்லாம் ஒளியிருக்கிறதோ அங்கெல்லாம் பொருள் தெரிகிறது. ஏனெனில் ஒளியில்லாவிட்டால் பொருள்
தெரியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே பொருள் தெரிவது ஒளியின் குணம் என்று கூறுவது சரியா?

சி: அதெப்படி பொருள் தெரிவது ஒளியின் குணமாக முடியும்? ஆக முடியாதே.

ஆ : அதாவது ஒளியிருக்கும் இடத்தில்தான் பொருள் தெரிகிறது. ஒளியில்லாத இடத்தில் பொருள் தெரியாது. ஆனாலும் பொருள் தெரிவது ஒளியின் ஒரு குணமில்லை. இதேபோல்தான் இங்கும் உடலிருக்கும் இடத்தில் சைதன்யம் தெரிகிறது. உடலில்லாத இடத்தில் சைதன்யம் தெரிவதில்லை. ஆதலால் உடலின் குணம் சைதன்யம் என்று கூறுவது மட்டும் சரியாகுமோ? அது சரியே ஆகாது. சைதன்யம் இருக்கிறது என்று தெரிவதற்கு உடல் தேவைப்படலாம். ஆனால் உடலின் குணம் சைதன்யம் என்று கூறுவது சரியில்லை. மேலும் ‘பிசாசு’ பற்றி சில பேர் அனுபவமே பட்டிருக்கிறார்கள். இதற்கு நமக்கிருப்பதுபோல் ஓர் உடலில்லை. ஆனால் அங்கு அறிவு இருக்கிறது. இதெல்லாம் தவிர தெய்வானுக்ரஹத்தின் மூலமாகப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. விஞ்ஞானிகளாலும் ‘இவை நடக்கவில்லை’ என்று கூற முடியாது. இவை லௌகீக நியமங்களுக்கு அப்பாற்பட்டவை. ஆதலால், இதன் மூலமாக உடலைக் காட்டிலும் அதிகமான ஒரு சக்தி இருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். சாஸ்திரம் என்பது ஓர் உத்தமமான பிரமாணமாகும். நமது யுக்திக்கு ஓர் அளவு உண்டு. ஒரு யுக்தி ‘சரி’ என்று நமக்குச் சற்று நேரத்திற்குத் தோன்றலாம். ஆனால் நம்மைக் காட்டிலும் ஒரு புத்திமான் வந்து விளக்கம் கூறினால் நாம் முன்பு ‘சரி” என்று நினைத்தது உண்மையில் ‘தவறு’ என்று தெரியும். ஆதலால் வெறும் யுக்தியை நம்பிக் கொண்டிருப்பது போதாது. சாஸ்திரம் என்னும் ஆதாரமும் நமக்குத் தேவைப்படுகிறது. வேதம் பகவானால் உபதேசிக்கப்பட்டது. அது மிகவும் புனிதமானது. வேதத்தில் ‘உடல் வேறு, சைதன்யம் வேறு’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால் அதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மேலும் ஞானிகளின் அனுபவமும் இவ்வாறுதான் இருக்கிறது. இவ்வனுபவங்கள் எல்லாம் தவறென்று கூறுவதற்கு விஞ்ஞானிகளுக்குச் சாமர்த்தியமில்லை. இதெல்லாம் இருக்கட்டும். ஒரு விஞ்ஞானியால், ‘பொருளி லிருந்துதான் சைதன்யம் உண்டாயிற்று’ என்பதை நிரூபிக்க முடி யுமா? முடியாது. இதுவரைக்கும் அவனால் முடியவில்லை. இனிமேல் செய்வானா என்றால் இனிமேலும் நிரூபணம் செய்ய முடியாது. ஏனெனில், ஒரு விஞ்ஞானி அவனது ஆராய்ச்சிக் கூடத்தில் ஓர் உயிரை உண்டாக்கியதாகக் கூறுகிறானென வைத்துக்கொள்வோம். முதலிலேயே அவன் உபயோகப்படுத்தும் பொருளில் செயல்படாத நிலையில் சைதன்யம் இருந்திருக்கவில்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்? அதை நிரூபிக்கவே முடியாது. எப்படி அந்த சைதன்யம் முதலில் வெளித் தெரியாமலிருந்து அதற்குப் பிறகு வ்யக்தமாயிருக்கலாமோ, அதேபோல்தான் இங்கும் நிரூபணம் செய்ய முடியாது. ஆகையால் இதை விஞ்ஞானியால் இதுவரை நிரூபணம் செய்ய முடியவில்லை. இனிமேலும்,நிரூபணம் செய்ய முடியாது. அதுபோன்ற விஞ்ஞானிகளின் அபிப்ராயத்திற்கு நாம் அதிகமாக விலை கொடுக்க வேண்டும். என்று சொல்வது தவறு. நாம் நம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட வகையில்தான் ஒப்புக்கொள்ள வேண்டுமே தவிர யாரோ ஒருவன். ஒரு யுக்தியை அதுவும் ஒரு தவறான யுக்தியை – சொல்கிறான் என்பதற்காக அதை நம்ப வேண்டும் என்று கிடையாது. விஞ்ஞானத்தி னால் பல பிரயோஜனங்கள் இருக்கின்றன. அதைப்பற்றிச் சந்தேகமே யில்லை. ஆனால், சில விஞ்ஞானிகள் எவற்றைக் கற்பனை மூலமாகவும் குயுக்தி மூலமாகவும் சொல்கிறார்களோ அவை எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ள வேண்டுமென்கிற தேவையில்லை. ஒருவன் விஞ்ஞானியானதால் நாஸ்திகனாக இருக்க வேண்டும் என்றும் அர்த்தமில்லை. பல சிறந்த விஞ்ஞானிகள் ஆஸ்திகர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். தற்போதும் இருக்கிறார்கள். தவிர சாஸ்திரங்களை ஆராய்ந்து பார்த்தால் உடலைக் காட்டிலும் வேறான ஆத்மா இருக்கிறது என்பதற்குப் பல யுக்திகளை நாம் காணலாம். ஆகவே உடலைக் காட்டிலும் வேறானது ஆத்மா என்ற விஷயத்தில் நமக்கு ஐயமே எழக்கூடாது.

சாஸ்திரமா, விஞ்ஞானமா? ஆச்சார்யாள் பதில்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply