கனவும், விழிப்பும்.. ஆச்சார்யாள் பதில்!

ஆன்மிக கட்டுரைகள்

e0ae95e0aea9e0aeb5e0af81e0aeaee0af8d e0aeb5e0aebfe0aeb4e0aebfe0aeaae0af8de0aeaae0af81e0aeaee0af8d e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebe

abinavavidhyadhirthar-4
abinavavidhyadhirthar-4
abinavavidhyadhirthar-4

சிஷ்யன் : விழிப்பு நிலை கனவைக் காட்டிலும் வேறா?

ஆச்சார்யாள் : பரமார்த்த த்ருஷ்டியில் இல்லை

சி: அப்படியென்றால் எல்லாமே மனதால் கற்பனை செய்யப்பட்டதென்று தான் பொருள் வருமா?

ஆ : ஆம்

சி : ஆசார்யாள் சற்று விளக்கம் கூறுவார்களா?

ஆ : கனவில், கனவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மட்டும் உண்மையெனத் தோன்றும். ஓர் உலகைப் பார்க்கிறோம். அதேபோல் விழிப்பு நிலையில் ஓர் உலகைக் காண்கிறோம். இதுவும் பார்க்கும் சமயத்தில் உண்மையெனத் தோன்றுகிறது. இன்பமும் துன்பமும் விழிப்பு நிலை யில் அனுபவிக்கிறோம். அதேபோல்தான் கனவிலும் அனுபவிக்கிறோம். ஆதலால் இரண்டு நிலைகளும் சமமாக இருக்கின்றன

சி : விழிப்பு நிலையில் ஒரு புத்தகத்தை ஒரு தான் மேஜையில் வைத்தால், அது அடுத்த நாளும் அங்கேயே இருக்கிறது. ஆனால் கனவில் ஒரு புத்தகத்தை வந்தோம் என்றால் விழித்தவுடன் அது காணப்படுவதில்லை. இந்த விதியாசத்தை வைத்துக்கொண்டே விழிப்பு நிலை உண்மையானது, கனவு நிலை பொய்யானது என்றும் கூற முடியாதா?

ஆ: ஒரே கனவின் போதே முதலில் நீ மேஜையில் ஒரு புத்தகத்தை வைக்கிறாய் என்று உதாரணத்திற்கு வைத்துக்கொள். பிறகு அக்கனவிலேயே வேறு காரியங்கள் செய்யப் போகிறாய். மீண்டும் வந்து பார்க்கும் போது அப்புத்தகம் அங்கிருக்குமா, இருக்காதா?

சி: ஆம் இருக்கும்.

ஆ: இதுவே உனது சந்தேகத்தைத் தீர்த்திருக்கும். ஏனென்றால், விழிப்பு நிலையில் ஒரு புத்தகத்தை வைத்திருந்தால், அந்நிலையிலேயே வேறொரு சமயத்தில் அப்புத்தகம் அவ்விடத்திலேயே இருக்கிறது அதேபோல் கனவிலும், அந்த நிலையிலேயே வேறொரு சமயம், முன் வைக்கப்பட்ட இடத்திலேயே புத்தகம் இருக்கும். கனவின்போது மேஜையில் வைக்கப்பட்ட புத்தகம் விழித்தவுடன் (விழிப்பு நிலை வில்) இருப்பதில்லை. அதேபோல் விழிப்பு நிலையின்போது வைக்கப்பட்ட புத்தகம் கனவின்போது மேஜையிலேயே இருப்பதாகத் தெரிவதில்லை .

சி : மற்றொரு வித்யாசமும் இருப்பதாகத் தெரிகிறதே.

ஆ : என்ன

சி: நாம் தூங்கிக் கொண்டிருப்பதை மற்றவர்கள் பார்க்கலாம். ஆகவே நாம் படுத்துறங்கிக் கொண்டுதான் இருந்தோம் என்பதை அவர்கள் நிச்சயம் சொல்லலாம். அதனால் நாம் காணும் கனவு பொய்யானது தானே?

ஆ : ஒரு கனவில் நீ உட்கார்ந்து கொண்டிருப்பதாகக் காண்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீ பல விஷயங்களைப் பற்றிச் சிந் தனை செய்து கொள்ளலாம். உன் கனவிலேயே நீ உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் என்பதைச் சிலர் பார்க்கலாம். அவர்களைப் பொறுத்த வரையில் நீ உட்கார்ந்து கொண்டிருப்பது உண்மை. ஆனால் நீ சிந்தனை செய்வது பொய், அப்படித்தானே?

சி: ஆம்.

ஆ: உண்மையிலேயே நீ அந்தக் கனவில் வந்த ஜனங்களுக்கு முன்பு உட்கார்ந்து கொண்டிருந்தாயா?

சி : இல்லையே.

ஆ : இதற்குக் காரணம், “நீ உட்கார்ந்து கொண்டிருந்தாய், உன்னை மற்ற ஜனங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்” என்ற இரண்டும் கனவிற்குச் சேர்ந்தவை. அதேபோல்தான் இங்கும்.

சி: விழிப்பு நிலை வருடக்கணக்காக நீடிக்கிறது. ஆனால், கனவோ ஒரு
சில மணிகள்தான் இருக்கிறது. இந்த வித்யாசம் இருக்கிறதே.

ஆ : இந்த யுக்தியை உபயோகப்படுத்த வேண்டுமானால், நீ ஒரு கேள்விக்கு விடையளித்தாக வேண்டும். ஒரு கனவு முப்பது நிமிடங்களும், மற்றொரு கனவு பத்து நிமிடங்களும் நீடிக்கிறதென்றால், முப்பது நிமிடம் நீடித்த கனவு, பத்து நிமிடக் கனவைவிட உண்மை என்றே பத்து நிமிடக் கனவு, முப்பது நிமிடக் கனவைக் காட்டிலும் சற்றே பொய் என்றோ நீ கூறுவாயா?

சி : இல்லையே.

ஆ : ஆகவே நீண்ட காலம் உள்ளது என்று காரணம் காட்டி விழிப்பு நிலை கனவை விட உண்மையானது எனக் கூற முடியாது. மேலும் ‘நேரம் செல்கிறது என்பதும் மனதின் ஒரு கற்பனையே. ஒருகனவில் ஒருவன் தான் நீண்ட நேரம் கழித்திருப்பதாக, அக்கனவின் போது நினைத்திருக்கலாம். ஆனால் விழிப்பு நிலையைப் பொறுத்தவரையில் பத்து நிமிடங்கள் மட்டுமே கழித்திருக்கலாம். ஆகவே விழிப்பு நிலையின் கால அளவு பெரிது என்ற கூற்று தவறானது. விழிப்பிலும் கனவிலும் சமயம் என்பது அந்தந்த நிலைகளில் ஏற்படும் மனக் கற்பனையேயாகும்.

சி : தாங்கள் கூறியபடியே கனவில் அனுபவிக்கும் உலகத்தைப் போல்தான் விழிப்பு நிலையிலும் இருக்கிறதென்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் இங்கு எனக்கொரு சந்தேகம் தோன்றியுள்ளது

ஆ : தோன்றிய சந்தேகத்தை நீ தயங்காமல் சொல்லலாம்.

சி: விழிப்பு நிலையில் நாம் அனுபவிப்பது எல்லாம் பொய் என்பது நமக்குத் தெரிவது இல்லையே அது ஏன்?

ஆ: சாதாரணமாக நீ தூங்கும்போது கனவில் பார்ப்பது பொய் என்று தெரிகிறதா? அதாவது கனவு கண்டு கொண்டிருக்கும் போது அக்கனவு பொய் என்பது தெரிகிறதா?

சி: இல்லை

ஆ: கனவில் கண்டது பொய் என்பது எப்போது உனக்குத் தெரிகிறது

சி: எப்பொழுது நான் விழிப்பு நிலைக்கு வருகிறேனோ அப்போதுதான் தெரிகிறது.

ஆ: அதேபோல் மாயையால் உண்டான இந்தப் பெரிய ஸ்வப்னத்தில் நாம்
தூங்கிக் கொண்டிருக்கிறோம், எப்போது இந்தக் கனவு அகன்றுவிடுமோ அப்போதுதான் இவ்வுலகமும் பொய் என்பது நமக்குத் தெரியும்

சி : இப்பெரிய கனவிலிருந்து எப்போது ஒருவன் விழித்துக் கொள்வான்?

ஆ : எப்போது “ஞானோதயம் ஏற்பட்டு ஒருவன் தான் எவ்வித பந்தங்களும்
இல்லாததும், பேரின்ப வடிவானதுமான ஆத்மாதான்” என்று அறிந்து கொள்வானோ அப்போதே இப்பெரிய கனவு அகன்று விடும்

சி : ஞானோதயம் எப்படி ஆகும்?

ஆ : எப்போது ஒருவன் தன் மனதை முழுமையாகத் தூய்மையாக்கி ‘உலகம் பொய்தான், இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆத்மாதான் நான் என்று தீர்மானத்திற்கு வருவானோ, அப்போதுதான் இந்த ஞானோதயம் ஏற்படும்

சி: குருவும், சாஸ்திரமும் இவ்விஷயத்தில் எந்த வகையில் பங்கு வகிக்கிறார்கள்

ஆ : சாஸ்திரத்தின்படியுள்ள குருவின் உபதேசங்கள் தத்துவத்தின் அறிவை உண்டாக்குகின்றன

சி: சாஸ்திரங்களும் குருவின் உபதேசங்களும் இந்தப் பொய்யானதை குத்தானே சேர்கின்றன.? இவ்வாறுள்ள நிலையில் அவை எவ்வாறு உண்மையான தத்துவத்தின் அறிவை உண்டாக்க முடியும்

ஆ : ஆம், இந்த உபதேசங்களும் உலகிற்குச் சேர்ந்ததுதான். ஆனாலும், இவைகளாலும் தத்துவ அறிவு ஏற்படலாம். கனவில் ஒரு புலி தம்மை துரத்துவதாகக் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். புலித் துரத்துகிறது என்ற பயத்தினால் நமக்கு விழிப்பு ஏற்படலாம். அதேபோல் சாஸ்திரங்களின் கட்டளைகளும் குருவின் உபதேசங்களும் நம்மை இப்பெரிய கனவிலிருந்து விழித்தெழும்படிச் செய்கின்றன

சி : அப்படியென்றால் படைப்பு என்றால் என்ன

ஆ : பார்வைதான் படைப்பு. பார்வையைக் காட்டிலும் வேறான படைப்பு கிடையாது. ஒரு பொருள் இருக்கிறது என்று கற்பனை செய்யும் நமது பார்வைதான் படைப்பே தவிர வேறில்லை

சி : அப்படியென்றால் மற்ற ஜீவன்கள் இருக்கின்றன என்று கருதுவது வீணில்லையா?

ஆ : ஆம்

சி : அப்படியானால் ஈச்வரனின் நிலை எப்படி?

ஆ : அவனும் உன் கனவில் ஓர் அம்சம்தான். உண்மையில் காரணமும்
இல்லை , காரியமுமில்லை . எதுவரையில் ஒரு மனிதன் தனக்கு பந்தமுள்ளது என்று கருதுகிறானோ அதுவரையில் அவனுக்கு பந்தமிருக்கிறது. எவன் தான் விடுதலை பெற்றவன் எனக் கருதுகிறானோ அவன் விடுதலை பெற்றவன்தான். ஆதலால்தான்

முக்தாபிமானி முக்தோஹி பத்தோ பத்தாபிமான்யபி

என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது எவன் தன்னை முக்தன் என்று கருதிக் கொள்கிறானோ அவன் முக்தன். எவன் தனக்கு பந்தமிருக்கிறது என்று கருதுகிறானோ அவனுக்கு பந்தமுள்ளது. ஆகவே ஒருவன் தனக்கு பந்தமுள்ளது என்ற தவறான கருத்தை அகற்றிவிட வேண்டும்.

சி : தனக்கு பந்தமுள்ளது என்ற தவறான எண்ணத்தை நீங்கி விடுவதே மோஷத்தைக் கூடிய விரைவில் அடைய இருக்கும் ஸாதனமாகுமா?

ஆ : ஆம். இதுவரையில் நான் த்ருஷ்டி – ஸ்ருஷ்டி வாதத்தை மனதில் வைத்து பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், இது பல ஜனங்களுக்குப் பொருத்தமாக இருக்காது. ஏனென்றால், அவர்களது மனம் இத்தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு தூய்மையாக இருக்காது. கனவு ஒன்றுதான் பொய்யானது என்று அனைவரும் ஒப்புக்கொள்வர். விழிப்பு நிலையும் பொய் என்று சொன்னால் அவர்களுக்கு பயம் ஏற்படும். சில பேருக்கு விழிப்பு நிலையும் கனவு போன்றிருக்கிறது’ என்று சொல்வதிலிருந்து ‘கனவும் உண்மை ‘ என்றும் தோன்றலாம் ஆதலால்தான் சாஸ்திரங்கள், சாமான்யமாக த்ருஷ்டி – ஸ்ருஷ்டி வாதத்தைப் பற்றி அதிகமாகக் கூறுவதில்லை. ஒரு சிலவிடங்களிலேயே கூறுகின்றன.

கனவும், விழிப்பும்.. ஆச்சார்யாள் பதில்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply