திருப்புகழ் கதைகள்: அருணகிரிநாதர் சரித்திரம்!

ஆன்மிக கட்டுரைகள்

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 10
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் வரலாறு (தொடர்ச்சி)

தனது கெட்ட பழக்கங்களால் செல்வம் அனைத்தையும் இழந்த பின் அருணகிரிநாதரை எந்த நண்பர்கள் ஆதரவு கொடுத்தார்களோ அவர்களே அவரை விட்டு விலகினார்கள். சிற்றின்பத்தில் ஈடுபட்டதால் அருணகிரி நோய்வாய்ப் பட்டார்.

தன் இன்பத்துக்கு பெண் இல்லையென்றதால் தன் அக்காவிடம் பணம் கேட்டார். வெறுப்புற்ற அக்கா தன்னையே அவருக்குத் தேவையான பெண்ணாக ஏற்றுக்கொள்ளுமாறு அருணகிரி நாதரிடம் கூறினாள். உடனே கோபம் கொண்டு மனமுடைந்த அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தில் ஏறி அதிலிருந்து கீழே குதிக்க முயற்சி செய்தார். அந்நேரம், முருகப்பெருமான் அவரைத் தாங்கிப் பிடித்தார்.

தம்மைக் காப்பாற்றியது யாரோ என அருணகிரி திகைப்புடன் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரி நாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார்.

அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் நீ செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார்.

கந்த வேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான்.

ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்தா என அருணகிரிநாதரைச் சொல்லலாம். இப்பாடலில் உள்ள கதைகளை அடுத்து பார்க்கலாம்….

திருப்புகழ் கதைகள்: அருணகிரிநாதர் சரித்திரம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply