சித்ரா பௌர்ணமியும் கருங்குளம் பெருமாளும்!

ஆன்மிக கட்டுரைகள்

karunkulam perumal
karunkulam perumal

சித்ரா பவுர்ணமி அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மதுரை சுற்று வட்டாரங்களில் எல்லோரும் அறிந்த ஒன்றுதான், ஆனால் மலையப்பன் மலையிலிருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார், ஆம். வருடத்தில் ஒரு நாள் அதுவும் சித்ரா பவுர்ணமி அன்று நெல்லை மாவட்டத்தில் பொருநை நதி கரையோரம் உள்ள அந்த வகுள கிரி ஷேத்திரத்தில்…..

வகுள கிரி – ஒரு விஷ்ணுஸ்தலம் :

பிரம்ம தத்தன் என்பவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். பெருமாள் பக்தரான அவர் தனது வயிற்று வலி தீர திருப்பதி ஏழுமலையானை வேண்டி, குடும்பத்துடன் திருமலை சென்றார். ஏழுமலையானை நெக்குருக வேண்டிய பொழுதும் அவருக்கு வயிற்று வலி தீரவில்லை. ஆனாலும், எனது வலி தீரும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என திருமலையிலேயே முடங்கிப் போனார் பிரம்ம தத்தன்.

மலை ஏறி வந்த களைப்பு; வயிற்று வலியையும் மறந்து உறங்கிப் போனார் பிரம்ம தத்தன். அப்போது அவரது கனவில் அந்தணர் வடிவமாக தோன்றிய ஸ்ரீநிவாச பெருமான், “இவ்விடத்தில் உமக்கு ரோகம் தீரும் மார்க்கம் இல்லை. எனவே நான் வசிக்கும் வகுளம் மலைக்கு வா. அங்கே எமக்குக் கோயில் கட்டி வழிபட்டால் உமக்கு வயிற்று ரோகம் தீர்ந்து விமோசனம் பெறுவாய்” என்று சொன்னார்.

எங்கிருக்கிறது வகுளகிரி?

வகுள கிரி எங்கிருக்கிறது? அதை நான் எப்படித் தெரிந்துகொள்வது? என பிரம்ம தத்தன் கேட்டார். அதற்கு, “திருமலை ஏழுமலையானுக்கு சந்தனத்தில் ஒரு தேர் செய். தேரைச் செய்து முடிக்கும் போது சந்தனக் கட்டைகளில் இரண்டு மிச்சமாகும். அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று பொருநை (தாமிரபரணி) நதியில் விடு. நதியின் போக்கில் செல்லும் சந்தனக் கட்டைகள் எந்த இடத்தில் கரை ஒதுங்குகின்ற இடம் எதுவோ அது தான் வகுள கிரி” என்று சொல்லி மறைந்தார்.

karungulam perumal2
karungulam perumal2

திசைகாட்டிய சந்தனக்கட்டைகள் :

ஸ்ரீ நிவாச பெருமான் சொன்னது போலவே, ஏழுமலையானுக்கு சந்தனக் கட்டையால் திருத்தேர் ஒன்றைச் செய்தார் பிரம்ம தத்தன். தேர் செய்து முடித்தபோது இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்க வியந்து போனார் தத்தன். அந்தக் கட்டைகளை எடுத்துக் கொண்டு நெல்லைச் சீமையில் ஓடும் பொருநை நதிக்கு ஓடினார். சந்தனக் கட்டைகளை பயபக்தியுடன் நதியில் மிதக்கவிட்டார். அவை நதியில் மிதந்து பயணிக்கத் தொடங்கின. அவை போன திசையில் தானும் பயணிக்கத் தொடங்கினார் பிரம்ம தத்தன்.

நதியின் போக்கில் மிதந்து வந்த சந்தனக் கட்டைகள் இரண்டும் சொல்லி வைத்தாற்போல் ஓரிடத்தில் நதியின் தெற்குக் கரையில் கரை ஒதுங்கின. அதுதான் பெருமாள் சொன்ன
வகுளகிரி என்பதை அடையாளம் தெரிந்து கொண்ட தத்தன், அந்த இடத்திற்கு அருகில் இருந்த மலை மீது வெங்கடாசலபதிக்குக் கோயில் ஒன்றை எழுப்பி, திருமலையிலிருந்து எடுத்து வந்திருந்த சந்தனக் கட்டைகளில் பெருமாளின் உருவத்தை செதுக்கி கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரைப் பீடித்திருந்த தீராத வயிற்று வலி மெல்லக் குணமாகத் தொடங்கியது.

நோய்தீர்ப்பவர்

பிரம்ம தத்தன் படைத்த இந்தத் திருத்தலத்தில் இப்போதும் மூலவர் சந்தனக்கட்டை திருமேனியாகவே காட்சி தருவது வேறு எங்குமில்லா சிறப்பு. பிரம்மதத்தனுக்கு தீராத வயிற்று வலியைப் போக்கிய திருத்தலம் என்பதால் இங்கு வந்து வழிபட்டால் தீராத வியாதிகள் எதுவாகினும் திருவேங்கடமுடையான் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமலைக்கு வேண்டுதல் வைத்து அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வேண்டிச் சென்றால் திருப்பதி திருமலைக்குச் சென்று வந்த பலனைப் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.

இங்கு மலை மீது உள்ள கோவிலின் கருவறையில் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி அலங்காரம் செய்யப்படுகிறது.

இங்கு ஆதிசேஷனே வகுளகிரி மலையாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும், பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.

இங்கு பெருமாளுக்கு நீராஞ்சனம் செய்து வழிபடுவது விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு கருடசேவை உற்சவத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மலையில் சுற்றி வருவது காண மிக அழகாக இருக்கும்.

வருடத்திற்கு ஒரு முறை சித்ரா பெளர்ணமி அன்று மட்டுமே பெருமாள் மலையில் இருந்து கிழே இறங்கி ஊருக்குள் வீதி வலம் வருவார்.

கருங்குளம் கிராமமும் சித்ரா பவுர்ணமியும் சுமார் 150 பிராமண குடும்பம்கள் கட்டுக்கோப்பாக வாழ்ந்த சிறு கிராமம் அன்று இங்கு பள்ளிக்கூடம் கூட இல்லை. இன்று 10 குடும்பம் மட்டுமே. எல்லோரும் வெளியூர், வெளி மாநிலம் வெளிநாடுகளில் வாசம்.

இவர்களில் எல்லாத்துறைகளிலும், வியாபாரத்திலும், IAS மற்றும் ஆன்மிகத்திலும் எங்கும் உயர் பதவியில் உள்ளனர். Central Vigilance Commission செகரட்டரியாக இருந்து ஓய்வுக்குப் பின் மேற்கு வங்க அரசின் மாநில விஜிலன்ஸ் கமிஷனராக இருந்த திரு கே. எஸ். ராமசுப்பன் அவர்களும் இதே ஊர்க்காரர்தான்.

வருடாவருடம் சித்ராபௌர்ணமி அன்று மட்டும், எல்லோரும் இங்கு வந்து ஒன்று கூடி கருடசேவை சிறப்பாக பிரமாதமாக கொண்டாடுவார்கள்.

ஸ்ரீ பாதம் இவர்களே தூக்குவர், தன் தகுதி, உத்தியோகம் போன்றவற்றில் உயர்ந்த நிலையில் இருந்தாலும் ஒரு அடிமட்ட ஊழியரின் என்ற பேதமில்லாமல் ஒருவரோடு ஒருவர் தோளோடு தோள் கொடுத்து கருடசேவை வீதியுலாவை பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். .

மூலவர் சந்தனத்திருமேனியாய் இருந்து அருள்பாலிக்கும் அபூர்வத் திருத்தலம் கருங்குளம்

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 15-வது கிலோமீட்டரில் இருக்கிறது கருங்குளம்.

இங்கே தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் மலைமேல் வீற்றிருந்து அருள்புரிகிறார் வெங்கடாசலபதி பெருமான்.

பாயசக்கட்டளை

திருமணத்தடை உள்ளவர்கள் தாமிரபரணியில் நீராடி ஒரு மண்டலம் விரதமிருந்து திருவோண நாளில் வெங்கடாஜலபதிக்கு பாயசக் கட்டளை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும். இத்திருத்தலத்தில் சித்ரா பெளர்ணமி நாளில் பிரம்மோற்சவ விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது தாமிரபரணியில் பெருமாளுக்கு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெறும். இதுதவிர, ஆடிப்பூரம், புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி பெருவிழா உள்ளிட்ட நாட்களிலும் வெங்கடாஜலபதி பெருமாள் திருவிழா நாயகராகக் காட்சி தருகிறார்.

இங்குள்ள உறங்காப் புளிய மரம் சிறப்பு பெற்றது ஆகும். இதில் உள்ள இலைகள் மாலை நேரமானாலும் மூடுவதில்லை. அது போல இந்த மரத்தில் பூ பூத்தாலும், காய் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம்.

இந்த கோவிலில் உள்ள தீர்த்தக் கிணற்றில் உள்ள தண்ணீரும் எந்த காலத்திலும் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் மலை அடிவாரத்தில் உள்ள மார்த்தாண்டேஸ்வரரை வழிபட்ட பின்னரே, வகுளகிரி மேல் உள்ள பெருமாளை வழிபட வேண்டும் என்பது விதிமுறை.

இங்கு தீராத நோய்கள் தீர நீராஞ்சனம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு பலன்களை தரும்.

என் அனுபவம் ஒரு தரம் திருநெல்வேலியிலிருந்து ஆத்தூருக்கு (என் சித்தப்பா வீட்டிற்கு) செல்லும் போது ஸ்ரீராம் பாப்புலர் பஸ்ஸின் ஓட்டுனர் பஸ்ஸை (திருநெல்வேலி ஆத்தூர் ரூட்டில் எல்லாருக்கும் ரொம்ப பரிச்சயமானவர். ஆத்தூர், முக்காணி, ஏரல், சிவகளை பகுதியில் உள்ள கொடிக்கால்களில் இருந்து வெற்றிலை பொட்டலங்களை இவர் வண்டியில் தான் லக்கேஜ் போட்டு ஏற்றி விடுவார்கள், ஏற்றிய பண்டல்களை நெல்லைக்கு லக்கேஜ் போட்டு கொண்டு வருவார் ஜங்ஷனிலும், பாளையங்கோட்டை மார்கெட் ஸ்டாப்பிலும் இறக்கி வைக்க ஆட்கள் தயார் நிலையில் இருப்பார்கள். அங்குள்ள விவசாயிகள் இவரை சாமி சாமி என்று அன்பாக அழைப்பார்கள்) வலப்புறமாக திருப்பி கோவில் பக்கத்தில் நிறுத்தி எல்லோரையும் கருடசேவை பார்க்க வைத்தார், பஸ்ல உள்ள பயணிகள் எவரும் எதிர்ப்பு கூறாமல் மவுனமாக வந்து தரிசனம் செய்து விட்டு பஸ்ல ஏறி அமர்ந்து கொண்டனர். அந்த காலம் ஆன்மீக எண்ணங்கள், ஆன்மீகமான வாழ்க்கை வாழ்ந்த காலம்.

  • கட்டுரை:: கே.ஜி.ராமலிங்கம்

சித்ரா பௌர்ணமியும் கருங்குளம் பெருமாளும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply