திருப்புகழ்க் கதைகள்: ராவணாசுர வதம்!

ஆன்மிக கட்டுரைகள்

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8de0ae95e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0aeb0e0aebe

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

திருப்புகழில் காணப்படும் கதைகள்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

இராவணாசுரவதம்

முத்தைத்தரு பத்தித் திருநகை திருப்புகழில் இடம் பெறும் பத்துத்தலை தத்தக் கணைதொடு என்ற வரியில் இராவாணாசுர வதம் இடம்பெறுகிறது.

ஒரு சமயம் அரக்கர் கொடுமை உலகில் அதிகரித்தது. அதனால் அமரர் அலறினர். நாவரண்டு உலகம் நடுங்கியது. இந்திரனும் பிரமனும் வைகுண்டம் சென்றனர். முகுந்தா அபயம் என முறையிட்டனர்.  உடனே திருமால் அயோத்தியில் இராமனாக அவதரித்தார். அரக்கர் பூண்டைக் கருவறுத்தார்.  இராவணனது தலைகள் பத்தையும் அறுத்துத் தள்ளiனார். உலகம் அதன் பின் உய்தி கண்டது. பத்துத் தகை தத்தக் கணை தொட்ட இது திரேதா யுக வரலாறு.

இந்த இராமாயணக் கதையை நான்கு அடிகளில் ‘ ஏகவிருத்த ராமாயணம் ’ என்ற தலைப்பில் சுருக்கித்தந்திருந்த பாடல் ஒன்றைத் தமிப்புலவர் சரித்திரம்’ என்ற நூலில் காணப்படுகிறது. இந்நூல் யாழப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரால் இயற்றப்பட்டது.

கம்பரைப் பற்றிச் சொல்லுமிடத்து இந்தப் பாடலை எடுத்தாளும் இவர் “ ஒரு சுலோகத்தில் வடநூலார் கூறிய இராமாயணத்தையும், ஏக விருத்த ராமாயணம் என மொழிபெயர்த்திருக்கிறோம்“ எனக் கூறுவதில் இருந்து, இவ்விருத்தம் இவரது மொழியாக்கமாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

பாடல் இதுதான்,

தாதையார் சொலராமன் காடு போதல்
    சார்ந்துளபொன் மானெனுமா ரீசன் சாதல்
சீதையார் பிரிவெருவை மரணம் பானு
    சேயொடுநட் புக்கோடல் வாலி வீடல்
ஓதநீர்க் கடற்பரப்பை அநுமன் தாண்டல்
    உயரிலங்கை நகரெரியால் வேகக் காண்டல்
பாதகராம் அரக்கரெலாம் இறக்கத் தாக்கல்
    பாக்கிய ராமாயணச்சீர் காதை யீதே!

பாடலில் பொருள் எளிதுதான் என்பதால் இங்கே பாடல்மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.இராவணன் தலையைஇராமபிரான் எப்படிக்கொய்தார் என்பதைகம்பன், யுத்தகாண்டத்தில்

மேருவின் கொடுமுடி, வீசு கால் எறி
போரிடை, ஒடிந்து போய், புணரி புக்கென
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை
நீரிடை விழுந்தது, நெருப்பொடு அன்று போய்.

என்று பாடுவார். அதாவது, ‘வீசுகின்ற தன்மையனான காற்றுக் கடவுளோடு   நிகழ்ந்த (ஆதிசேடனின்) போரில்மேரு மலையின் சிகரம் முறிந்து போய் கடலில் புகுந்தது போல்இராமபிரானுடைய அம்பு தாக்கியதன் விளைவாக இராவணனது வலிய தலை அந்நாளில் தீயோடு சென்று கடல் நீரில் போய் விழுந்தது’ என்பது இப்பாடலின் பொருளாகும்.

திருப்புகழ்க் கதைகள்: ராவணாசுர வதம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply