திருப்புகழ் கதைகள்: ‘அருக்கு மங்கையர்’!

ஆன்மிக கட்டுரைகள்

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0ae85e0aeb0e0af81

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

திருப்புகழ் கதைகள் பகுதி 17
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பாடல் 7 – திருப்பங்குன்றம் தலத்து ‘அருக்கு மங்கையர்’
எனத் தொடங்கும் பாடல்

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன …… தனதான

(அருக்கு மங்கையர் எனத் தொடங்குவதில்… ஐந்தாம் பத்தியில் இருந்து…)

இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
     உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
     இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில்வேளென்

றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
     விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
     இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை …… புனைவோனே

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
     நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
     திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய …… குருநாதர்

திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
     குருக்க ளின்திற மெனவரு பெரியவ
     திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண …… பெருமாளே.

இத்திருப்புகழின் முதல் நான்கு பத்திகளில் சிற்றின்பச் சுவை சற்றே அதிகம். அடுத்து, (1) இருக்கு வேதமுதன் மொழியை முனிவர்களுக்கு உபதேசித்த கதை (2) முருகன் இலக்கணம் சொன்ன கதை (3) சிதம்பர நடன வரலாறு (4) மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த கதை என உள்ளன. இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

இருக்கு வேத முதன் மொழியை முனிவர்களுக்கு உபதேசித்த கதை

இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற
     உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
     இதத்த இங்கிதம் இலகிய அறுமுக …… எழில் வேளென்

பொருள் – இருக்கு வேதத்தில் முதன்மொழியாம் தனி மந்திரத்தின் பொருளை அகத்தியர் முதலிய ஏழு முனிவர்களுக்கும் உபதேசித் தருளிய மகிழ்ச்சியை உடையவரே, சரவணப் பொய்கையில் தோன்றினவரே, குக மூர்த்தியே, இனிமையை உடையவரே, இன்பம் விளங்குகின்ற ஆறுமுகங்களை உடையவரே

விளக்கம் – இருக்கு வேதத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்படுவது குடிலையே. குடிலை என்றால் குண்டலினி சக்தி. மகாகவி பாரதியார் சொன்னது போலே “வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்

இந்த மூச்சுப் பயிற்சியே குண்டலினி. அப்போது எழும் நாதம் ஓம் எனும் நாதம். மோட்ச நிலையடைந்து உய்ய விரும்பும் தேவதைகளும், ஞானிகளும் சாதனை செய்வதற்கு நற்கருவியாய் நிற்பது இந்த ஓங்காரப் பிரணவமே ஆகும் எனப்படும்.

எல்லா மந்திரங்களிலும் சிறந்தது இந்தப் பிரணவமே. இந்த ஓங்காரம் இல்லையாயின் தேவாதி மந்திரங்கள் இயக்கமின்றி சடமாகின்றன. அனைத்து வேதங்களுக்கும் இதிகாச புராணங்களுக்கும் மூலாதாரமாக முதன்மையாய் நின்று ஒலிப்பது இந்த ஓம் எனும் பிரணவ மந்திரமே யாகும்.

இனி ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் சிறப்பை அடுத்த பகுதியில் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: ‘அருக்கு மங்கையர்’! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply