திருப்புகழ் கதைகள்: சிதம்பர நடன வரலாறு!

ஆன்மிக கட்டுரைகள்

thirupugazhkathaikal 1
thirupugazhkathaikal 1

திருப்புகழ் கதைகள் பகுதி 20
திருப்பங்குன்றம்தலத்து‘அருக்கு மங்கையர்’பாடல்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சிதம்பர நடன வரலாறு

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
     நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
     திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய …… குருநாதர்

களிப்பை விளைக்கின்ற சிற்றம்பலமாகிய தகராகாயத்தின்கண் சகல உயிர்களும் அசையுந் தன்மையை அடையுமாறு திருநடனம் புரிகின்றவரும், சுகத்தைக் கொடுப்பவரும், பரம்பரையாக அடிமைத்திறம் பூண்ட அடியவராம் மாணிக்கவாசகர் திருக்குருந்த மரத்தினடியில் நல்லருள் பெற அனுக்கிரகம் புரிந்த குருநாதருமாகிய சிவபெருமானது தெய்வீகக் குழந்தையாகவும் அப்பெருமான் வழிபாடு புரிய குருமூர்த்தியாகவும் வருகின்ற பெருந்தகையே.

அம்பல மிசைதனில் அசைவுற நடித்த —புறத்தே தில்லையம்பலத்திலும், அகத்தே இதய கமலத்திலும் இறைவன் ஓவாது பஞ்சகிருத்திய ஆனந்தத் திருநடனம் புரிகின்றான். இறைவன் அருட்கூத்தில் ஐந்தொழிலும் நிகழுமாறு காண்க.

அரன்துடி தோற்றம், அமைத்தல் திதியாம்,
அரன்அங்கி தன்னில் அறையில் சங்காரம்,
அரன்உற்ப அணைப்பில் அமருந் திரோதாயி,
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.         — திருமந்திரம்.

தோற்றம் துடிஅதனில், தோயும் திதிஅமைப்பில்,
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம், —ஊற்றமா
ஊன்றும் மலர்ப்பதத்தில் உற்றற திரோதம், முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.               — உண்மை விளக்கம்.

உடம்பிற்கு எப்படி இதயதாமரை நடுவோ, அப்படியே உலகிற்கு நடு சிதம்பரம். ஆதலால் சிதம்பரம் அண்ட தகராகாசமாம். இதயதாமரை பிண்ட தகராகாசமாம். அண்டத்தும் பிண்டத்தும் அந் நடேசபிரான் உலகம் இயங்குதற் பொருட்டு ஒழியாது அசைதலே அவனது அருட்கூத்தாகும்.

சிதம்பர நடன வரலாறு– தவமே தனமாகக் கொண்ட மத்தயந்தன முனிவர் என்பார் ஒருவர் இருந்தார். அவருக்கு அருமையான மகன்ஒருவர் தோன்றினார். அப்புதல்வர் கலைகள் முழுவதும் கற்றுணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்று, சிறந்தஓர் இடம்சென்று சிவபெருமானை வழிபட வேண்டுமென்று விரும்பினார்.

புதல்வரது விதிவழியினைஉணர்ந்ததந்தை,  ஈசனை வழிபடுவதற்குச் சிறந்த இடம் தில்லைவனமே என்று எடுத்துரைத்தார். அத்திருமகனார்தந்தை பால் விடைபெற்று தில்லைவனத்தை அடைந்து, ஒர் அழகிய பொய்கையும், அதன் தென்புறத்தில் ஓர் ஆலமரத்தின் நிழலில் ஒரு சிவலிங்கமும் இருக்கக்கண்டு அகம்மிக மகிழ்ந்து, அங்கு ஓர் பர்ணசாலை அமைத்து, அரனாரை வழிபட்டு வந்தனர்.

chidambaramnataraj
chidambaramnataraj

நாள் தோறும் ஈசனை அருச்சிப்பதற்குப் பறிக்கும் நறுமலர்களை ஒரு நாள் ஆராய்ந்து பார்க்கையில், அவற்றுள் பழையனவும் பழுதுபட்டனவுமான பல மலர்கள் கலந்திருக்கக் கண்டு வருந்தி, “கதிரவன் உதித்த பின் மலர் எடுக்கில் வண்டுகள் வந்து அம் மலர்களை எச்சில் புரிந்து விடுகின்றன; பொழுது புலராமுன் சென்று மலர் பறிப்போமாயின் மரம் அடர்ந்த இக்கானகத்தில் வழியறிதல் முடியாது. மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்கும்; ஆதலால் இதற்கு என் செய்வது?” என மனங்கவன்று இறைவனைத் துதித்தார்.

உடனே சிவபெருமான் அந்த இளைய முனிவரெதிரே தோன்ற, முனிமகனார் அரனாரை வணங்கி, “பாம்பினை ஆபரணமாக அணித்தவரே, உம்மைவழிபடுதற் பொருட்டு அடியேன் வைகறை எழுந்து சென்று, மலர் பறிக்க, மரங்களில் வழுக்காமல் ஏறுவதற்கு, என் கை கால்களில் வலிய புலி நகங்கள் உண்டாக வேண்டும். வழி தெரிந்து செல்வதற்கும் பழுதற்ற பனிமலரைப் பறிப்பதற்கும் நகங்கள் தோன்றும் கண்களும் உண்டாக வேண்டும்” என்று வரங் கேட்டனர்.

வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் அருளும் விடையூர்தி அவ்வரத்தை நல்கி மறைந்தருளினர். அன்று முதல் அம்முனிச் சிறுவர்க்கு வியாக்ரபாதர் என்று வடமொழியிலும், புலிக்கால் முனிவர் என்று தமிழிலும் பெயர்களுண்டாயின. பின்னர் அவர் தாம் விழைந்தவாறு புதுமலர் கொணர்ந்து புர மெரித்த புராதனனை ஆராதனை புரிந்து மகிழ்ந்திருந்தனர். புலிக்கால் முனிவர் வழிபட்டதனால் தில்லைமாநகர் புலியூர் என்னும் பெயரும் உடைத்தாயிற்று.

வியாக்ரபாதர் இங்ஙனமிருக்க இவர் தந்தையார் மந்தியந்தன முனிவர் இவர்பால் வந்து, இவருக்குத் திருமண முடிக்க வேண்டுமென்னும் தமது கருத்தைத் தெரிவிக்க, புதல்வரும் இசைய, வசிட்ட முனிவரது தங்கையாரை மணம்பேசி புலிப்பாதருக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினர்.

அன்னார் செய்த அருந்தவப் பலனாய் உபமன்யு என்னும் அருமந்த புத்திரன் தோன்றினன். அக்குழவியை அருந்ததி தமது இருக்கைக்குக் கொண்டுபோய் காமதேனுவின் பால் தந்து வளர்த்தனள். பின்னர் மகவின் விருப்பத்தால் தாய் தந்தையர் மகனைத் தமது இருப்பிடங் கொண்டு வந்தனர். அம்மகவு பாலுக்கு அழ, மாவு கரைத்த நீரைக் கொடுத்தனள்.

அம்மகவு அதனை உண்ணாது கதறியழ, தாய் தந்தையர் வருந்தி சிவ சந்நிதியில் பிள்ளையைக் கிடத்தினர். அக்குழந்தை சிவலிங்கப் பெருமான்பால் பால் வேண்டி அழ, அடியவர்க்கு அருளும் அண்ணல், அருள் சுரந்து, இனிய பாற்கடலையே உணவாக, பால் நினைந்து அழும் போதெல்லாம் நல்கினர்.

வியாக்ரபாதர் கதை அடுத்த பகுதியில் தொடரும்

திருப்புகழ் கதைகள்: சிதம்பர நடன வரலாறு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply